செவ்வாய், 29 ஏப்ரல், 2014

எனது ராஜ்ஜியத்தில்

உமது வசிப்பு
எனக்கான ராஜ்ஜியத்தில்
உமது வசிப்பு
எவ்வளவு
சுதந்திரமாகவும் இருக்கலாம்
எனக்கான ராஜ்ஜியத்தில்

உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறும் வரை
செயற்படுத்தும் வரை
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்

உன் கண்களால்
என்னை மட்டும் பார்
உன் செவிகளால்
என் புகழை மட்டும் கேள்
என் குரல்கொண்டு
என் பெருமை மட்டும் பாடு-பேசு

உனது இருப்பு
மிகவும் மிகவும்
சுதந்திர மானதாய் இருக்கும்


உன் கண்கள் காண்பது
என் புறத்தை என்றால்
குருடாக்கப்படும்

செவிகள் கேட்பது
எமக்கெதிரானதெனில்
செவிடாக்கப்படும்

உமது குரல்
எம்மை எதிர்ப்பதெனில்
குரல் வளை
நசுக்கப்படுவாய்

எம்மை எதிர்த்தப்பயணம்
செய்தால்
முடக்கி வைக்கப்படுவாய்

வெளிச்ச ரேகைகள்
அற்ற
இருள் உலகில்
வாழ வேண்டி வரும்

உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறட்டும்
செயற்படுத்தட்டும்

அதுவே
உமக்கும் நல்லது
எமக்கும் நல்லது
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்

எமக்காக மட்டும்
நீ வாழும் வரையில்
சுதந்திரமானது
உன் இருப்பு
எனது ராஜ்ஜியத்தில்.

 -மோ(ச)டி கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான ஷப்பனம் ஹாஸ்மி -க்கு இது




ஒரு வயசு

அது அதுக்கு
வேணும் ஒரு வயசு

துள்ளி குதிக்க
ஆர்பரிக்க
அமா்க்களம் செய்ய
ஓடி ஆட
ஒரு வயசு

படிக்க
பிடிக்க
நடிக்கத்தேவை
வேறொரு வயசு

காதல் செய்ய
கல்யாணம் பண்ண
கூடிக் களிக்க
குழந்தை கொஞ்ச
கொஞ்சம் கூட வேணும் வயசு

முன்பே கிடைக்கும் சிலருக்கு
கிடைத்தாலும்
என்னமா ஆட்டம்
ஏற்புடையதாகாது

வயசுக்கு முன்னோ
வயசுக்கு பின்னோ
நடப்பது ஏற்பன்று

காதல்
இருபதில் சொன்னால்
நகைப்பு
அறுபதில் சொன்னால்
வியப்பு.

இருந்தும் சொல்வர்
அது அதுக்கு வேணும்
ஒரு வயசு.

எண்ணம் தவிர

இது/அது
யாருடையது
என்னுடையது
இல்லை
என்னுடையதாய் இருக்கலாம்
இல்லை
அவருடையது
இல்லை
அவருடையதாய் இருக்கலாம்.

இல்லை இல்லை
என்னுடையதும்
அவருடையதுமாய்
இருக்கலாம்
இல்லை
அவருடையதும்
என்னுடை்யதுமாய்
இருக்கலாம்.

எதுவுமில்லை
யாருடையதுமில்லை
அவரவருடையதாய்
என்னும்
எண்ணம் தவிர.

திங்கள், 28 ஏப்ரல், 2014

ஹைக்கூ

உயிரோடு இருப்பதாய்
ஏமாறும் பறவைகள்
காவல் பொம்மை

அறுவடைக்குப்பின்னும்
கம்பீரம் குறையாமல்
காவல் பொம்மை.

காத்ததற்கு ஏதுமில்லை
கைவிரித்துக்காட்டும்
காவல் பொம்மை.

பயம் காட்டிச்சிரிக்கிறது
பறவைகளை
காவல் பொம்மை.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

ஹைக்கூ

ஜனநாயக ராஜாகள்
வாக்களிப்புக்குப் பின்
அகதிகள்.

கோடை தணிக்கும்
ஏழைகள்
கேழ்வரகு கூழ்.

பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

யானைகள் சுருங்க...

