செவ்வாய், 29 ஏப்ரல், 2014

எனது ராஜ்ஜியத்தில்

உமது வசிப்பு
எனக்கான ராஜ்ஜியத்தில்
உமது வசிப்பு
எவ்வளவு
சுதந்திரமாகவும் இருக்கலாம்
எனக்கான ராஜ்ஜியத்தில்

உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறும் வரை
செயற்படுத்தும் வரை
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்

உன் கண்களால்
என்னை மட்டும் பார்
உன் செவிகளால்
என் புகழை மட்டும் கேள்
என் குரல்கொண்டு
என் பெருமை மட்டும் பாடு-பேசு

உனது இருப்பு
மிகவும் மிகவும்
சுதந்திர மானதாய் இருக்கும்


உன் கண்கள் காண்பது
என் புறத்தை என்றால்
குருடாக்கப்படும்

செவிகள் கேட்பது
எமக்கெதிரானதெனில்
செவிடாக்கப்படும்

உமது குரல்
எம்மை எதிர்ப்பதெனில்
குரல் வளை
நசுக்கப்படுவாய்

எம்மை எதிர்த்தப்பயணம்
செய்தால்
முடக்கி வைக்கப்படுவாய்

வெளிச்ச ரேகைகள்
அற்ற
இருள் உலகில்
வாழ வேண்டி வரும்

உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறட்டும்
செயற்படுத்தட்டும்

அதுவே
உமக்கும் நல்லது
எமக்கும் நல்லது
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்

எமக்காக மட்டும்
நீ வாழும் வரையில்
சுதந்திரமானது
உன் இருப்பு
எனது ராஜ்ஜியத்தில்.

 -மோ(ச)டி கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான ஷப்பனம் ஹாஸ்மி -க்கு இது




கருத்துகள் இல்லை: