சனி, 6 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சி

ஏதேதோ எழுதினேன்
பொருந்தி வந்ததென்னவோ
பட்டாம்பூச்சி காதலுக்கு

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சியே சொல்
சிறகசைப்பில் உதிரும்
வண்ணங்களா பூக்கள்

பட்டாம்பூச்சி

ஒவ்வொரு தோல்வியிலும்
சிறகசைத்து பறக்கும்
என் கனவு பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

வரைந்திட முடியவில்லை
எத்தனை வண்ணங்கள் குழைத்தும்
மனம் கவர் பட்டாம்பூச்சி

வியாழன், 4 டிசம்பர், 2014

பட்டாம்பூச்சி

நல்லா படிக்கிறவங்க
டீச்சர் வீட்டுக்கு வரலாம்
இருந்தும் பட்டாம்பூச்சியின் பின் மனம்

உலகப் பூக்களை
ஒன்றாக விழுங்கினால் வருமா
பட்டாம்பூச்சி கவிதை

சனி, 29 நவம்பர், 2014

நிரூபணம்

நடிகர்கள் தலைமையில் ஆட்சி
நிரூபணம் ஆனது
கண்ணீர் மல்க பதவி ஏற்பு

திங்கள், 24 நவம்பர், 2014

மறுபடி பிறப்பேன்

நீங்கள்தான்
முடிவுசெய்ய வேண்டும்
ஏனெனில்
முடிவுசெய்யுமிடத்தில்
நீங்கள்தான்
இருக்கிறிர்கள்...

நாடு கடத்தலாம்
நாடு கடத்த ஏதுவாக
தேச துரோக
குற்றம் சுமத்தலாம்.

கைது செய்யலாம்
விசாரணை ஏதுமின்றி
கைது செய்ய
குண்டர் சட்டத்தில் கைது
என்றும் கூறலாம்.
வெளியில் வராதபடிக்கும்
உதவியாய் இருக்கலாம் அது.

தூக்கில் போடலாம்
பொது அமைதிக்கு
பங்கம் விளைவித்ததாய்
அறிக்கை விடலாம்

கொஞ்சம் சந்தேகம்
வருமென்றால்
உள்ளிருப்பிலேயே
துப்பாக்கியின்
தோட்டா தீரும்வரை
சுட்டுத்தள்ளலாம்
தப்பிக்க முயற்சித்ததாய்
சமாதானம் செய்யலாம்

எதைச்செய்தாலும்
ஒன்றை
நினைவில் கொள்ளுங்கள்
எம்மக்களுக்கான
வாழ்வும் உரிமையும்
முழுதாய் கிடைக்கும் வரை
மறுபடி மறுபடி
பிறப்பேன் என்று

வெள்ளி, 14 நவம்பர், 2014

கலகக் குரல்

பேசலாம் என்றார்கள்
பேசினேன்
என் மக்களிடம்
அவர்கள்
அறியாதிருப்பதை
அறிந்துகொள்ள வேண்டியதை
நிறுத்து - இது
கலகத்தின் குரல்
என்கிறார்கள்.

எழுதலாம் என்றார்கள்
எழுதினேன்
எங்கள் மக்களின்
அவலங்களை
அவஸ்தைகளை
எழுதுகோலை
பிடிங்கி எறிந்தார்கள்
எழுதாதே - இது
எதிர்முனை செய்தி
என்கிறார்கள்.

பாடலாம் என்றார்கள்
பாடினேன்
எஙகளின்
தேவைகளை
உரிமைகளைக் குறித்து
குரல்வளை நெறிக்கிறார்கள்
என் குரல்
ஒன்று ஒப்பாரியாகவோ
போர் பரணியாகவோ
ஒலிக்கிறதென்கிறார்கள்.

என்னைப் பேசச்சொன்னால்
என்னை எழுதச் சொன்னால்
என்னைப் பாடச்சொன்னால்
வேறென்ன பேச
வேறென்ன எழுத
வேறென்ன பாட

என்மக்கள் இன்னும்
உரிமையற்ற மனிதர்களாய்
வாழும் வரையில்
அதைப் பற்றி
பேசாது எழுதாது பாடாது....
அது வரை
என் குரல்
கலகத்தின் குரல்தான்....

திங்கள், 3 நவம்பர், 2014

ஊழல்

முள்ளை முள்ளால் எடு
வாக்களித்தனர் வாக்காளர்கள்
ஊழலுக்கு எதிராய் வேறொரு ஊழல்

வரிசை

ஒன்று இரண்டு மூன்று
எந்த வரிசையென்றாலும்
கடைசியில் தான் பெண்கள்.