வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

காத்திருப்பு

ஏதேனும் ஒன்று
காத்திருக்கிறோம்
வரப்போகும்
பேருந்திற்காய்

சிலருக்கு
அவசரமாய்
போயே தீரவேண்டிய காரியம்
சிலருக்கு
பொழுதுபோக
திரையரங்கிற்கு
இன்னும்
சிலருக்கோ
மகிழ்வுகருதியோ
அன்றி கவலைமறக்கவோ
மதுக்கூடமாய்
இருக்கலாம்

பெண்பார்க்க
பிள்ளை வீட்டார்
இலலை
ஓடிப்போக
உதவும் நட்பு

அலுவலகப்பணி
மருத்துவமனை
கோவில் குளம்
இத்தியாதிகள்
இன்னும்
எத்தனையோ
காரணங்கள் அவரவர்களுக்கு

பேருந்து வந்ததும்
முண்டியடித்து
தொங்கும் கூட்டத்தோடு
கூட்டமாய்
ஏறமுடியாதவர்

மீள
காத்திருக்கிறார்கள்
மனதிற்குள்
வேண்டியபடி
அடுத்தப் பேருந்தேனும்
வரவேண்டும்
காலியாய்...

தெரிந்தும்தெரியாதது

உங்களை
எஙகேயோ பார்த்த மாதிரி
எங்கே... எப்போ என்றுதான்
சட்டென்று  நினைவுக்கு வரல
முன் பின் பார்த்திரா விட்டாலும்
சொல்ல வேண்டி வந்தால்
சொல்கிறோம்

நெருங்கிப் பழகி
எல்லாம் தெரிந்திருந்தாலும்
ஒன்றுமே
தெரியாததுபோல்
முகம் மறைக்கிறோம்

தெரிந்தது தெரியாததுமாய்
தெரியாதது தெரிந்ததுமாய்
நகர்த்துகிறது
வாழ்க்கை.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

கனவுபட்டாம்பூச்சி

எப்போதும்
முன்பறந்து
முன்பறந்து
மனம் மயங்கும் வேளை
வாகன மோதலில்
மடியுமென்
கனவு
பட்டாம்பூச்சி

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பிடித்துப்போதல்

சின்ன வயது முதற் கொண்டே
தெரியும் மொழியாளை
மொழியாள் என்றால்
தேன் மொழியை
ஒன்றும் முத்துப் பல்
வரிசையில்லை
இருந்தும் அழகுதான்
அவள் சிங்கிப் பல்ரெண்டும்.
சிட்டுக் குருவியின் கூடுபோல்
சின்னதென்றாலும்
ஓரழகுண்டு
அவள் ஜிட்டுக்குடுமிக்கு
இருட்டுக்கும் வெளிச்சமுண்டு
அவள் கருவிழி கண்ட பின்
வந்த தெளிவு.
அது சரி
இப்படி இப்படி
எமக்கு பிடித்திருக்கு
அவளை அழகென்று
அவளுக்குப் பிடிக்க வேண்டுமே
இதுபோல்
என்னை.

எப்படிச் சொல்ல

யார் யாருக்கெல்லாம்
தம்பி பாப்பா
இருக்காங்க
வர வருஷம்
நம்ம ஸ்கூல்ல
எல்.கே.ஜி - முதல் வகுப்பு
சேக்குற மாதிரி
கை தூக்குங்க
பாக்கலாம் என்ற
மிஸ்சிடம்
எப்படிச் சொல்ல...
கல்யாணச் சந்தையில்
அதிக விலைகொடுத்து
மாப்பிள்ளை வாங்கும்
பேரத்தில்
வயதாகிப்போன
அம்மாவுக்கு
நான் பிறந்ததே
பெரிய விஷயம் என.

சனி, 17 ஆகஸ்ட், 2013

இப்படிக்கு மக்கள் பிரதிநிதி

மகாசனங்களே
ஊரில்
மழை பெய்கிறதோ
இல்லையோ


நான்
மக்கள் பிரதிநிதி
மந்திரி

மாதம்
மும்மாரி பெய்வதாகத்தான்
நாளும்  கூறுவேன்

நீங்கள்
சாப்பிடுகிறீர்களோ
இல்லையோ

மூன்றுபோகமும்
விளைச்சல்
விளம்பரப்படுத்துவேன்

இன்னும்...இன்னும்
எதுவாய் இருப்பினும்

ஆட்சிபற்றி
கேட்டால்
மக்கள் தொண்டே
மந்திரியின் வேலை
தம்பட்டம் அடிப்பேன்

நீங்கள்
மகிழ்கிறிர்களோ
இல்லையோ

நான்தான்
மக்கள்
பிரதிநிதியாயிற்றே

எல்லாரும்
மகிழ்ச்சியில்
திளைப்பதாகவே
அறிக்கைவிடுவேன்.



* ஒரு ரூபாயில் ஐந்து ரூபாயில் மக்கள் வயிறாற உண்பதாய்ச்சொன்ன அமைச்சர் பெருமக்களுக்கு சமர்ப்பணம்



முரண்பாடுகள்

எங்கள்
தலைக்கு எண்ணெய் இல்லை
தினமும்
தலைக்கு குளிக்கிறோம்
பக்தி போர்வையில்

எங்கள்
பாதங்களுக்கு செருப்பு இல்லை
ஆனால்
போட மறுப்பதாய் அடம்பிழடிக்கிறோம்
கடவுள் பெயரால்

எங்கள்
பசிக்கு உணவுதான் இல்லை
இருந்தும்
விரதமிருப்பதாய்ச் சொல்லி
கௌரவப் படுத்துகிறோம்

எங்கள்
மனித நேயங்கள் வளரவில்லை
தெய்வங்களின் புகழுக்காய்
புராணங்கள் எழுதுகிறோம்

வேறுபாடு

அன்று
நிலவை அழைத்தாவது
சோறு ஊட்டிய
அன்னை
இன்று
என்னையே
அழைக்க
மறுக்கிறாள்...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

பித்து

நேற்று அது
அதற்கு முன்
வேறொன்று
இன்று இது
நாளை...?

எதைப்
பற்றி இருக்குமோ
மனப்
பித்து

கொடு

இனியும்
உன்னிடம் பேச
எதுவுமில்லை எமக்கு
பேசி எதுவும்
விளையவில்லை என்பதாலில்லைஸ
இனி பேசுவதால்
எதுவும் விளையப் போவதுமில்லை

நான்
பேச வேண்டியவர்கள்
அதோ வெளியில்
சிதறிக்கிடக்கிறார்கள்
அவர்களிடம்
பேசப்போவது
உன்னிடமிருந்து “கொடு”
என கேட்பதற்கில்லை
“எடு” என சொல்வதற்கு