சனி, 24 மார்ச், 2012

பொம்மைகள்

எத்தனையோ பொம்மைகள்
இருந்தும்
அவனுக்கு மிகவும் பிடித்தது
மரக் குதிரைதான்.

மனம் மகிழும் போதெல்லாம்
அதன் மீது
ஏறிக்கொள்வான்
ஓட்டிக் கொண்டிருப்பான்
வேக வேகமாய் ஓட்டுவான்.

மகிழ்ச்சியின் உச்சத்தில்
தடவிக் கொடுப்பான்
முத்தம்கூட கொடுப்பான்

விருப்பத்திற்கு மாறாய்
இடறி விட்டாலோ
திட்டுவான்
அடிப்பான்
எட்டிக் கூட உதைப்பான்

இப்போது அவன் 
வளர்ந்து 
பெரியவன் ஆகிவிட்டான்.
இருந்தும்
குதிரை விளையாட்டுதான்
அவனுக்கு மிகவும்
பிடித்தமானது

குதிரையின் இடத்தில்
மனைவி.

வியாழன், 22 மார்ச், 2012

நாய்கள்


நாய்கள்
சற்றே கவனமாய் இருங்கள்
இங்கு நாய்களின்
தொல்லை அதிகம்
நாய்கள் ஜாக்கிரதை
பலகைகள் இருக்குமிடம்
இல்லா இடம்
எங்கும் தொல்லை
நாய்களால்.
கனிவாய்
வாலாட்டும் சிலநேரம்
வளைந்து குழைந்து
முகம் நக்கும் சிலநேரம்
சலாம் சொல்லி
கால் தூக்கி
கடமை பாவணை சிலநேரம்
மூர்க்கமாய்
குரைத்துப் பிடுங்கும்
சிலநேரம்
இந்த நாய்களே இப்படித்தான்.
புணர்ச்சி வேண்டின்
தெருத் தெருவாய்
அலைந்து திரியும்
வேண்டாப் புணர்ச்சியாயின்
அடுத்ததன் புணர்ச்சியையும்
கெடுக்கும்
இந்த நாய்களே இப்படித்தான்
தெரு நாய்
சொறி நாய்
வெறி நாய்
அல்சேசன் பொமெரியன்
இன்னும் இத்தியாதிகள்
எத்தனை வகைகள்
இந்த நாய்களில்.
தின்றதைக் கக்கி
தின்னும் நாய்கள்
நிறைந்தே இருப்பினும்
நக்கிக் கிடக்கும் நாய்கள்
கல்லோ சிலையோ
காண்பது எதுவென்றாலும்
கால் தூக்கும் நாய்கள்
இந்த நாய்களே இப்படித்தான்.
கிடைத்தால்
நடிகை மடி
கிடைக்காவிட்டால்
கந்தல் துணி கடி
இருந்தால்
பால் சோறு
இல்லா விட்டால்
பானை ஓடு
எல்லாம் ஒன்றுதான்
இந்த நாய்களுக்கு.
எல்லாம் சரி
எப்போது குழையும்
எப்போது குரைக்கும்
எப்போது புணரும்
எதுவும் புரிவதில்லை
இந்த நாய்களே இப்படித்தான்.

பாகுபாடு


நானும் அவனும்
ஒரு தாய்
வயிற்றுப் பிள்ளைகள்

சாப்பிட
இன்னும் கொஞ்சம்
அவனுக்கு
சாப்பிடும் முன்னே
கொஞ்சமா சாப்பிடு
அப்புறம் 
குண்டா அசிங்கம்
எனக்கு.

என்னமா
துள்ளி குதிக்கிறான்
பையன்.
கண்டபடி எகுறாதே
அடக்கமா 
என்னை.

சுமாராதான்
இன்னும் கொஞ்சம் 
படிச்சா ஆகும்
அவன்.
நல்லாதான்
இருந்தும்
நமக்கென்ன லாபம்
என்னை.

தூங்கும்போதும்
நாளெல்லாம் ஆட்டம்
அசந்து... அவனுக்கு
இப்படியா
கைவேற கால்வேறன்னு
முடங்கி இரு...பொண்ணா.

சிறகுகள் பொதுவென்றாலும்
பட்டாம்பூச்சியாய்
அவனையும்
கூட்டுப்புழு நிலையிலேயே
என்னையும்.

