திங்கள், 31 அக்டோபர், 2016

அமோகம்

விளம்பரம் ஏதும் இல்லை
அமோகமாய் நடக்குது விற்பனை
டாஸ்மாக் கடை சரக்கு.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

பிள்ளை முகம்

ஏதேனும் ஒன்று
வம்புக்கு இழுக்க
மூணாவதாய் பெறந்ததும்
பொட்டக்கட்டையா...
வம்சமே அப்படி...
பாவம் அவன்
என்ன வரம் வாங்கினானோ
அவனுக்கு இவளால
இப்படியாகுது...
இன்னும் எத்தனையோ
சொல்லில் அடங்கா
மாமியின் சீண்டல்
நாத்தியின் கிண்டல்
கணவனின் ஏச்சு
சுற்றம் சொல்லும் குற்றம்
கூட்டும் சுமை
கணக்கிடும் மனசு
எல்லாவற்றையும்
நொடிகளில்
மறக்கச் செய்யும்
பாலுண்டு
முலைக்கனமிறக்கி
சிரிக்கும்
அப்பழுக்கில்லா


பிள்ளை முகம்

வெள்ளி, 14 அக்டோபர், 2016

என்னைப்பற்றி

யார் யாரோ அறிந்திருக்கிறார்கள்
என்னைப் பற்றியும்
எனக்கானவை பற்றியும்.

நடை உடை
மூக்கு முழி
இப்படி சிலர்.

பழக்க வழக்கம்
பேச்சு உணவு
இப்படி சிலர்.

நல்லவன் கெட்டவன்
இல்லை ஏமாளி
இப்படி சிலர்.

இன்னும் சில
சொல்ல முடிந்த
சொல்ல முடியாதபடி...

அறிந்திருக்கிறார்கள்
என்னையும்
எனக்கானவையையும்

எனக்குத்தான்
தெரியவில்லை சரியாய்
என்னைப்பற்றி.

உடுத்த

கிடைக்குது எல்லா வசதியும்
வெள்ளையும் சொள்ளையுமா உடுத்த
கட்சிக் காரர்களுக்கு எப்பவும்.




















புதன், 12 அக்டோபர், 2016

கதைப்பு....

நெடுநாளைக்குப்பின்
நிகழ்ந்தது இச்சந்திப்பு
இருவருக்குமிடையில்
பரிமாற்றமானது
சூடான விவாதங்கள்.

அன்றாட நடப்புகள்
கதைப்பில்
அதிகம் இடம்பிடித்தது.

காவிரி கலவரம்
மேலாண் வாரியம்
முதல்வரின் உடல்நிலை என
நடப்புகளை பேசி முடிக்கையில்

கொஞ்சம்
இலக்கியமும் இடைப்பட்டது
தி.ஜா படிச்சிருப்பே
மோக முள் போல்
இன்னைக்கு சொல்லமுடியலே
என்றவரிடம்
என்னை ஈர்த்த
மரப்பசுவும் அம்மா வந்தாளும்
இடம் பிடித்தது.

தி.ஜா வை தம் சிறுகதைக்குள்
பெண்மன ஓட்டத்தை சொல்வதில்
மிஞ்சிவிட்டார்
கு.பா.ரா-என்றதும்
எல்லாம் அவரது
ராங்கி நெனப்பு
கவிதைக்கு பின்னாடி என்றார்.

பெண்கள் எழுத்து
என திசைமாறியபோது
என்னமாய் சொல்லிவிட்டார்
மனிதர் கந்தர்வன்
“ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை”-என்று.

இப்பவும் கவிதைங்க
பிச்சமூர்த்தியின்
காட்டுவாத்துகள்
ஆத்துமணலில் நடந்த
காலடித்தடம் போல
ஒன்னும் புரிய....

இன்றைக்கும்
எத்தனையோ வருது
யாருக்கு சொல்லை
காய்ச்சி வடிக்க வருது
கவிதை என்றார்.

அத்தனையும்
ஒன்றுவிடாமல்
எங்களுக்கிடையே ஆனவைகளைக்
கேட்டு கொதிப்படங்கிக்
கொண்டிருந்தது
இருக்குமிடையில்
மேசை மீதிருந்த
தேநீர் கோப்பைகள் ரெண்டும்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

மனப் பறவை

பறவைகளுடனான உலகம்
அலாதியானது
விந்தை நிறைந்தது.

பறவைகளின் மொழிதலில்
ஆயிரமாயிரம்
பொருள்கள்.

ஒவ்வொரு சிறகசைப்பிலும்
விரிந்து கொள்ளும்
ஓர் புதிய உலகம்.

“க்விச்” ஒலி எழுப்பி
 செல்கையில்
 சிறகு கட்டிக் கொள்ளும்.

வனாந்தர வெளிகளில்
அலைந்து திரிந்து
கூடு திரும்பும்
மனப் பறவை
நாளும்.

கிளி

ஜோதிடக்காரன் கிளி
எடுக்கும் சீட்டுகளில் இல்லை
அதற்கான விடுதலை சேதி.

சனி, 1 அக்டோபர், 2016

பெயர்

பெயர்
இல்லாமல் இருக்கலாம்
இல்லாத வரையில்
எதுவுமில்லை

ராமன் என்றால் இந்து
ரஹீம் என்றால் முஸ்லீம்
ராபர்ட் என்றால் கிருத்து

வெறும்
மனிதன் என்பதற்கு
என்ன
பெயர்.

வரம்

யார் அறிவார் வாங்கிய வரம்
பெயர் எடுக்கும் பிள்ளை
பெயர் கெடுக்கும் பிள்ளை.