வெள்ளி, 2 அக்டோபர், 2015

மகாத்மா முதல்...

நெருங்கி விட்டது தேர்தல்
நொருங்கப் போகிறது
கொள்கைகள்

கணக்கு வழக்கு
கணிப்பொறி கணக்கு
புள்ளி விவர கணக்கு
எல்லாவற்றையும்
ஊதித்தள்ளப்போகிறது
மக்களின் கணக்கு.

ஓட்டுக்கு எவ்வளவு
தேறும் என்பதுதான்
இப்போதைய கணக்கு.

மக்களை கணக்குபண்ன
மன்னர்கள் யாத்திரை
செய்கிறார்கள்.

ரத யாத்திரை
மசூதியை இடித்தது
நமக்கு நாமே யாத்திரை
என்ன செய்யப்போகிறதோ...
கட்டியணைக்கிறார்
உம்மா கொடுக்கிறார்
இதுவரை பார்க்காத அத்தனையும்
ஆச்சரியத்தோடு பார்க்கிறார்.

செல்லும் வழியெங்கும்
மக்கள் கூட்டம்
கலைந்த பின்னே
குவார்ட்டர்கள் கூட்டம்.

மதுவின் ஆசிகளோடு
யாத்திரை நடக்கிறது
நம் பகுதிக்கும் வரலாம்
நமக்கு கிச்சு கிச்சு
மூட்டவும் செய்யலாம்.

மயானக் கொள்கைக்கு
மக்கள் கூடுவார்கள்
கிரானைட் கொள்கைக்கு
அதிகாரிகள் கூடுகிறார்கள்...

50 வருட கொள்ளை
இரண்டு ஆட்சியாளர்களுக்கும்
நன்கொடை.

தோண்ட தோண்ட
நீர் வந்தது அந்தக் காலம்
பிணங்கள் வருவது இக்காலம்.

அசகாய சூரர்தான்
சகாயம்...
பிணங்களுக்கும் நீதி கேட்கிறார்...

மலைகளை பிளந்தார்கள்
ஆறுகளை சாலையாக்கினார்கள்
மண்ணுக்குள் ஒளிந்திருந்த நீரை
தேடியெடுத்து விற்றார்கள்.

தேசம் நம்முடையதுதான்
தேசத்தில் உள்ளவை மட்டும்
அந்நியர்களுக்கானது

தமிழ்நாடு
தண்டநாடாக மாறும் காலம்
வெகுதூரமில்லை.

வியாபாரிகள் தாம்
ஊர்ஊராய் பறப்பார்கள்
நமது பிரதமரும்
நாடு நாடாய் பறக்கிறார்.

பொருளை விற்பவர்கள்
வியாபாரிகள்
நாட்டையே விற்க முனைபவர்
பிரதமரா?

விவசாயிகளின் தற்கொலையை
ஊடகங்கள் பெரிதாக்குகிறதாம்
நிலம் இருந்தால்தானே
அவன் விவசாயி
நிலத்தையும் பிடுங்கிவிட்டால்
அவன பரதேசி.

நில அபகரிப்பு சட்டம்
பதுங்கிய புலி போல்
காத்திருக்கிறது?
எந்த நேரத்திலும் பாயலாம்.

மதத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
இனத்தின் பெயரால்
பிரித்தாளும் சூழ்ச்சி
பிரமாதமாய் அரங்கேறுகிறது.

மகாத்மா முதல்
நேற்றைய கல்புர்க்கி வரை
கொலைப் பட்டியல்
அனுமன் வாலாய்
நீண்டு கொண்டே போகிறது

கொலை வாளினை எடடா
கெட்ட கொடுங்கோல்
செயல் அறுந்திடவே

பாரதிதாசன் வாக்கு
பொய்க்கப் போவதில்லை.
வரட்டும் பார்க்கலாம்.

(காந்திஜெயந்தி கவியரங்கில் சகுவரதன் பாடியது)

கருத்துகள் இல்லை: