வியாழன், 7 டிசம்பர், 2017

என் ஹைக்கூ குறித்து...

ஹைக்கூ நூற்றாண்டு தடத்தில்....ஹைக்கூ உலகம் (தொகுப்பு நூல்)-
பதினோரு கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு.
***********************************************************************
இதில் பத்தாவதாக இடம்பெற்றுள்ள கவிஞர் வேலூர் இளையவன் அவர்களின் ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய எனது கருத்து:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொறுப்பாளர்களில் ஒருவரான வேலூர் இளையவன் ( இயற்பெயர் இராமஜெயம் ) பல வீதி நாடகங்களை நடத்திய கலைஞர். கவிஞர் கந்தர்வன் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஏற்கனவே இரண்டு கவிதை நூல்களை எழுதியுள்ள இவரின் பிறப்பிடம் போளூர். இப்போது வேலூரில் வசித்துவருகிறார். நேரில் சந்தித்த தருணமதில் இவரது எளிமையும் பழகும் தன்மையும் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
வேலூர் இளையவன் அவர்களின் சிறப்பான ஹைக்கூ அணுகுமுறை பாராட்டுக்கு உரியது. ஹைக்கூ உலகம் முகநூலில் எது ஹைக்கூ...? என விவாதம் சூடு பிடித்திருக்கும் தருவாயில் இவரது ஹைக்கூ கவிதைகளை
பற்றிய ஆய்வு வெகு சிறப்பு என கருதுகிறேன்.
ஹைக்கூ ஜப்பானிய மண்ணில் 5/7/5 என்ற அசைகள் கொண்டு எழுதப்பட்ட ஹைக்கூ தமிழில், தமிழ் மண்ணுக்கே உரித்தான பாரம்பரியம், கலாச்சார தொன்மங்களை உள்வாங்கி கவிஞர்களால் சிறப்பாக எழுதப்பட்டு வருகிறது. இயற்கை, ஜென் தத்துவங்களை கடந்து சமூக அவலம், வாழ்வியல், அறிவியல், உளவியல், பெண்ணியம் போன்ற கருத்துக்களோடு மிகச் சிறப்பாக எழுதப்பட்டு வருவது போற்றுதலுக்கு உரியது.
இவ்வகையில் கவிஞர் வேலூர் இளையவன் அவர்களின் ஹைக்கூ இங்கே சமூக அவலத்தின் புரிதலை தெளிவாக்குகிறது....
• புலிவேஷம் போட்டு ஆட்டம்
பொழுதுபோனா கிடைக்குமா?
பசிக்கும் வயிற்றுக்குப் புல்
“ புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது ! “ இப்படி ஒரு பழமொழி இருக்க இப்படியொரு ஹைகூவில் என்ன சொல்ல வருகிறார் கவிஞர் ? ஆழ்ந்து நோக்கும் போது நன்கு தெளிவாகிறது...
இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய தெருக்கூத்து, கரகாட்டம், புலி வேடக் கலைஞர்களுக்கு..... மிக மிக சொற்ப வருவாய் கிடைக்கிறது. கைக்கு எட்டியது வாய்க்கு கூட எட்டாது என்ற நிலைமைதான்.
தின்னமுடியாத புல் கிடைத்தாலும் சகித்துக் கொண்டு உண்ண இந்தப் புலி வேடமிட்ட கலைஞன் காத்திருக்கிறான்....என்னே அவலத்தின் உச்சம்....அடர்த்திமிகு ஹைக்கூ என்றே கூற வேண்டும்.
மேலும்......
• வெளியிலிருந்து வருவது
உள்ளிலிருந்து செல்வது
எதைத் தடுக்கும் கதவு
இதைவிட....... பல்நோக்கு சிந்தனையில் எப்படி எழுத முடியும் இனியொரு ஹைக்கூ ?.....ஹைக்கூ என்றால் விளங்க வைக்க வேண்டும் என சொல்பவர்களுக்கு இந்த ஹைக்கூ அவரவர் கண்ணோட்டத்துக்கு, புரிதலுக்கு ஏற்ற ஹைக்கூ....!
கதவு...இங்கே... பாடு பொருள்...கவிதையின் கருப்பொருள்...ஆகா இதையே கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் காயங்கள் என்பார்.
வீட்டின் காயங்கள் என்று பல கவிதைகளில் குறியீடாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் மட்டுமல்ல சிறுகதைகளின் சிற்பி இன்னும் புதுவையில் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களும் “ கதவு “ (1965 ல்) எனும் நாவலை எழுதியுள்ளார்.
“ கதவிடுக்குகளில் பாருங்கள் இந்த முதிர்கன்னியின் முகமழிந்த கோலங்கள் தெரியும் “ என்று இறுதிவரியாக நான் எழுதிய கவிதை ஒன்று பலராலும் பாராட்டுதலைப் பெற்றதை இங்கே நினைவு கூறுகிறேன்.
வேலூர் இளையவன் அவர்களின் இந்த ஹைக்கூவை பல கோணங்களில் ஆய்வு செய்யலாம். வெளியிலிருந்து வரும் காற்று, இன்பம், துன்பம், செல்வம் , அன்பு, பாசம் , நட்பு, ஆன்மாவின் உயிர்ப்பு (பிறப்பு) போன்றவற்றை தடுக்காது கதவு....மூடிவைத்தாலும் தடுக்காது....! உள்ளிலிருந்து செல்லும் அதே செல்வம், அன்பு, பாசம், நட்புக் கரம், இன்பம் துன்பம் , பிரிந்து செல்லும் உயிர் (இறப்பு) இவற்றை தடுக்கமுடியுமா கதவு....? நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வீட்டின் கதவு வீட்டுக்குப் பாதுகாப்பு என....
இது ஒரு மாயை...மனிதம் தனுக்குத்தானே தாழிட்டுக் கொண்ட
எண்ணங்களின் மறு உருவம்...அவ்வளவுதான்....!
தத்துவ சித்தாந்தங்களை உள்ளடக்கிய சிறந்த ஹைகூவாக, வாழ்வியல் சிந்தனைகளை உள்ளடக்கிய ஹைக்கூ வரிகளாக மேற்சொன்ன ஹைக்கூவை பாராட்டுகிறேன்.
இதைப்போன்று பல ஹைக்கூ கவிதைகள் இவரது எழுத்தில்
வாழ்க்கையின் நாதத்தை நமக்குச் செவி மடுக்க வைக்கிறது.
• உழ வேண்டும் நாளை
பேசினான் மனசுக்குள்
பெய்யும் மழை
• பேதம் பார்க்கவில்லை
எல்லாரோடும் பயணிக்கிறது
இரவில் ஒற்றை நிலா
• கொஞ்சம் மழை
கவிதை எழுத எண்ணிய
காகிதத்தில் செய்தேன் கப்பல்
இதுபோன்ற ஹைக்கூ கவிதைகள் நெஞ்சில் நிறைந்தன....
வாருங்கள்...ஹைக்கூ உலகம் ....கவிதைத் தொகுப்பில் கவிஞர் வேலூர் இளையவன் அவர்களின் கவிதைகளை ரசிப்போம் ருசிப்போம் வாழ்வியலின் தடம் அறிவோம்.
........தொடரும் ( நாளை இந்த தொகுப்பின் ஆசிரியர் முனைவர் ம.ரமேஷ் அவர்களின் ஹைக்கூ கவிதைகளில் மூழ்கி முத்தெடுப்போம்...!)
......கா.ந.கல்யாணசுந்தரம்

கருத்துகள் இல்லை: