வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

உரக்கப் பேசு

இன்னும் கொஞ்சம்
உரக்கப் பேசு
மேலும் மேலும்
ஓங்கி முழங்கு
அடிவயிற்றிலிருந்து கிளம்பும் ஓசை
முழுதாய் விளங்க
உரக்கப் பேசு
இருக்கும் அரசு
முற்றிலும் செவிடானது என
சுற்றியிருப்பவரெல்லாம்
உணரும் படி
உரக்கப் பேசு

சும்மா ஒரு காதலிக்காக

விரல் கொண்டு
மண்பறித்து மண்பறித்து
குளமாக்கி
நீர் நிரப்பினாய்
நீரின் பாசி வெளிச்சத்தில்
மூழ்கிப்போனது
கைகள் மட்டுமல்ல
இதயமும் சேர்ந்து

இருப்பு

இருக்கும் போது தெரிவதில்லை
இருப்பின் மகத்துவம்
இல்லாத போது தெரிகிறது
வெறுமையில் எல்லாம்
சொல்லிக்கொள்ள
ஒன்றுமில்லை
என்றான பின்
வெறுமனே
துடித்துக் கொண்டிருக்கிறது
இதயம்

சென்ரியு

இல்லை என்பதை
எவ்வளவு நாசுக்காய்
ஏழையின் சிரிப்பில் இறைவன்

கன்னித் தீவு கதையாய்
தொடரும்
ஊழல்

மூன்று வரி ஹைக்கூ
நீ நான்
நம் காதல்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

அம்மா குழந்தை

எத்தனையோ விதங்களில்
முயற்சிக்கிறேன்
எல்லாவற்றையும்
ஒன்றுமில்லாமல் செய்கிறாள் அவள்.

யூகித்து யூகித்து
பூதாகரமாக்கி
மிரட்சிக்கொள்ள வைப்பதாய் எண்ணி
பகிரத பிரயத்தனம் செய்கையில்
ஓர் ஒற்றைப் புன்னகையில்
நீர்க்குமிழியாய் ஆக்கிவிடுகிறாள் அவள்.

ஒவ்வொன்றைப் பற்றியும்
ஒவ்வொரு நினைப்போடு
என் முயற்சிகள்.

எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கும்
அவள் செய்கை.

கொஞ்சம் கொஞ்சமாய்
ஒவ்வொன்றிலும்
தோற்றுக்கொண்டிருக்கிறேன் நான்.

ஒன்றுமே இல்லாமல்
எளிமையாய் வெற்றி பெறுகிறாள் அவள்.


அம்மாவாய் இருந்தும்
குழந்தையாகிறேன்.
குழந்தையாயிருந்தும்
அம்மாவாகிறாள் அவள்.
என் பலவீனங்கள்
முழுதாய் அறிந்து நாளும்.

ஒன்று

ஒன்று
ஒன்றில் ஒன்று
ஒன்றோடு ஒன்று
ஒன்று
இருப்பதில்லை எப்போதும்
ஒன்று அதுவாகும்
ஒன்று இதுவாகும்
அதுவான ஒன்று
அல்லது
இதுவான ஒன்று
எதுவாகவும் ஆகும் ஒன்று
ஒன்று
ஒன்றாகவே இருப்பதில்லை
எப்பொழுதும்.


சட்டம் சடங்கு

எங்கும்
எவ்விடத்தும்
எல்லா தருணங்களிலும்
ஆள் தேடி
முகம் பார்த்து
தலை சொரிந்து
பல் இளித்து
வலைந்து நெளிந்து
குழைந்தே
காரியம் நடக்க...
அப்புறம்
என்ன மயித்துக்கு
சட்டம் சடங்கு

சொல்... நமக்கு.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

கனவுகளுக்கு இடையில்...

கண் விழித்து
நீர் தெளித்து
பத்துப் பாத்திரம் தேய்த்து
காப்பி போட்டு
பிள்ளைகளை எழுப்பி
கால் தொட்டு வணங்கி
காப்பி தந்து
அவசர அவசரமாய்
சமைத்து
பள்ளி அனுப்பி
அலுவலகம் கை அசைத்து
சென்று திரும்பி
மீள இயங்கத் தொடங்கி
அவசர கதியில்
கழிந்து போகும் 
உன் வாழ்வு - 
எப்போதேனும்
காதல் குறித்து 
நினைக்கத் தோன்றின்
எமக்காகவும் 
கொஞ்சம் சி்ந்து

கண்ணீர்த் துளி!

சனி, 20 ஜூலை, 2013

பிறிதொரு பொழுதில்

ஒன்றுமில்லாமல்
சந்தித்துக் கொண்டோம்
சந்திப்புகளின் உச்சத்தில்
ஒருவருக்கொருவர்
என்றானோம்
நீ
ஒருவருக்கு
நான்
ஒருவருக்கு
என்றான பிறிதொரு பொழுதில்
சந்தித்துக் கொண்டோம்
ஒன்றுமில்லாமல்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

அம்மாவின் பேர்


பிறந்த
ஒரு மாதத்திற்குள்
எதிர்பாரா விபத்தில்
அப்பா இறந்துபோக
தரித்திரம்...
அதிர்ஷ்டமில்லா பொண்ணு ஆனாள்
உற்றார் உறவினர் எலலாருக்கும்.

பள்ளிக்கூடத்தில்
எல்லாவற்றிக்கும்
முதன்மையாய்
சற்றே துடுக்காய்
பேசியதால்
வாயாடியானாள்...
ஆசிரியர்
மாணவர் என்ற
பேதமேதுமின்றி.

வளர்ந்து பெரியவளானதும்
மணமுடிக்கையில்
அவனது
மனைவி என்றே
அடையாளப்படுத்தப்பட்டாள்
ஊராரால்.

பிள்ளைகள் ரெண்டு
பிறந்த பின்னர்
அவர்களின் பெயரால்
அம்மா ஆனாள்

காலம் கடந்து
மரணத்துப் போனாள்
ஓர் நாள்
இறந்த அம்மாவின்
பெயர் அறிய 
நினைத்த பிள்ளைகள்...

தெரிந்துகொள்ள முடியுமோ?
அவளின் அப்பா
தன் கொள்கைப் பிடிப்போடு
மகளுக்கு வைத்த
அஜிதாஎன்ற பெயரை.