வெள்ளி, 3 ஏப்ரல், 2015

திரும்பும் மேகம்

தண்ணீராய் செலவு
இல்லை இல்லை
தண்ணீருக்கே பெரும் செலவு,

ஓடி ஒளியலாம்
இன்னும் சில நாளில்
யாரேனும் தண்ணீர் கேட்டு வருகையில்.

திரண்டு வந்து
திரும்பும் மேகம்
தகுந்த மரியாதை கிடைக்கவில்லையோ.

யாரைக் கண்ட மிரட்சி
வந்தவழியே
திரும்பிச் செல்கிறது மேகம்.

சொட்டு தண்ணீர்

கை பிடித்து நடக்கின்றார்
பிள்ளைகள் அன்று
தண்ணீர் பாட்டில்.

காத்திருக்கிறார்கள் எல்லோரும்
வி வி ஐ பி - ஆனது
மழை.

முந்நூறு நானூறு
பல நூறுக்கு பின்னுமில்லை
சொட்டுத் தண்ணீர்..

சனி, 24 ஜனவரி, 2015

மறதியின் நாயகர்கள்

நேற்று அதை
மறந்தோம்
இன்று இதை
மறந்தோம்
நாளை
எதை....?
மறப்போம்...

நேரு சொன்னார்
எலி கறி சாப்பிட...
அவர் மகள் சொன்னார்
வறுமையே வெளியேறு
அவர் பிள்ளைக்கோ
நவீன இந்தியா....

அடுத்தவர் சொன்னார்
ஆண்மை வெளிப்பட்டதென
அவரின் சீடர்
நூறுநாளில்
கருப்பு பணம் வெளியில்

எல்லாம்
மறந்தோம்
இன்னும் மறப்போம்
நாளை
அமெரிக்க அதிபர்
ஏதேனும் சொல்வார்
அதையும்....

நாம்
என்றும்
என்றென்றும்
மறதியின் நாயகர்கள்

வெள்ளி, 16 ஜனவரி, 2015

மறந்திடாது...பொங்கல்


பழசுகள் அல்ல
புதுமைகள் பெயரால் வரும்
புதிர்களும்
எரிக்கும் படியாய்தான்...

விளைச்சலைக் கொண்டு
புதிதாய் பொங்கலிட
விவசாயி இல்லை
விளை நிலமெல்லாம்
விற்பனையாகிறது
மனைகளாக...

மாடுகளில்லை
கொம்புகள் சீவி
வண்ணம்தீட்டி
ஓடவிட்டு வீரம் பார்க்க
அடிமாடுகளாய்...
வெட்டுக்கு வரிசையாகி
நிற்கின்றன பாவம்...

காண்போர் கண்டு
வணங்கி எழ
வழியற்றுப்போகிறது
எந்தமலரில் எவ்வகைத்தேன்
பார்ப்பது பழங்கதையாகி
எந்தப் புற்றில்
எவ்வினப்பாம்பு
கணிப்பதே வாழ்வாகும் சூழல்

இருந்தும்
மறந்திடாது
சொல்லுவோம்
பொங்கலோ பொங்கலென்று..

திங்கள், 5 ஜனவரி, 2015

வருகை-5

சந்திப்பு வேண்டி பயணித்து
திரும்புகிறோம் சந்திக்க முடியாமல்
பிறிதொரு சந்திப்பு எண்ணி

வருகை-4

யாரேனும் ஒருவர் வருகைபுரிவர்
காத்திருக்கும் தருணத்தில்
பிரிதொருவரைத்தேடி நம்மிடம்.

வருகை-3

யார்யாரோ வருகிறார்கள் விசாரித்துக்கொண்டு
வந்து திரும்பும்போது தெரிகிறது
அவர் இல்லையென்று

வருகை-2

வெளிச்சம் தேடும் பூச்சிகள்
இருட்டின் மறைவில்
இரைதேடும் பல்லி

வருகை

அழைக்குமுன்பே வந்தது
பட்டாம்பூச்சி
மலர் கண்காட்சி

சனி, 3 ஜனவரி, 2015

பொங்கல்

பொங்கினால் தைபிறந்ததும்
பானையில் அல்ல மனதில்
முதிர் கன்னி