செவ்வாய், 29 ஏப்ரல், 2014

எனது ராஜ்ஜியத்தில்

உமது வசிப்பு
எனக்கான ராஜ்ஜியத்தில்
உமது வசிப்பு
எவ்வளவு
சுதந்திரமாகவும் இருக்கலாம்
எனக்கான ராஜ்ஜியத்தில்

உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறும் வரை
செயற்படுத்தும் வரை
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்

உன் கண்களால்
என்னை மட்டும் பார்
உன் செவிகளால்
என் புகழை மட்டும் கேள்
என் குரல்கொண்டு
என் பெருமை மட்டும் பாடு-பேசு

உனது இருப்பு
மிகவும் மிகவும்
சுதந்திர மானதாய் இருக்கும்


உன் கண்கள் காண்பது
என் புறத்தை என்றால்
குருடாக்கப்படும்

செவிகள் கேட்பது
எமக்கெதிரானதெனில்
செவிடாக்கப்படும்

உமது குரல்
எம்மை எதிர்ப்பதெனில்
குரல் வளை
நசுக்கப்படுவாய்

எம்மை எதிர்த்தப்பயணம்
செய்தால்
முடக்கி வைக்கப்படுவாய்

வெளிச்ச ரேகைகள்
அற்ற
இருள் உலகில்
வாழ வேண்டி வரும்

உமது புலன்கள்
எமக்கான வற்றை மட்டுமே
கண்ணுறட்டும்
செயற்படுத்தட்டும்

அதுவே
உமக்கும் நல்லது
எமக்கும் நல்லது
மிகவும் சுதந்திரமானது
உமது வசிப்பு
எனது ராஜ்ஜியத்திற்குள்

எமக்காக மட்டும்
நீ வாழும் வரையில்
சுதந்திரமானது
உன் இருப்பு
எனது ராஜ்ஜியத்தில்.

 -மோ(ச)டி கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான ஷப்பனம் ஹாஸ்மி -க்கு இது




ஒரு வயசு

அது அதுக்கு
வேணும் ஒரு வயசு

துள்ளி குதிக்க
ஆர்பரிக்க
அமா்க்களம் செய்ய
ஓடி ஆட
ஒரு வயசு

படிக்க
பிடிக்க
நடிக்கத்தேவை
வேறொரு வயசு

காதல் செய்ய
கல்யாணம் பண்ண
கூடிக் களிக்க
குழந்தை கொஞ்ச
கொஞ்சம் கூட வேணும் வயசு

முன்பே கிடைக்கும் சிலருக்கு
கிடைத்தாலும்
என்னமா ஆட்டம்
ஏற்புடையதாகாது

வயசுக்கு முன்னோ
வயசுக்கு பின்னோ
நடப்பது ஏற்பன்று

காதல்
இருபதில் சொன்னால்
நகைப்பு
அறுபதில் சொன்னால்
வியப்பு.

இருந்தும் சொல்வர்
அது அதுக்கு வேணும்
ஒரு வயசு.

எண்ணம் தவிர

இது/அது
யாருடையது
என்னுடையது
இல்லை
என்னுடையதாய் இருக்கலாம்
இல்லை
அவருடையது
இல்லை
அவருடையதாய் இருக்கலாம்.

இல்லை இல்லை
என்னுடையதும்
அவருடையதுமாய்
இருக்கலாம்
இல்லை
அவருடையதும்
என்னுடை்யதுமாய்
இருக்கலாம்.

எதுவுமில்லை
யாருடையதுமில்லை
அவரவருடையதாய்
என்னும்
எண்ணம் தவிர.

திங்கள், 28 ஏப்ரல், 2014

ஹைக்கூ

உயிரோடு இருப்பதாய்
ஏமாறும் பறவைகள்
காவல் பொம்மை

அறுவடைக்குப்பின்னும்
கம்பீரம் குறையாமல்
காவல் பொம்மை.

காத்ததற்கு ஏதுமில்லை
கைவிரித்துக்காட்டும்
காவல் பொம்மை.

பயம் காட்டிச்சிரிக்கிறது
பறவைகளை
காவல் பொம்மை.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

ஹைக்கூ

ஜனநாயக ராஜாகள்
வாக்களிப்புக்குப் பின்
அகதிகள்.

