சனி, 30 டிசம்பர், 2017

ஆனந்தம்

o   உடுத்திக் கலையும் துகில்
உண்டு மகிழும் உணவு
சூடிகளிக்கும் மலர்
காண விரும்பும் மேனி
எல்லாம் எனக்கு ஆனந்தமாக
நீ
அம்பாலிகையா
அடக் கள்ளியா
நான்
ஆச்சாரியனா
அடியவனா
அன்பே அன்பே சொல்

உமக்கு என்னை
பழி வாங்குவதாய்
நினைப்பதில்

எமக்கோ
நீ பழிவாங்க
நான் இருக்கிறேன்
என்பதில்...


ஏமாற்றம்தான்
என்றாலும்
தினம் தினம்
எதிர்பார்த்துக்கிடக்கிறேன்

என் ஏமாற்றம்
உனக்கு
அளவிலா ஆனந்தம்
தரும் என்பதால்...

திங்கள், 25 டிசம்பர், 2017

பனி

குரல் நடுங்க பனியில்
பாடி வருகிறார்கள்
கிருஸ்மஸ் தாத்தாகள்

நிறம்

டிசம்பர் பனி இரவு
விழித்து காத்திருக்கிறாள்
நீக்ரோ பாட்டி
இயேசுவின் நிறம் அறிய

ஆடுகள்

நல் மேய்ப்பனை அல்ல
கசாப்பு கடைகாரனையே
நம்பும் மந்தை ஆடுகள்

சனி, 16 டிசம்பர், 2017

போட்டி

தெரிந்தே நடக்கிறது
ஒருவருக்கொருவர் போட்டி
ஒன்றுமில்லை யாருக்கும்
விட்டுப்போகையில்

சேவல்

விரைந்தோடி வருகிறது
செம்பரிதி காண
உரத்து குரலெழுப்பும்
விடியலில் சேவல்

பனி

சூடான வார்த்தைகள் உமிழ்ந்த வீதி
குளிரப் பொழிகிறது
நிலவும் பனியும்

குரல் கேட்க
முகம் மறைக்கிறது
மூடு பனி

வியாழன், 7 டிசம்பர், 2017

ஒரு கை

துளசி மாடம்
செழித்து வளர்கிறது
ஏடிஸ் கொசு


வேல் கொண்டு முருகன்
சூரனை மாய்க்க
வீழும் பொம்மை தலை


சமாதானம் செய்கிறான்
கணவன் மனைவி சண்டை
அறியான் அக்கரை பச்சை


விண் முட்டும்கட்-அவுட் 
சொல்லிக் கொண்டார் மனதில்
பாவம் செத்துட்டார் போல


தொடரும் அவலம்
உயர்த்திகுரலெழுப்ப
தேடுகிறான் ஒரு கை

கொக்கு

கைகளை வாசலாக்கி
இட்டுக் காட்டுகிறாள்
மருதாணிக் கோலம்


வீசும் காற்று
கை விரித்து நடனம்
வயலில் காவல் பொம்மை


காட்டிக் கொடுத்தது
பரந்த உலகிற்கு
இருளை ஒளி

பச்சிளம் கொடி
மெல்ல அசைத்து
இரசிக்கும் தென்றல்


உதிரும் பூ
தேன் குடிக்கும் தரையில்
இறக்கை இல்லா எறும்பு


உழவன் முன் செல்ல
பின்னால் வரும்
வயலில் கொக்கு

காட்சி

கோவில் குளம்
விழுந்து கிடக்கிறது
உள்ளே கோபுரம்