நானும் அவனும்
ஒரு தாய்
வயிற்றுப் பிள்ளைகள்
ஒருதாய்
பிள்ளைகள் என்பதைத் தவிர
வேறெதிலும் இல்லை
ஒற்றுமை.

வடாம்


அதெல்லாம் ஒரு காலம்
இப்ப
யாரு செய்யுறா சொல்
கேட்டா... கேட்கும்போதே
சண்டைக்கு...வார்த்தைகளை
வாய்க்குள் முழுங்கிக் கொண்டிருந்தாள்
அம்மா.

கொஞ்சமாச்சும்
சும்மான்னு இருக்காங்களா
தின்ன ருசி...
எப்பவும் ... எதுவாச்சும்
முணுமுணுத்துக்கிட்டே
அதுக்கெல்லாம் 
யாருக்கிருக்கு
சொல்லுங்க நேரம்...
பேசமா... மனைவி.

பாட்டி என்னமோ 
சொன்னாங்களே
அது என்ன 
வாடாம்
சொல்லுப்பா
மகள்.

யாரிடம்
எப்படி எதைச் சொல்ல
தின்ற ருசியை
தின்ன ஏங்கும் மனதை
தின்னவே இல்லை யென்றான
நிலையை
அம்மாவிற்கும்
மனைவிக்கும் 
மகளுக்கும்
ஒருசேர
நான்.

*தலைப்பு உதவி நடராஜன் கல்பட்டு நரசிம்மன் அவர்கட்கு நன்றி.

ஏசுவின் நிறம்?


பனி சிந்தும்
டிசம்பர் பொழுதில்
கண் விழித்துப் பார்த்துக்கிடக்கிறாள்
நம்பிக்கை நட்சத்திரத்தின் வழியே
என் நீக்ரோப் பாட்டி
மாட்டின் தொழுவத்தை.
ஒன்றும் மரியாளுக்கு
பிரசவப் பத்தியம்
பார்க்கும் நோக்கில் அல்ல.
இந்த முறையேனும்
பிறக்கும் ஏசு
கறுப்பனா? வெள்ளையனா?
நிறம் பார்க்க...

மறைத்தல்


எதை எதையோ
எப்படி எப்படியோ
தொடங்கி
கடைசியாய் சேரும்
மறைத்தலில்
மனசும்.

இன்னும் பெண்


தீயில் இறங்கினால் காப்பியத்தில்.
கூடையில் சுமந்தாள் புராணத்தில்.
காலில் இருந்து
கழட்டிக் கொடுத்தால் கதையில்.
நித்தம் நித்தம்
அடிபட்டு மிதிபடுகிறாள்
கடைத் தெருவில்-
பேருந்து நிறுத்தங்களில்-
குடுபத்தில்  என எல்லா இடங்களிலும்-
நேரில்-
மறுதிலிக்கும் போது
அடுத்தவனொடு
தொடர்பு படுத்தப்படுகிறாள்.
மானமிழக்கிறாள்
கட்டியவனாலேயே.
காலம் காலமாய்
பாழாய் போன
புருஷனுக்காய்
எல்லாவற்றையும்
சுமக்கிறாள்
பெண்.

முரண்


ஒற்றுமையே பலம்
சொல்லிக் கொண்டாலும்
வேற்றுமையில் தான்
அறிய முடிகிறது
பிரிதொன்றைப் பற்றி
பிரிதொருவர் பற்றி
மரம்
செடி
கொடி
கிளை
இலை
தண்டு
வேர்
மனிதரெனில்
முகம்
மூக்கு
 முழி
 பல்
சொல்லென்று

வாழ்வின் பெரு நடை

உத்தியோகத்தில்
யாரும்
எளிதில் நெருங்கமுடியாத
சிம்ம சொப்பனம்.
விதிகளைக் குறித்து
எழுதுவதில்லை
புலி என்று பெயர்.
யாரிடத்தும் எதற்கும்
கெஞ்சிக் குழைந்த தில்லை
பொன்னம்மாளைத் தவிர.
ஏழாவதாய்ப் பிறந்த பிள்ளைக்கு
குலதெய்வத்தின் பெயரை
வைத்த திருப்தி மனசுக்குள்
முனியசாமி என்று.
தன்
மூன்று மகளுக்கும்
நல்ல இடத்தில் மாப்பிள்ளை
பார்த்துக் கொடுத்ததில்
மனநிறைவு எப்போதும் உண்டு.
பிள்ளைகள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு துறையில்
பேர் சொல்லும் படி இருப்பதைக்காண
பொன்னம்மா இல்லையே என்பதைத்தவிர
வேறொரு குறையில்லை
கந்தசாமிக்கு.
தன் வயதைக்காட்டி
மகள் பெத்த பேத்திக்கும்
மகன் பெத்த பேரனுக்கும்
கல்யாணம் முடித்த ஆனந்த கூத்து
நிழலாடும் நினைக்கையில்.
இப்படி எல்லாம் முடிந்தது என்றாலும்
விடாது தொடர்கிறார்
விடியற்காலை நடைபயிற்சியை
இன்னும்
கொஞ்ச நாள் உயிரோடு இருப்போமென்று.