மன்னனை
மாலையிட்டு
தேர்வு செய்தும்
முன்னின்று படைசென்று
காவல் காத்ததும் யானை

கந்தனின் காதலை
கணேசனே உருவெடுத்து
சேர்த்து வைத்ததும் யானை

கோவில்கள் தோறும்
பக்தர்கட்கு ஆசிகூறி
வாழ்த்துகள் சொன்னதும் யானை

தன் நெற்றியில்
நாமமா பட்டையா?
மனிதர்கள் மோதிட பார்த்த யானை

வீதிகளில்
பாகன்களின் பசிபோக்க
பிச்சையெடுத்ததும் யானை

பலப்பலவாய்
பரிமளித்தயானை
ஊருக்குள் வந்திடுச்சி

பயிர் பச்சை காண
பட்டாசு வேட்டுகளில்
பாழ்படும் யானை

மனிதர்களின்றி
மிருகங்கள் வாழ்ந்த காலம்
மிருகங்களின் பொன்னுலகம்

மனிதர்கள் பெருக
மிருகங்கள் குறைய
மனிதரின் சுய உலகம்

யானைகள் சுருங்க
பாகன்கள் பெருக்கும்
காலம்.




செவ்வாய், 22 ஏப்ரல், 2014

வேட்பாளரின் வேண்டுகோள்...

அன்பின் வாக்காளர்களே
உங்கள் வேட்பாளன்
வேண்டுகோள்...

வாக்களியுங்கள்
வாக்களிப்பது உங்கள் கடமை
ஆட்சி செய்வது எனது லட்சியம்
வாக்களியுங்கள்.

உங்களின் தேவை
எல்லாம் அறிவேன்
வாக்களியுங்கள்...

குழந்தைகள் படிப்பு
படித்தோர்க்கு வேலை
கை நிறைய வருவாய்

குடிக்கத் தண்ணீர்
(உலகத் தேவை இது)
நல்ல மருத்துவம்
வாகனப் போக்குவரத்துக்கு
சிறந்த சாலை

சக்திக்கேற்ற வேலை
தேவைக்கேற்ற வசதி

இப்படி இப்படி
இன்னும் பல
எல்லாம் அறிவேன்

வாக்களியுங்கள்
தேவைகள் நிறைவேற்ற
வாக்களியுங்கள்

வாக்களிப்பது உங்கள் கடமை
ஆட்சி செய்வது எனது லட்சியம்

எல்லாத் தேவையும்
எல்லார் தேவையும்
எப்படி நிறைவேற்ற முடியும்
என்று எண்ணமா...

எல்லார் தேவையும்
இல்லை என்றாலும்
சிலரின் தேவைகள்
நிறைவேற்றுவேன்
வாக்களியுங்கள்

சிலரின் தேவையும்
முடியாது போனால்
எனதுகுடும்பத்தார் தேவை
அதுவுமில்லை என்றால்
எனது தேவை
நிறைவேற்றிக்கொள்வேன்
வாக்களியுங்கள்

வாக்களிப்பது
உங்கள் கடமை
ஆட்சி செய்வது
எனது லட்சியம்
வாக்களியுங்கள்....

திங்கள், 7 ஏப்ரல், 2014

வீட்டிற்குள்…



அரிதாய்
வீட்டிற்குள் இருக்கிறேன்
வீட்டிற்குள்ளிருக்கும்
எம்மிடம்

எப்பொழுதும்
வீட்டிற்குள்ளேயே
அடைப்பட்டிருக்கும்
எங்கள் நிலை
கொஞ்சமாச்சும் நினைப்பிங்களா?
ஆதங்கமாய் கேட்கும்
இல்லாளிடம்

