வெள்ளி, 31 மார்ச், 2017

சலவைக்காரன்

அழுக்கும் சோறு போடும்
நம்பிக்கையாய் இருக்கிறது
சலவைக்காரன் வயிறு.

சனி, 25 மார்ச், 2017

மீனவன்-4

கரை வந்த மீன்கள்
மீனவர் துயர் கண்டு
துவண்டு மடிகிறது.

மீனவன்-3

தினம் நடக்கும் போராட்டம்
மீனவனோடு மீன்களுக்கு
வலைவீச கடலில்.

மீனவன்-2

வலை வீசி தேடுகிறான்
கடலில் தினமும் மீனவன்
கிடைக்குமா தொலைந்த  வாழ்வு.

மீனவன்-1

ஈரமான வலை
காய வைக்கும் மீனவன்
காய்ந்தே கிடக்கும் வயிறு.


திங்கள், 20 மார்ச், 2017

மனம்

ஒன்றும் கொண்டு செல்லவில்லை
எதையோ விட்டுத்திரும்புகிறேன்
சென்ற இடத்தில் மனம்.

கவலை

தோளில் அமர்ந்தது பட்டாம்பூச்சி
காணாமல் மறைந்தது
மனக் கவலை.

வெள்ளி, 17 மார்ச், 2017

சாயல்

பேரப்பிள்ளையின் முகம்
உற்றுப்பார்க்கும் பாட்டி
தெரியுமா பாட்டன் சாயல்.

மகள்

மகளின் கிறுக்கல்கள்
தெரியும் அப்பாகளுக்கு
பிக்காஸோ ஓவியம்.

நிலா

பதறி துடிக்கும் குழந்தை
காப்பாற்றுங்கள் என்று
கிணற்றில்விழுந்த நிலா

வியாழன், 16 மார்ச், 2017

காகம்

ஒருபோதும் வருந்தாது
உழைப்பு வீண் என்று
குயிலை அடைகாத்த காகம்.

கூடு

எந்த கடனுமில்லை
கட்டி முடித்தானது
தூக்கணாங் குருவி கூடு

சனி, 11 மார்ச், 2017

உப்பு

மூத்தோர் சொல் பொய்க்காது
உப்புதின்னா தண்ணி குடிக்கணும்
உத்திரபிரதேசத்து மக்கள்.

மார்ச் 8

நானும் அவனும்
ஒரு வயிற்றில்
பிறந்த பிள்ளைகள்
 என்பதைத் தவிர
வேறெதுவும்
ஒன்றாய் இருந்ததில்லை
எனக்கும் அவனுக்கும்.

உண்ணும் உணவு
உடுத்தும் உடை
படிக்கும் இடம்
படிக்கும் மொழி
ஆடும் விளையாட்டு
பார்க்கும் இடம்
என எல்லாமும்
வேறு வேறாய்...

கேட்கும்போதெல்லாம்
சொல்கிறார்கள்
அவன் ஆண்பிள்ளை
நீ பொண்ணு.

சொம்மா ஒரு
பேச்சுக்கு
சொல்லி  வைக்கிறார்கள்
மகளீர் தின
வாழ்த்துகள் என்று.

 என்றைக்கு
எல்லாம்
எல்லாருக்கும்
ஒன்றென ஆகுமோ
அன்றுதான்
எனக்கு
மகளீர் தினம்...

அதுவரை
எல்லா நாள் போல
அதுவும்
ஒருநாளே...

ஏமாற்றம்

சொல்லிக் கொள்கிறேன்
ஏமாறும் போதெல்லாம்
அடுத்து சரியாகும்.

வாக்கு

ஊரே நீர் ஊற்ற
கொஞ்சம் பாலூற்றினர்
இரோமிற்கான வாக்கு.

புதன், 8 மார்ச், 2017

மகளீர் தினம்

நானும் அவனும்
ஒரு வயிற்றில்
பிறந்த பிள்ளைகள்
என்பதைத் தவிர
வேறெதுவும்
ஒன்றாய் இருந்ததில்லை
எனக்கும் அவனுக்கும்

உண்ணும் உணவு
உடுத்தும் உடை
படிக்கும் இடம்
படிக்கும் மொழி
ஆடும் விளையாட்டு
பார்த்த இடம்
என எல்லாமும்
வேறுவேறாய்...

கேட்கும் போதெல்லாம்
சொல்கிறார்கள்
அவன் ஆண்பிள்ளை
நீ பொண்ணு.

சும்மா
பேச்சுக்கு சொல்லி வைக்கிறார்கள்
மகளீர் தின வாழ்த்துகள் என்று.

என்றைக்கு
எல்லாம்
எல்லாருக்கும்
ஒன்றென ஆகுமோ
அன்றுதான்
எனக்கு
மகளீர் தினம்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

வேண்டுதல்

இயக்க உதைக்கப்படும் வண்டி
அண்ணனுக்கு துணையாய்
உருக்கமாய் வேண்டுகிறாள் தங்கை.

பாரம்

எழுதிக் கொண்டிருந்தேன்
ஒவ்வொன்றாய்
சொல்லச்சொல்ல
கொஞ்ச நேரத்திலேயே
கனத்தது கவிதை
அதற்கு மேல்
தாங்காது என்றானது
அத்தனை துயரங்கள்...
அவள் சொல்
எப்படித்தான்
தாங்கிக் கிடக்கிறதோ?

சனி, 4 மார்ச், 2017

ஓடம்

காத்துக்கிடக்கும் கரையோரம்
ஒவ்வொரு நாளும்
அக்கறையுடன் அக்கரைசேர்க்க ஓடம்.

வியாழன், 2 மார்ச், 2017

வாசல்-2

ஊதி அணைக்க முடியவில்லை
பற்றி எரிகிறது
ஹைட்ரோ கார்பனில் நெடுவாசல். 

வாசல்

வாசல்தோறும் நடக்கிறது
விருந்து உபசரிப்பல்ல
தமிழகத்தில் போராட்டம்.