பொய் பேச்சு

பொய் பேச்சு
உனக்கு நானும்
எனக்கு நீயும்
சொல்லிக் கொள்கிறோம்
மற்றவர்களும்
அவரவர்
எதிர் நபரிடம்
சொல்கிறார்கள்.
நியாயத்தின் பக்கம்
நிற்கிறோமென்று.
எல்லோரும்
நியாயத்தின் பக்கமெனில்,
அநியாயத்தின் பக்கம்
எவர் சொல்?
எனக்கு நீயும்
உனக்கு நானும்.

பயம்கொள்


கரப்பான் பூச்சுக்கு அடுத்து
என்னோடு
அதிகம் உறவாடும் உனக்கு
பயம் கொள்
அச்சம் தவீர் என்பதெல்லாம்
அடுத்தவனுக்கே
பயம் கொள்
ஊறும்
உர்..ர் என்று பறக்கும்
பறக்கும் வேளை
மறக்கலாமென்றால்
தொடர்ந்து ஊறும்
மனசுக்குள்
அச்சம் தரும்
அச்சம் தரவென்றே
அப்படியொரு நிறம் கரப்பான்பூச்சிக்கு
கருப்புமில்லாமல்
சிகப்புமில்லாமல்
மிரட்டும்படியாய்
அமைந்த மீசை
சொல்வாய் நீ
மருந்து வைக்கலாம்
மருந்து வைத்த
சுவடே தெரியாமல்
காற்றில் கலந்த
மணத்தில் கொல்லலாமென
இருந்தும் தொடரும்
அச்சம்
நாளை நம்மை
யாரேனும்
இப்படிக் கொன்றால்
பயம் கொள்
அச்சம் தவீர்
அடுத்தவனுக்கு.

சினிமா சினிமா


முந்தா நேத்து குந்திகினு
சும்மா இல்லாம
குச்சிக்கினே படம் பாக்க
கௌம்பி போனங்க
முட்டி மோதி
சட்டை கிழிஞ்சி
சீட்டு வாங்கினு
தலை வட்டம் போடும்
பேனு பாத்து ஒக்காந்த போங்க
விசிலடிச்சான் விசிலடிச்சான்
ஒண்னும் நடக்கல
பட்டுன்னு ஒரு சோ் உதைச்சான்
ஓனர் மவன் படத்தப் போட்டுடான்
மொத மொதல்ல எழுத்து ரீலு தாங்க வந்திச்சி
அப்புறம் தெரை முழுக்க
எம்மா பெரிய கிராமம் தெரிஞ்சிச்சு
இம்மா பெரிய கிராமமானு பக்கத்துல கேட்டன்
அட நீ ஒன்னு
வெவரமில்லா கிராமத்தான் போல
இது சினிமா ஸ்கோப்
சொல்லிகினே படத்துக்குள்ள
முழுகி பூட்டாங்க
சின்ன பையன் சின்ன பொண்ணு
சோடி காட்டுனான்
கண்ண திறந்து மூடுமுன்னே
பாட்டும் பாடுனான்
வழி முழுசும்
வாழை மரம் தென்ன மரந்தான்
அட அதுக்குள்ள சண்டப்போட்டு
எல்லா காலிதான்
அக்கம் பக்கம் இருந்தவன்லா
நெளிஞ்சிக்கிட்டாங்க
என்னடான்னு உத்துப் பாத்தா
சண்ட சூப்பராம்
அப்புறமா திரும்ப ஒரு பாட்டு வந்திச்சி
அதுக்கப்புறமா இன்டர்வெல் நேரம் வந்திச்சி
பண்ணையாரு பொண்ணு அது
ஏழை மவனுங்க - பையன் ஏழை மவனுங்க
பாதிபடம் இப்படிதான்
நகர்ந்திச்சி போங்க
என்ன பண்ணா ஏது பண்ணா
ஒன்னும் தெரியல
பாத்தா பணக்காரன் ஆயிட்டான்
பையன் தாலி கட்டிட்டான்
தாலி கட்டும் போது திரும்ப ஒரு
சண்ட அடிச்சாங்க
அப்புறம்
கட்டில் போட்டு காலுப் போட்டு
பாட்டுப்படிச்சாங்க
கதை முடிஞ்சி கனவு முடிஞ்சி
ஜனங் கௌம்பிச்சி
கண்ட கண்றாவியில்
மனசெல்லாம் வாடி வதங்கிச்சி
நா
முந்தா நேத்து குந்திகினு
சும்மா இல்லாம.