உனக்கென்ன
எவ்வளவு பத்திரமாய்
சகலமும் அருகிருக்க
என்னைச்சொல்

அலைந்து திரிந்து
போதும் போதும் என்றாகிறது
சொல்லிக்கொண்டாலும்

வெறும் ஆளாய்
வீட்டிற்குள்

மனம் முழுதும் வெளியில் வலம் வர…

திங்கள், 24 பிப்ரவரி, 2014

மனசெங்கும் அலையும் கவிதைகள்-தோழர். கி.மூர்த்தி நூல் மதிப்புரை

மனசெங்கும் அலையும் கவிதைகள்

கவிஞன் தான் அனுபவித்த உணர்வுகளை சொற்களால் காட்சிப்படுத்தி கவிதையைப் படிக்கும் வாசகனையும் உணரச்செய்கிறான் என்பதே கவிதை குறித்த என் அபிப்பிராயமாகும். சமுகத்தின் இன்பம் மற்றும் பயன்பாட்டிற்காக வாழ்வில் தான் சந்தித்த உணர்வுகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்துவதை கவிஞர்கள் தங்கள் நோக்கமாக கொள்கின்றனர். இதன் அடிப்படையில் மகிழ்ச்சி, கோபம், துன்பம், ஏக்கம், போன்ற தனி மனித உணர்வுகள் கவிதைகளில் காட்சிப் படுத்தப்படுகின்றன. பயன்பாட்டில் இல்லாத சொற்களையும் மிதமிஞ்சிய அலங்கார வார்த்தைகளையும் வெறுமனே அடுக்கி பிரச்சாரம் மேற்கொள்ளும் கவிதைகளை விட யதார்த்தத்தில் எளிமையாக கிடைக்கும் நிகழ்வுகளையும் சொற்களையும் உடுத்திவரும் கவிதைகள் அதிக அளவில்  வாசகனைச் சென்றடைகின்றன. கலை கலைக்காகவே படைக்கப்பட்டாலும் அன்றாட அறிவியல் உண்மைகளுடன் நெருக்கமாக உறவாடினால் படைப்புகள் வாசகனால் மீண்டும் மீண்டும் பரிசீலிக்கப்படுகின்றன.

வேலைக்குப் போவதற்காக அன்று வழக்கம்போல காலையில்  சன்னலோர பயணக் கனவுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். திருவண்ணாமலை செல்லும் அரசுப்பேருந்தில், முகப்பு கண்ணாடிக்கு பின்புறத்தில் தோழர் க.ராமஜெயம் வழக்கம் போலவே உட்கார்ந்தபடி வந்தார். திரவியம் தேடும் ஓராண்டு கால தொடர் பயணத்தில், அபூர்வமாக அவருக்கு அருகில் உட்காரும் வாய்ப்புக் கிட்டியது.

வெற்றிகரமாக என்னுடைய முதலாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்துவிட்டதுஎன்ற புத்தாண்டு செய்தியைச் சொன்ன  தோழர் பிறிதொரு பொழுதில் என்று பெயரிடப்பட்ட அந்த கவிதைத் தொகுப்பை என் கையில் திணித்தார். அட்டைப்படம் அழகாக இருந்தது.

இலக்க்கிய ஆர்வலர், நண்பர், கவிதைகளின் காதலர் முதலிய காரணங்களைத் தாண்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு  நீந்தக் கிடைத்த கவிதைநதி என்பதால் உடனடியாக குதூகலத்துடன் நதியில் இறங்கிவிட்டேன். நவீனம் என்ற ஆரவாராம் ஏதுமின்றி எளிய மக்கள் மொழியில் நதி நகர்ந்து கொண்டிருந்தது.

காதல்வாழ்வில் எஞ்சிய இளம்பிராயத்து ஈரஞாபகங்கள்,  பெருமூச்சுகள், கோபங்கள், தினசரி கடந்து போகும் யதார்த்த நினைவுகள் என்பதான இன்னபிறவெல்லாம் என்னோடு நதியில் நீராடின. வெய்யிலைத் தவிர வேலூரில் எல்லாமே வறட்சி என்ற காரணத்தால் முக்கால் மணிநேரம் போவது தெரியாமல் ஒரே மூச்சாக நீந்திமுடித்து பெருமிதத்துடன் நிமிர்ந்தேன்.   

நீந்துகின்ற வாசகனின் முகம் பார்த்தபடி நதிக்கரையில் அமர்ந்திருந்த தோழர், கவிதைகள் குறித்த உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் தோழர்“ என்ற சொற்களை உதிர்த்துவிட்டு இறங்குமிடம் வந்ததால்  விடைபெற்று இறங்கிப் போனார்.

வாசிப்பை மறந்து போன மந்தையில் ஒருவனாகியுள்ள எனக்கு வேலை,பயணம், தூக்கமென்ற சராசரியான தினசரி நிகழ்வுகளுக்கு நடுவில் விமர்சனம் எழுத நேரம் எப்படி கிடைக்கும்? அடடா! பேருந்திலேயே தோழருடைய கைகளைப் பற்றி தொகுப்பு அருமைஎன்று விமர்சனத்தை எளிமையாக முடித்திருக்கலாமோ என்ற நினைப்பு வந்து போனது.  

பிறிதொரு பொழுதில் தொகுப்பை முன்னும் பின்னுமாக மீண்டும் ஒருமுறை திருப்பிப் பார்த்தேன். வாசித்து முடித்த கவிஞனின் மன உலகத்தில் உடனடியாக என் நினைவில் பளிச்சிடும் வரிகளை சுட்டிக்காட்டலாம் எனத் தோன்றியது.  

