வியாழன், 19 ஜூன், 2014

பெயர் சொல்லி

ஆயிரம் திருநாமம்
உமக்குண்டு என்பார்
ஒரு நாமமும் எளியேன்
நான் அறியேன்
எமை ஏற்று
அருள்வாயா...
என்பார் சிலர்

உன் ஒரு நாமமன்றி
வேறொரு நாமம்
ஒருநாளும் உரையேன்
அடியேன் என்னை
ஏற்றுக்கொள்வாயா
என்பார் சிலர்...

உன் பெயர்
சொல்லிச்சொல்லி
என்பெயர்
மறந்துபோனேன்
உன் உள்ளத்து
உண்டோ எமக்கிடம்
என்பார் சிலர்

உன்பெயர் கொண்டு
என்பெயர் அழித்து
உன் பெயரே
என் பெயராய்
கொண்டுவிட்டேன்
என்பார் சிலர்

இட்டப்பெயர் ஒன்று
இட்டுக்கொண்ட பெயரும் உண்டு
பட்டப் பெயர் ஒன்று
பதவிப் பெயர் ஒன்றென
எத்தனையோ பெயர்
இருந்தும்
இன்னும் பெயர் தேடி
அலைவோர் சிலர்

பேர் போன ஆளாய்
ஆனதன் பின்னால்
பெயரில் என்ன
பெயரின்றி வாழ்தலே
சுகமென சொல்வார் சிலர்

பெயருக்கும் பேருக்கும்
இடைப்பட்ட பெரும் வாழ்வு
வாழ்ந்து முடிக்க
தேவை யென்றாகிறது

பெயரில் என்ன இருக்கு
பெயர்சொல்லி அழைப்பதில்
இருக்கு நெருக்கம்.


கருத்துகள் இல்லை: