சனி, 26 ஜூலை, 2014

சிக்கல்

சிக்கிக் கொள்கிறது
புள்ளியும் மனமும்
அவள் கோலத்தில்.




புதன், 16 ஜூலை, 2014

பைத்தியம்

காணக்கிடைக்கிறார்கள்
அங்கிங்கெனாதபடி
நீக்கமற நிறைந்து
எங்கும்
விதவிதமாய்
பைத்தியங்கள்.

கடவுள் பைத்தியம்
காதல் பைத்தியம்
கட்சிப் பைத்தியம்
காசுப் பைத்தியம்

காட்சிப் பைத்தியம்
கவிதைப் பைத்தியம்
தன் பைத்தியம் உணரா
அடுத்தவர் பைத்தியம்
கதைக்கும் பைத்தியம்

மண் பைத்தியம்
பெண் பைத்தியம்
காலங்காலமாய்
தொடரும் பைத்தியம்

மனப் பைத்தியம்
மாயப் பைத்தியம்
தீர்க்கும் பைத்தியம்
எங்கு உள்ளார்?
தீரும் பைத்தியம்
எங்கு உள்ளது
பைத்தியங்கள்
தன்னைத்தான்
சுற்றும்
பூமி பைத்தியத்தினுள்
எல்லா
பைத்தியங்களும்.


காதல்

துளையிட்ட
வெற்றுப் புல்லாங்குழல்
மெல்லிய
காற்றாய் உள் நுழைந்தாய்
இசை
மழையாய் காதல்

சனி, 12 ஜூலை, 2014

அடியவனுக்கு

அயர்ந்தால்
ஆனந்த சயனம்
நடந்தால்
அற்புத நடனம்
நின்றால்
அடி முடி காணத் தோற்றம்
பொழிந்தால்
திக்குமுக்காடும் அன்பு
சிரித்தால்
பொல்லாச் சிரிப்பு
அடியார்க்கோ ஆண்டவன்
அடி கள்ளி
அடியவனுக்கோ
நீ.

வெள்ளி, 11 ஜூலை, 2014

உண்மை(யோ) சொல்

அடுக்கலைச் சப்தம்
திண்ணையில் இருந்து
உள் ஓடித் திரும்பினேன்
பூனை ஒன்று
சாளரம் வழி
குதித்தோட  எண்ணினேன்
அட நாமதானே
அனுப்பி வைத்தோம்
அதற்குள் மறந்து...

சிறிது கழித்து
கூடத்தில் நடைபயில
ரெண்டடிச் சென்று
திரும்பி உணர்ந்தேன்
ஊருக்குப் போனதை.

மீண்டும் ஓசை
மீண்டும் எட்டிப்பார்க்க
நானே நடந்தேன்
அவள்போல் அணிந்து
சரிபட்டு வாராது

எத்தனை நாளைக்கு
நான் உங்க கூடவே
அடைபட்டுகிடக்க
ஒரு நாலு நாள்
எங்கேனும் நிம்மதியா
போக விடுவீங்களா
என்றவளை
ஊருக்கு அனுப்பிவிட்டு
அனுப்பிய ஊருக்கு
மனம் புறப்பட்டது

போகும்போது
சொல்லிப் போனாள்
நீங்க இருக்க மாட்டீங்க
பைத்தியம்
உங்களுக்கு என்மேல்
எப்பொழுதும்

அவள் சொன்னது
உண்மை(யோ) சொல்வீர்

ஞாயிறு, 6 ஜூலை, 2014

இல்லாது இரு...

இருக்கும் போது
தெரிவதில்லை எதுவும்
இல்லாத போது
உணர்கிறோம்
இருப்பின் மகத்துவம்

எதிர்படும் நபர்கள்
கேட்கிறார்கள்
காணத நபரின்
நலனும் செயலும்

இல்லாதது குறித்துதான்
இருப்போர் எண்ணம்
இருந்துகொண்டிருக்கும்

இருப்பதாய்
பாவித்து பாவித்து
இருப்பதாய்
இருந்து கொண்டிருப்போம்
இல்லாத போதும்

பார்க்கும் முகங்கள்
கேட்கும் குரல்கள்
செய்யும் வேலை
இப்படியாய்
எல்லாவற்றிலும்
காணக் கிடைக்கிறார்கள்
இல்லாதிருப்பவர்கள்

இருப்பவர்கள்
இல்லாதவர்களாய்
ஆகிப்போதும் உண்டு

இருப்பில்
கிடைக்கும் மகத்துவம்
இல்லாது இருப்பதில்
பெரும் மகத்துவம்...

திங்கள், 30 ஜூன், 2014

என்நிலை

எத்தனை வார்த்தைகளில்
சொன்னாலும்
ஒன்றுதான்
என்நிலை

நீள் நெடு
பயணமாய் தொடரும்
உன் இதயத்தின்
மையம் நோக்கி
என் பாதம்.

ஞாயிறு, 29 ஜூன், 2014

நடுநிசி நாய்கள்

காதல்
நடுநிசி நாய்கள்
யாரை
தூங்க விட்டிருக்கிறது
சொல்லுங்கள்.

@நன்றி தலைப்பு உபயம் சுந்தர ராமசாமி கவிதை நூல்

சனி, 28 ஜூன், 2014

ஏப்ரல் முதல் தேதியிலா சொல்...?

உமக்கு எத்தனையோ
காரணங்கள்
இருக்கும்
மறந்து போவதற்கு.

அலுவலகம் போகும்
புருஷனுக்கு
தயார் செய்து
கையசைத்து
பொய்யாக வேணும்
புன்னகைத்து...

பிள்ளைகள்
எழுப்பி
குளிக்கச் செய்து
தலைவாரி
உடை மாற்றி
பள்ளி வண்டிக்குள்
தள்ளி திரும்ப...

சொந்த பந்தம்
பாத்திரம் பட்ஷணம்
அக்கம் பக்கம்
மேலுக்கேனும்
ஒரு நிமிட
நலம் விசாரிப்பு...

ரேஷன் கடை
மளிகைப் பொருள்
துவைத்து முடிக்க
பூசை புணஷ்காரம்
ஏதேனும் என்றால்
செய்து வைக்க...

பசியை மறந்து
இயங்கிக்கொண்டிருந்தாலும்
இடையில் கொஞ்சம்
அருந்திக் கொள்ள...

மீண்டும்
பிள்ளை புருஷன்
வீட்டின் பெரியவர் என
தொடர்ந்து இயங்க...

எத்தனையோ
இருக்கும்
மறந்து போக...

ஏனோ
கிடந்து தவிக்கும்
மனம்
நாளும்...

சரி சொல்
நீயும் நானும்
காதலிக்கிறோம் என்று சொன்னது
ஒரு
ஏப்ரல் முதல் தேதியிலா...
சொல்.

செவ்வாய், 24 ஜூன், 2014

அறிவாயா என்னை?

நீ அகம் மகிழ்ந்து
சிரிக்கையில்
உன் எண்ணங்களை பிரதிபலித்து
சிரிக்க...

நீ
மனம் வெதும்பி குளுங்கி
அழுகையில்
உனது துயரை
என்னுள் வாங்கி நானும்
அழ...

உனது அசைவுகள்
எல்லாம
எனது அசைவுகளாய்
நொடிக்கு நொடி
காட்டி மயங்க...

உன் உதைப்பை
ஏற்று
மறுபடி உதைக்காது
நொறுங்க

உன்னை
வெறுமைக்கு அப்படியே
பிரதிபலித்து
நொறுங்கிப்போக
கண்ணாடிப் பொருளா...

எமக்கான மனம்
எமக்கான சிந்தனை
எமக்கான செயல்
உமக்கானது போல்
எமக்கென சிலவும்

உண்டென
எப்போது எப்போது
அறிவாய் என்னை
சொல் நீ?