செவ்வாய், 20 அக்டோபர், 2015

பூ அழகு

பூ அழகு இதழ்கள் சேர்ந்து இருக்கும் வரை
ஒவ்வொன்றாய் இதழ்கள் குறைய
பூவுமில்லை அழகுமில்லை.

காலம்

நெல்லா...புல்லா...
முடிவு செய்யும்
காலம்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வாக்கு தேடு

ஊர் ஊருக்கு போடு ரோடு
போடும்போதே தேர்தல்
வெற்றிக்கு வாக்குகள் தேடு.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

மகாத்மா முதல்...

நெருங்கி விட்டது தேர்தல்
நொருங்கப் போகிறது
கொள்கைகள்

கணக்கு வழக்கு
கணிப்பொறி கணக்கு
புள்ளி விவர கணக்கு
எல்லாவற்றையும்
ஊதித்தள்ளப்போகிறது
மக்களின் கணக்கு.

ஓட்டுக்கு எவ்வளவு
தேறும் என்பதுதான்
இப்போதைய கணக்கு.

மக்களை கணக்குபண்ன
மன்னர்கள் யாத்திரை
செய்கிறார்கள்.

ரத யாத்திரை
மசூதியை இடித்தது
நமக்கு நாமே யாத்திரை
என்ன செய்யப்போகிறதோ...
கட்டியணைக்கிறார்
உம்மா கொடுக்கிறார்
இதுவரை பார்க்காத அத்தனையும்
ஆச்சரியத்தோடு பார்க்கிறார்.

செல்லும் வழியெங்கும்
மக்கள் கூட்டம்
கலைந்த பின்னே
குவார்ட்டர்கள் கூட்டம்.

மதுவின் ஆசிகளோடு
யாத்திரை நடக்கிறது
நம் பகுதிக்கும் வரலாம்
நமக்கு கிச்சு கிச்சு
மூட்டவும் செய்யலாம்.

மயானக் கொள்கைக்கு
மக்கள் கூடுவார்கள்
கிரானைட் கொள்கைக்கு
அதிகாரிகள் கூடுகிறார்கள்...

50 வருட கொள்ளை
இரண்டு ஆட்சியாளர்களுக்கும்
நன்கொடை.

தோண்ட தோண்ட
நீர் வந்தது அந்தக் காலம்
பிணங்கள் வருவது இக்காலம்.

அசகாய சூரர்தான்
சகாயம்...
பிணங்களுக்கும் நீதி கேட்கிறார்...

மலைகளை பிளந்தார்கள்
ஆறுகளை சாலையாக்கினார்கள்
மண்ணுக்குள் ஒளிந்திருந்த நீரை
தேடியெடுத்து விற்றார்கள்.

தேசம் நம்முடையதுதான்
தேசத்தில் உள்ளவை மட்டும்
அந்நியர்களுக்கானது

தமிழ்நாடு
தண்டநாடாக மாறும் காலம்
வெகுதூரமில்லை.

வியாபாரிகள் தாம்
ஊர்ஊராய் பறப்பார்கள்
நமது பிரதமரும்
நாடு நாடாய் பறக்கிறார்.

பொருளை விற்பவர்கள்
வியாபாரிகள்
நாட்டையே விற்க முனைபவர்
பிரதமரா?

விவசாயிகளின் தற்கொலையை
ஊடகங்கள் பெரிதாக்குகிறதாம்
நிலம் இருந்தால்தானே
அவன் விவசாயி
நிலத்தையும் பிடுங்கிவிட்டால்
அவன பரதேசி.

நில அபகரிப்பு சட்டம்
பதுங்கிய புலி போல்
காத்திருக்கிறது?
எந்த நேரத்திலும் பாயலாம்.

மதத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
இனத்தின் பெயரால்
பிரித்தாளும் சூழ்ச்சி
பிரமாதமாய் அரங்கேறுகிறது.

மகாத்மா முதல்
நேற்றைய கல்புர்க்கி வரை
கொலைப் பட்டியல்
அனுமன் வாலாய்
நீண்டு கொண்டே போகிறது

கொலை வாளினை எடடா
கெட்ட கொடுங்கோல்
செயல் அறுந்திடவே

பாரதிதாசன் வாக்கு
பொய்க்கப் போவதில்லை.
வரட்டும் பார்க்கலாம்.

(காந்திஜெயந்தி கவியரங்கில் சகுவரதன் பாடியது)

அம்மா-அப்பா

பசுவைக் கொன்றால் அது பாவம்
கறி தின்றானென மனிதனை
கொன்றால் அது அகம்பாவம்.

சாலைகளெல்லாம்இருக்கு குண்டும்குழி
இப்படியே அதில் போன
சட்டெனப்போவோம் சவக்குழி.

எல்லா பொருள்பெயரிலும் அம்மா
அதனால்தானோஎன்னவோ
டாஸ்மாக்-கில் கிடக்கிறான் அப்பா.

வியாழன், 1 அக்டோபர், 2015

காந்தி

காந்தி தாத்தாவே
உம்மிடம் ஒரு கேள்வி
உன் புன்னகையின் பொருள்
என்னதான் தாத்தா...

உழைத்தவன் பணத்திலும் இருக்கிறோம்
ஊழல் பணத்திலும் இருக்கிறோம்
என்பதை எண்ணித்தானே...

அன்று
தொண்டினை வளர்க்க
நினைத்தவன் நீ
இன்றோ
துண்டினை வளர்க்கவே
நினைக்கின்றார்...

காந்திய வழியா
கோட்சே நெறியா...சில
குள்ள நரி கூட்டம்
கோட்சேவையே நாடும்.
எனவே தான்
சிலை வைக்க நினைக்கின்றார்
உன் கொள்கைக்கு
உலை வைக்க துடிக்கின்றார்.

மூவர்ணக் கொடியா...
நால் வர்ண முறையா...
கயவர் உள்ளம்
மூன்றைவிட நான்கே
பெரிதென எண்ணும்.

ஒன்றுமட்டும் உண்மை
உன் சிலை மீது
எச்சமிடும் காக்கையையும்
விரட்டாத உன் கைத்தடி...
நடுவீதியில் நள்ளிரவில் அல்ல
பட்டப் பகலிலேயே
பாழ்படுத்தும் பெண்களையும்
காணாத கண்ணாடியென
இவர்கள்
அஞ்சாமல் இருக்கலாம்.

ஆனால் ஒருநாள்
அதுவும் வாய்பேசும்
அப்போது இவர்கள்
முகமூடி உடையும்
காவி தேச முயற்சி முறிந்து
காந்தி தேசம் நிலைக்கும்.

தாத்தா

காந்தி தாத்தா
சுதந்திரம் தா தா என
வாங்கி தந்த தாத்தா

குழல்

பாடிக் கொண்டிருக்கிறது
மூங்கில் காடே பற்றி எரிந்த சோகத்தை
ஓர் புல்லாங்குழல்.