கோடை தணிக்கும்
ஏழைகள்
கேழ்வரகு கூழ்.

பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

யானைகள் சுருங்க...

மன்னனை
மாலையிட்டு
தேர்வு செய்தும்
முன்னின்று படைசென்று
காவல் காத்ததும் யானை

கந்தனின் காதலை
கணேசனே உருவெடுத்து
சேர்த்து வைத்ததும் யானை

கோவில்கள் தோறும்
பக்தர்கட்கு ஆசிகூறி
வாழ்த்துகள் சொன்னதும் யானை

தன் நெற்றியில்
நாமமா பட்டையா?
மனிதர்கள் மோதிட பார்த்த யானை

வீதிகளில்
பாகன்களின் பசிபோக்க
பிச்சையெடுத்ததும் யானை

பலப்பலவாய்
பரிமளித்தயானை
ஊருக்குள் வந்திடுச்சி

பயிர் பச்சை காண
பட்டாசு வேட்டுகளில்
பாழ்படும் யானை

மனிதர்களின்றி
மிருகங்கள் வாழ்ந்த காலம்
மிருகங்களின் பொன்னுலகம்

மனிதர்கள் பெருக
மிருகங்கள் குறைய
மனிதரின் சுய உலகம்

யானைகள் சுருங்க
பாகன்கள் பெருக்கும்
காலம்.




செவ்வாய், 22 ஏப்ரல், 2014

வேட்பாளரின் வேண்டுகோள்...

அன்பின் வாக்காளர்களே
உங்கள் வேட்பாளன்
வேண்டுகோள்...

வாக்களியுங்கள்
வாக்களிப்பது உங்கள் கடமை
ஆட்சி செய்வது எனது லட்சியம்
வாக்களியுங்கள்.

உங்களின் தேவை
எல்லாம் அறிவேன்
வாக்களியுங்கள்...

குழந்தைகள் படிப்பு
படித்தோர்க்கு வேலை
கை நிறைய வருவாய்

குடிக்கத் தண்ணீர்
(உலகத் தேவை இது)
நல்ல மருத்துவம்
வாகனப் போக்குவரத்துக்கு
சிறந்த சாலை

சக்திக்கேற்ற வேலை
தேவைக்கேற்ற வசதி

இப்படி இப்படி
இன்னும் பல
எல்லாம் அறிவேன்

வாக்களியுங்கள்
தேவைகள் நிறைவேற்ற
வாக்களியுங்கள்

வாக்களிப்பது உங்கள் கடமை
ஆட்சி செய்வது எனது லட்சியம்

எல்லாத் தேவையும்
எல்லார் தேவையும்
எப்படி நிறைவேற்ற முடியும்
என்று எண்ணமா...

எல்லார் தேவையும்
இல்லை என்றாலும்
சிலரின் தேவைகள்
நிறைவேற்றுவேன்
வாக்களியுங்கள்

சிலரின் தேவையும்
முடியாது போனால்
எனதுகுடும்பத்தார் தேவை
அதுவுமில்லை என்றால்
எனது தேவை
நிறைவேற்றிக்கொள்வேன்
வாக்களியுங்கள்

வாக்களிப்பது
உங்கள் கடமை
ஆட்சி செய்வது
எனது லட்சியம்
வாக்களியுங்கள்....

திங்கள், 7 ஏப்ரல், 2014

வீட்டிற்குள்…



அரிதாய்
வீட்டிற்குள் இருக்கிறேன்
வீட்டிற்குள்ளிருக்கும்
எம்மிடம்

எப்பொழுதும்
வீட்டிற்குள்ளேயே
அடைப்பட்டிருக்கும்
எங்கள் நிலை
கொஞ்சமாச்சும் நினைப்பிங்களா?
ஆதங்கமாய் கேட்கும்
இல்லாளிடம்

உனக்கென்ன
எவ்வளவு பத்திரமாய்
சகலமும் அருகிருக்க
என்னைச்சொல்

அலைந்து திரிந்து
போதும் போதும் என்றாகிறது
சொல்லிக்கொண்டாலும்

வெறும் ஆளாய்
வீட்டிற்குள்

மனம் முழுதும் வெளியில் வலம் வர…