வியாழன், 31 அக்டோபர், 2013

வாழும் நரகாசூரர்கள்

என்றோ எப்போதா
வாழ்ந்து
மடிந்தானாம்
நரகாசூரன்

இன்றும் அதற்காய்
குளித்து தலைமூழ்கி
உடுத்தி வெடித்து
விதவிதமாய்
கொண்டாடி மகிழ்கிறார்கள்

எங்கே மறைந்தான்
மாறும் உலகத்தில்
மாற்றம் கொள்கின்றான்
நரகாசூரன்

மணமாகாப் பெண்களுக்கு
மாப்பிள்ளை கோலத்தில்
வரசட்சணை சிக்கலாய்

படித்து முடித்த
இளைஞர்கட்கோ
வேலையில்லை என்பதாக

சம்சாரிக்கும்
சாமான்யனுக்கும்
விலைவாசி எனும்
ரூபம்

ஒட்டுமொத்த
தேசத்திற்கு
ஊழல் என்ற பெயராலே

என்றொழிவான்
இந்த
புது வடிவ
நரகாசூரன்

குளித்து ஒருவழியாய்
தலைமூழ்கி
தொலைக்கச் சொல்வீர்.

சனி, 26 அக்டோபர், 2013

நவீன காதல்

நாலா எட்டா
இல்லை இல்லை
பதினாறா
மடிச்சி கொடுத்திருக்கேன்
சீட்டு
சீட்டு இல்லே
மனசு...
பிடிச்சா வச்சுக்க
இல்லாட்டி
திருப்பிக்கொடு
வேறொரு ஆளுக்கு
கொடுக்க.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

வித்தியாசம்.

வசதிபடைத்தவன் கல்யாணம்
வானவெளியில் - விமானத்தில்
காசுபணக்காரனின் விருந்து
கடலுக்கு நடுவில் தண்ணீராய் செலவு
ஏழைப் பெண் குழந்தை பெற்றாள்
ஓடும் 108-ல் நடுரோட்டில்.

நாடே கவலைப் படுகிறது
கோடி கோடியாய்
சேர்த்துள்ள சச்சின்
நாற்பது வயதில்
ஓய்வு பெறுவதை எண்ணி
அறுபதும் எழுபதும்
தாண்டிய பிறகும்
உழைத்து வாழும்
பெற்றோர்களை எண்ணாது.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வீடும்-கூடும்

உற்றார் உறவினர்களுக்கோ
உள்ளுக்குள்
பொறாமை இருந்தாலும்
வெளியில் சொன்னார்கள்
மகிழ்ச்சி அடைவதாய்

கட்டியவளுக்கோ
கடன் பட்ட
கவலை
உள்ளுக்குள் என்றாலும்
ஓர்
ஆனந்தம்
சொந்தமாய் ஆனதென்று

நண்பர்களுக்கோ
என்னடா
எப்போ
இதுக்கொரு
பார்ட்டி
என்பதானது
(ஒரு சிலர் கொடுத்து உதவியிருப்பினும்)

மகள் மட்டும்
அப்பா
பறவைகள் எல்லாம்
எங்கே போயிருக்கும்
பாவம்
சொல்லுப்பா
எங்கே போயருக்கும்

நாம்தான்
இங்கிருந்த
மரத்தை வெட்டிவிட்டு
வீடு கட்டி விட்டோமே
கண் கலங்க
நெஞ்சம் நெகிழ
கைப் பிடித்துக் கேட்கிறாள்
உண்மையாய்.




வியாழன், 10 அக்டோபர், 2013

எதிர்திசையில்

ஒரு போதும்
சொற்பேச்சு
கேட்பதில்லை
கிளம்பியதும்
கிளம்புகிறது
எதிர்திசையில்
மரம்

புதன், 9 அக்டோபர், 2013

மரம்

மரம்

தளிர்
மரம்
பூ
மரம்
காய்
மரம்
கனி
மரம்
கவிதை தரும்
மரம்

மரம் போல்
யாரால்
எழுத முடியும்

நீண்டு
விரிந்த
ஓர் அழகிய
கவிதை

கவி
மரம்.