திங்கள், 30 ஜூன், 2014

என்நிலை

எத்தனை வார்த்தைகளில்
சொன்னாலும்
ஒன்றுதான்
என்நிலை

நீள் நெடு
பயணமாய் தொடரும்
உன் இதயத்தின்
மையம் நோக்கி
என் பாதம்.

ஞாயிறு, 29 ஜூன், 2014

நடுநிசி நாய்கள்

காதல்
நடுநிசி நாய்கள்
யாரை
தூங்க விட்டிருக்கிறது
சொல்லுங்கள்.

@நன்றி தலைப்பு உபயம் சுந்தர ராமசாமி கவிதை நூல்

சனி, 28 ஜூன், 2014

ஏப்ரல் முதல் தேதியிலா சொல்...?

உமக்கு எத்தனையோ
காரணங்கள்
இருக்கும்
மறந்து போவதற்கு.

அலுவலகம் போகும்
புருஷனுக்கு
தயார் செய்து
கையசைத்து
பொய்யாக வேணும்
புன்னகைத்து...

பிள்ளைகள்
எழுப்பி
குளிக்கச் செய்து
தலைவாரி
உடை மாற்றி
பள்ளி வண்டிக்குள்
தள்ளி திரும்ப...

சொந்த பந்தம்
பாத்திரம் பட்ஷணம்
அக்கம் பக்கம்
மேலுக்கேனும்
ஒரு நிமிட
நலம் விசாரிப்பு...

ரேஷன் கடை
மளிகைப் பொருள்
துவைத்து முடிக்க
பூசை புணஷ்காரம்
ஏதேனும் என்றால்
செய்து வைக்க...

பசியை மறந்து
இயங்கிக்கொண்டிருந்தாலும்
இடையில் கொஞ்சம்
அருந்திக் கொள்ள...

மீண்டும்
பிள்ளை புருஷன்
வீட்டின் பெரியவர் என
தொடர்ந்து இயங்க...

எத்தனையோ
இருக்கும்
மறந்து போக...

ஏனோ
கிடந்து தவிக்கும்
மனம்
நாளும்...

சரி சொல்
நீயும் நானும்
காதலிக்கிறோம் என்று சொன்னது
ஒரு
ஏப்ரல் முதல் தேதியிலா...
சொல்.

செவ்வாய், 24 ஜூன், 2014

அறிவாயா என்னை?

நீ அகம் மகிழ்ந்து
சிரிக்கையில்
உன் எண்ணங்களை பிரதிபலித்து
சிரிக்க...

நீ
மனம் வெதும்பி குளுங்கி
அழுகையில்
உனது துயரை
என்னுள் வாங்கி நானும்
அழ...

உனது அசைவுகள்
எல்லாம
எனது அசைவுகளாய்
நொடிக்கு நொடி
காட்டி மயங்க...

உன் உதைப்பை
ஏற்று
மறுபடி உதைக்காது
நொறுங்க

உன்னை
வெறுமைக்கு அப்படியே
பிரதிபலித்து
நொறுங்கிப்போக
கண்ணாடிப் பொருளா...

எமக்கான மனம்
எமக்கான சிந்தனை
எமக்கான செயல்
உமக்கானது போல்
எமக்கென சிலவும்

உண்டென
எப்போது எப்போது
அறிவாய் என்னை
சொல் நீ?

வியாழன், 19 ஜூன், 2014

பெயர் சொல்லி

ஆயிரம் திருநாமம்
உமக்குண்டு என்பார்
ஒரு நாமமும் எளியேன்
நான் அறியேன்
எமை ஏற்று
அருள்வாயா...
என்பார் சிலர்

உன் ஒரு நாமமன்றி
வேறொரு நாமம்
ஒருநாளும் உரையேன்
அடியேன் என்னை
ஏற்றுக்கொள்வாயா
என்பார் சிலர்...

உன் பெயர்
சொல்லிச்சொல்லி
என்பெயர்
மறந்துபோனேன்
உன் உள்ளத்து
உண்டோ எமக்கிடம்
என்பார் சிலர்

உன்பெயர் கொண்டு
என்பெயர் அழித்து
உன் பெயரே
என் பெயராய்
கொண்டுவிட்டேன்
என்பார் சிலர்

இட்டப்பெயர் ஒன்று
இட்டுக்கொண்ட பெயரும் உண்டு
பட்டப் பெயர் ஒன்று
பதவிப் பெயர் ஒன்றென
எத்தனையோ பெயர்
இருந்தும்
இன்னும் பெயர் தேடி
அலைவோர் சிலர்

பேர் போன ஆளாய்
ஆனதன் பின்னால்
பெயரில் என்ன
பெயரின்றி வாழ்தலே
சுகமென சொல்வார் சிலர்

பெயருக்கும் பேருக்கும்
இடைப்பட்ட பெரும் வாழ்வு
வாழ்ந்து முடிக்க
தேவை யென்றாகிறது

பெயரில் என்ன இருக்கு
பெயர்சொல்லி அழைப்பதில்
இருக்கு நெருக்கம்.


செவ்வாய், 17 ஜூன், 2014

எல்லாம் நீ...

பூவின் சிரிப்பில்
இறைவன்
புழுவின் நெளிவில்
இறைவன்
அருவியின் தெரிப்பில்
இறைவன்
ஆகாய விரிப்பில்
இறைவன்
எல்லாம் எல்லாம்
இறைவன்
ஆசரம வாசிக்கு

உன்னைக் கண்ட
நாள் முதலாய்
அடியவனுக்கோ
உள்ளம் சொல்லும்
எல்லாம்
நீ
நீ
நீ என்று.

ஞாயிறு, 8 ஜூன், 2014

தலைமுறை -ஹைக்கூ

படரும் நிழல்
தொடர் பங்காளி பகை
உறவுக்கு முயலும் மரம்.

தண்ணீர் பஞ்சம்
காண்பது அரிது
அடுத்த தலைமுறை விவசாயி

உணர்த்திச் செல்கிறது
மௌனம்
வார்த்தைகளில்பிடிபடா அர்த்தம்.

உள்ளிருக்கும் பகை
உறவாடி மகிழ்கிறார்கள்
பேருக்கு வெளியில்.

திங்கள், 2 ஜூன், 2014

பீர்-பா...சென்ரியூ

அளக்க உதவுகிறது
பீர் விற்பனை
வெயில் அளவு.

தள்ளாட தள்ளாட
நிலையாய் நிற்கிறது
அரசின் வருவாய்.

போட்டியிட்டு உயர்கிறது
பீர் விற்பனை அளவும்
வெயில் அளவும்.

ஞாயிறு, 1 ஜூன், 2014

அடையாளம்


பொக்கை வாய் பார்த்து
பாட்டனே அச்சு அசல்
பாட்டி.

திருட்டு முழியப் பாத்தா
தெரியல அப்படியே அப்பன்
மனைவி.

இன்னும்
உற்றார் உறவினர்களுக்கு
அவரவர் நினைவில்
நிழலாடும் உருவங்கள்.

எதுவும் அறியாது
விளையாடும் குழந்தை

நாளை
யாரின் தாசனாய்
யாரின் பித்தனாய்
முடி வளர்த்து
மீசை மழித்து
யார் போல் இருப்பான்
சொல்.