வியாழன், 29 மே, 2014

பிள்ளைமுகம்

ஏதேனும் ஒன்று
வம்புக்கு இழுக்க
மூணாவதாய் பெறந்ததும்
பொட்டக்கட்டையா...
வம்சமே அப்படி...
பாவம் அவன்
என்ன வரம் வாங்கினானோ
அவனுக்கு இவளால
இப்படியாகுது...

இன்னும் எத்தனையோ
சொல்லில் அடங்கா
மாமியின் சீண்டல்
நாத்தியின் கிண்டல்
கணவனின் ஏச்சு
சுற்றம் சொல்லும் குற்றம்
கூட்டும் சுமை
கணக்கிடும் மனசு

எல்லாவற்றையும்
நொடிகளில்
மறக்கச் செய்யும்
பாலுண்டு
முலைக்கனமிறக்கி
சிரிக்கும்
அப்பழுக்கில்லா
பிள்ளை முகம்

புதன், 28 மே, 2014

பூனை மனம்

பிராணிகளில்
மிகவும் பிடித்த்து
பூனை.

பூனை குறித்து
இகழ்ச்சி கூறின்
தீப்பந்தம் ஏந்தும் மனசு.

அம்மா எப்போதும்
சொல்கிறாள்
சப்தமாய் சிரிக்காதே
அதிர்ந்து நடக்காதே
உரக்கப் பேசாதே
இன்னும் இன்னும் நிறைய

எப்படிச் சொல்ல
பூக்கட்டும் இலாவகத்தைவிட
எளிதானது
போருக்கு தலைமை ஏற்பதென

பூனை
ரொம்பவும் பிடிக்கும்
மென்மை கருதி மட்டுமன்று
அதனுளிருக்கும்

வன்மம் வேண்டியும்.

புரிதல்


எப்படி…எப்படி
புரிய வைக்க…
ஒவ்வொரு பொழுதும்
ஆச்சுதா…? இன்னுமா..? எனும்
புருஷனின் புத்திக்கு
குழந்தைக்கு பாலூட்டி
வீடு கூட்டி
எல்லாம் சரிசெய்து
தாழிட்டுக் கிளம்பும்
நான்…
பெண்ணென்று.

செவ்வாய், 27 மே, 2014

கஷ்டம்

காய் அரியும் வேளை
விரலும் சேர்ந்து அரிகையில்
தடித்து வரும்
கணவன் குரல்
பார்த்து செய்யக் கூடாது...

எதை.... எப்போ....?
கேட்க நினைத்தும்
வார்த்தை
விழுங்கும் மனசு.

எப்படிச் சொல்ல
ஒவ்வொரு
அரிதல் காயத்தின்
பின்னும் இருக்கிறது
கஷ்ட நினைவுகள்
வாய்த்தது தொடங்கி
வலிந்து
புணர்தல் வரை...

மௌனத்தின் நாவுகள்

இருக்கலாம்
வேர்களின்மரங்களின் பேச்சு வலி
குறித்து.

செடிகளும் கொடிகளும்
சல்லாபிக்குமோ?
தண்டும் தண்ணீரும்
பற்றி.

பூவுக்கும் வண்டுக்கும்
மொழி
சங்கீதமாய்
தொடர

பாழும்
மனிதர்களுக்கிடையே மட்டும்
நீளும்
மௌனத்தின் நாவுகள்

திங்கள், 26 மே, 2014

கட்சி தாவல்-சென்ரியூ

அதிகப் பசி
அதைவிட அதிகம்
உணவின் விலை.

கண்ணாமூச்சு ஆட்டம்
வெற்றி பெறுபவர்களுக்கு
மந்திரி நாற்காலி.

மாற்றம்
மனித தத்துவம்
கட்சி தாவல்.

புதன், 21 மே, 2014

மகா நடிகன்

பேசு
பேசிக்கொண்டிரு
உமது பேச்சு
மகத்துவம் மிக்கதாய்
இருக்கும்படி பேசு

முத்தமிடு
முத்தமிடுகையில்
உதடுகளில் எதுவும்
ஒட்டாதபடிக்கு
முத்தமிடு

கட்டித்தழுவு
தழுவும் போதே
தள்ளும் செயலும்
அரங்கேற்றம் காணட்டும்
அரங்கேற்றம் மட்டும்
கண்கள் அறியாவண்ணம்
கட்டித்தழுவு

கண்ணீர் விடு
ஆன்மா உருக
குரல் நடுங்க
பதறி துடிப்பதாய் 
நினைக்கும்படி
கண்ணீர் விடு

எல்லாம் என்னிடம்
இருந்தும் நீதான்
நானெனச் சொல்
உன்னைவிட உன்னைவிட
உலகத்தில் உசந்தது
பாட்டும் பாடு
நீயே நான் என்பதில்
அவனை அழி
நான் நீயென
பார்க்கப் பழக்கு

நடிகனாவாய்
இல்லை
நம்தேசத்தில்
ஆள்பவனாவாய்
மகாநடிகன்
மாமன்னன்.

பேசிக்கொண்டிரு...

ரசிக்கப் பேசு
மயக்கப் பேசு
மயங்கப் பேசு
உரக்கப் பேசு
பேச்சின் பொருள்
விளங்காதிருக்கும் வண்ணம்
பேசு பேசு பேசிக்கொண்டிரு.

கண்ணால் பேசு
உடலால் பேசு
மொழிகொண்டு பேசு
மௌனத்தில் பேசு
ஆயுதம் பேசும்
காலம் வரையில்
வார்த்தை ஜாலம்
அவசியத் தேவையாகும்
பேசு பேசு பேசிக்கொண்டிரு.


செவ்வாய், 20 மே, 2014

சிவப்பாய் ஒரு பூ

மரங்கள் இலைகள் உதிர்ந்து
இளம் தளிர்கள்
துளிர்க்க தொடங்கி விட்டது.

எல்லாரும்
பேசிக்கொள்கிறார்கள்
இனி
பூக்கும் காய்க்குமென்று.

ஊரார் பேச்சினை
கேட்கும்போதெல்லாம்
தூர தேசம் வந்துவிட்ட
என்னுள்
தோன்றி மறைகிறாள்
நகுமலர்
இனவெறி தாக்குதலில்
மாண்டுபோன
என் மகள்.

அவள் ஆசையாய்
வளர்த்த
மரத்தடியில்
நீருற்றும் வேளை
ரத்தம் ஊற்றி
மாண்டுபோனாள்.

என் வீட்டுவாசலில்
இந்நேரம்
இலைகள் உதிர்த்து
துளர்விட்டு
பூக்குமா

என்மகள்
ஆசையாய் வாசலில்
வளர்த்த
சங்குப்பூ மரம்
அவள் ரத்தம் குடித்த
நன்றிக்கு
சிவப்பாய் ஒரு
பூ

அரசியல் நாடகம் - சென்ரியூ

ராஜினாமா அறிக்கை
படித்து முடிக்கும் முன்
மீண்டும் பதவியேற்பு

அப்பா பிள்ளை
உறவு முடிவு
அரசியல்