                           ''ஆள்தேடி
           முகம் பார்த்து
           தலை சொரிந்து
           பல் இளித்து
           வளைந்து நெளிந்து
           குழைந்தே காரியம் நடக்க
           அப்புறம் என்ன மயித்துக்கு
           சட்டம் சடங்கு

என்ற உண்மையின் பதிவு சட்டென கண் முன்னே வந்து நின்று கேள்வி  கேட்டது.

நிலங்கள் வெவ்வேறு என்றாலும் வானம் பொதுதானே!  சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களும் கேட்க நினைத்து மறந்த கேள்வியை கவிஞர் கேட்டிருக்கிறார்..  விடை கிடைக்குமா கிடைக்காதா என்ற வாசகனின் தேடலில் தம்மளவிலாவது உண்மையானவனாக இருக்க வேண்டுமென்ற சிந்தனையை இக்கேள்வி அவனுக்குள் விதைத்து விடுகிறது என்பதை மறுக்க இயலாது.

இளம்பிராயத்து காதலியை ஒரு மழை நாளில் சந்திக்க் நேர்ந்து , அழுகாச்சி முகத்தை துடைத்துக் கொண்டு, அவ்வப்போது வெறுமனே அசை போட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போல எத்தனையோ நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன்.

மழை நனைத்த முகத்தை
துடைத்துக் கொண்டோம்
கண்ணீரையும் சேர்த்து


என்று எழுதி இவர் நினைவூட்டுகிறார். மீண்டு வரும் காதலியின் முகம் உடலையும் மனசையும் சிலிர்க்க வைக்கிறது. இதுதானே கவிதை தரும் யதார்த்தம்!.

அதே மழைதினத்தில் காதலியிடம் மேற்கொண்ட  உரையாடலின் சுருக்கம் கவிஞரின் கவிதைத் தொகுப்பிற்கு தலைப்பாகியும் உள்ளது.

      சந்திப்புகளின் உச்சத்தில்
      ஒருவருக்கொருவர்
      என்றானோம்
      நீ
      ஒருவருக்கு
      நான்
      ஒருவருக்கு
      என்றான பிறிதான பொழுதில்
      சந்தித்துக் கொண்டோம்
      ஒன்றுமில்லாமல்...

கழுத்தை நெறிக்கும் இம்முடிச்சுடன்தான் நமது காலை விடிகிறது என்பதை நாம் மறுக்க முடியுமா? நெகிழ்ச்சியளிக்கும் காதலை ஆழ்மனதில் புதைத்துக் கொண்டு மகிழ்ச்சியளிக்கும் மனைவியிடம்,

             எப்படி சொல்ல
             அவளிடம்
             உன்னை காலங் காலமாய்
             சமையலறையிலேயே
             வைத்திருக்கிறேன்
என்றுஆதங்கப்படும் கவிஞரின் மனதில் நீதிமிக்க மனித சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது.


               எல்லாம் கேடு
               என்ற போதும்
               அரசாங்கம் விற்றால்
               நல்ல சரக்கு
               அடுத்தவன் விற்றால்
               கள்ளச் சரக்கு

என்ற சுட்டிக்காட்டலில் உளியைப் பிடிக்கின்ற கை தெரிகிறது.

                                        ”யாருக்காகவும் இல்லை
                என்றாலும்
                நட்டுவை தோட்டத்தில்
                பூச்செடிகள்
                வந்து போகும்
                வண்ணத்துப் பூச்சிகள் 
என்று இவர் எழுதியிருக்கும் வரிகளில் இயற்கை அளிக்கும் புலன் இன்பம் இலவசமாக கிடைக்கிறது.

பேருந்தை விட்டு இறங்க வேண்டிய கட்டாயம் வந்தபோதும் தொகுப்பிலுள்ள கவிதைகள் ஒன்றன் பின் ஒன்றாக என் நினைவுப் பரப்பில் அரும்பிய வண்ணமிருக்கின்றன.
அந்நியப்படாத் எளிய மொழியுடன் வாசகனின் மனதெங்கும் அலைந்து திரியும் கவிதைகளை தொகுப்பு முழுவதும் க.ராம்ஜெயம் படைத்துள்ளார் என்பதை அவரிடம் அடுத்த சந்திப்பின்போது சொல்லிவிட வேண்டும்.


திங்கள், 3 பிப்ரவரி, 2014

பலநிற பட்டாம்பூச்சி
மௌனமாய் கற்றுத்தரும்
ஒற்றுமையின் அழகு.


யாரை வரவேற்று
அணிவகுப்பு நடக்கிறது
எறும்புகளின் ஊர்வலம்.

நெரிசல்மிகு பயணம்
மனசு வலிக்கும்
முன்தலை மறைக்கும் தொலைக்காட்சி.