தமிழ்நாடு + இந்தியா = டாஸ்மாக்


எங்க தேசம்
பாரத தேசம்
மன்னிகவும்
தண்ணி தேசம்

மழையோ மதுவோ
தண்ணியில் கிடப்பதே
தவமென நினைப்பு

எல்லாம் கேடு
என்றபோதும்
அரசாங்கம் விற்றால்
நல்ல சரக்கு
அடுத்தவன் விற்றால்
கள்ளச் சரக்கு.

மக்கள் போடும்
பட்டையில்தான்
மக்கள் நல திட்டங்களே

இவன் பட்டை போடவில்லையெனில்
சர்க்கார் போடும்
மக்களுக்கு நெற்றியில்
பட்டை பெரிதாய்.

மக்களின் வயிறுமட்டுமல்ல
கஜானா வயிறே
தண்ணியில்தான் நிரம்புகிறது.

தண்ணியில் கிடப்போம்
தண்ணியில் மிதப்போம்
தண்ணியே சகலமும்
இன்பம் துன்பம்
இணைந்த ஒன்று.

செத்தாலும்
ஜல சமாதியே
மோட்சம் என்போம்.

கோடிகளும்
கேடிகளும்
சங்கமமாகும்
சமுத்திர வெளியிது.

விற்றாலும் சாதனை
செத்தாலும் சாதனை
தண்ணியில் நடக்கிறது.

எப்போது
நூறடிப்பான்
தெண்டுல்கர் என்ற ஏக்கம்
இதில்லை
எப்பொழுதும்
நூறுகளைத் தாண்டியே
குடிமகன்கள்

ஆடுவது
அவர்கள் மட்டுமல்ல
இவர்களும்
ஆட்டத்தை கொண்டாடுவதெனில்
கொண்டாடுங்கள்
இவர்களையும்.

சொல்லப்போனால்
அவர்கள் மறைக்கலாம்
வரிகட்ட வரு மானத்தை
இவர்கள் மறைப்பதேயில்லை
வேட்டி கட்டி மானத்தைக்கூட.

எங்க தேசம்
தண்ணி தேசம்
மன்னிக்கவும்
பாரத தேசம்.

(ஒரு நாள் விற்பனை 154 கோடி என்ற சாதனை செய்தி எதிரொலி)

பொங்கலோ பொங்கல்


புகையில்லா போகி
இருக்கிறதோ
இல்லையோ
பகையிலா போகி
கேட்போம்

பழமையோ
புதுமையோ
வேண்டும்
பொதுமை நாட்டில்.

பொங்கினால்
வீட்டிலே
பொங்கலும் பொங்கலா
பொங்கினால்
நாட்டிலே
சமத்துவம் பொங்கல்தான்
பூசினால் வீட்டிலே
வெண்மையை
பொங்கலும் பொங்கலா
போற்றினால்
செம்மையை
நாட்டிலே பொங்கல்தான்

மாடுகள் முட்டிக்கொள்வது
இருக்கட்டும்
மனிதர்கள்
நாம்
மோதிக்கொள்ளாமல்
இருப்போம்

காணும்
பெரியோரை
கால் வாரி விடாமல்
கனிவாய்
வணங்குவோம்
பொங்குமே
இன்பம்
நாளும்
பொங்கலோ பொங்கல் என்று.

நடைமுறைகள்


எங்கும்
எவ்விடத்தும்
எல்லா தருணங்களிலும்
ஆள் தேடி
முகம் பார்த்து
தலை சொரிந்து
பல் இளித்து
வலைந்து நெளிந்து
குழைந்தே
காரியம் நடக்க...
அப்புறம்
என்ன மயித்துக்கு
சட்டம் சடங்கு
சொல்... நமக்கு.