செவ்வாய், 31 டிசம்பர், 2013

பொய் முகங்கள்

 மகிழ்ந்து சிரிக்க ஒன்று
பொய்யாய்
சிரித்து மழுப்ப மற்றொன்று
குமுறி அழுதிட ஒன்று
போலியாய்
நீலி கண்ணீர் வடிக்க மற்றொன்று

பரிவு காட்டிட ஒன்று
பாசாங்கு செய்திட மற்றொன்று
பணிவு செய்ய ஒன்று
பாய்ந்து குதற மற்றொன்று

வேண்டிப் பெற்றிட ஒன்று
பெற்றதை ம(றை)றக்க மற்றொன்று
கூடி பேசிட ஒன்று
குரூரம் வளர்த்திட மற்றொன்று

கண்டு பதைத்திட ஒன்று
காணாதிருந்திட மற்றொன்று
கனிந்து உருகிட ஒன்று
கல்லாய் இறுகிட மற்றொன்று

ஆயிரமாயிரம் முகங்கள்
நொடியில் மாறிட
உண்மை முகம்
உணரும் தருணம்....?

புதன், 18 டிசம்பர், 2013

காவல் பொம்மை

கருகும் பயிர் கண்டு
கண்ணீர் வடிக்கிறது
காவல் பொம்மை.

உழுதவனுக்கொன்றுமில்லை
குறியீடாய் கைவிரிக்கும்
காவல் பொம்மை.

கண்டு சிரிக்கிறது
திணை புனத்துக் காதலர்களை
காவல் பொம்மை.

அச்சம் மறந்தனர்
திணை புனத்துக் காதலர்கள்
காவல் பொம்மை.

யாரை வரவேற்க
கைவிரித்து நிற்கிறது
காவல் பொம்மை.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மாமியும்-சாமியும்

என்ன வேண்டுமானாலும்
சொல்
எப்படி வேண்டுமானாலும்
குற்றம் சுமத்து
கைது செய்
ஆனா அதுக்கு
மாமியா இருக்கணும்

என்ன வேண்டுமானாலும்
செய்
எதை வேண்டுமானாலும்
கொடு
வெளியில் வரலாம்
ஆனா அதுக்கு
சாமியா இருக்கணும்

செவ்வாய், 12 நவம்பர், 2013

வியாழன், 31 அக்டோபர், 2013

வாழும் நரகாசூரர்கள்

என்றோ எப்போதா
வாழ்ந்து
மடிந்தானாம்
நரகாசூரன்

இன்றும் அதற்காய்
குளித்து தலைமூழ்கி
உடுத்தி வெடித்து
விதவிதமாய்
கொண்டாடி மகிழ்கிறார்கள்

எங்கே மறைந்தான்
மாறும் உலகத்தில்
மாற்றம் கொள்கின்றான்
நரகாசூரன்

மணமாகாப் பெண்களுக்கு
மாப்பிள்ளை கோலத்தில்
வரசட்சணை சிக்கலாய்

படித்து முடித்த
இளைஞர்கட்கோ
வேலையில்லை என்பதாக

சம்சாரிக்கும்
சாமான்யனுக்கும்
விலைவாசி எனும்
ரூபம்

ஒட்டுமொத்த
தேசத்திற்கு
ஊழல் என்ற பெயராலே

என்றொழிவான்
இந்த
புது வடிவ
நரகாசூரன்

குளித்து ஒருவழியாய்
தலைமூழ்கி
தொலைக்கச் சொல்வீர்.

சனி, 26 அக்டோபர், 2013

நவீன காதல்

நாலா எட்டா
இல்லை இல்லை
பதினாறா
மடிச்சி கொடுத்திருக்கேன்
சீட்டு
சீட்டு இல்லே
மனசு...
பிடிச்சா வச்சுக்க
இல்லாட்டி
திருப்பிக்கொடு
வேறொரு ஆளுக்கு
கொடுக்க.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

வித்தியாசம்.

வசதிபடைத்தவன் கல்யாணம்
வானவெளியில் - விமானத்தில்
காசுபணக்காரனின் விருந்து
கடலுக்கு நடுவில் தண்ணீராய் செலவு
ஏழைப் பெண் குழந்தை பெற்றாள்
ஓடும் 108-ல் நடுரோட்டில்.

நாடே கவலைப் படுகிறது
கோடி கோடியாய்
சேர்த்துள்ள சச்சின்
நாற்பது வயதில்
ஓய்வு பெறுவதை எண்ணி
அறுபதும் எழுபதும்
தாண்டிய பிறகும்
உழைத்து வாழும்
பெற்றோர்களை எண்ணாது.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வீடும்-கூடும்

உற்றார் உறவினர்களுக்கோ
உள்ளுக்குள்
பொறாமை இருந்தாலும்
வெளியில் சொன்னார்கள்
மகிழ்ச்சி அடைவதாய்

கட்டியவளுக்கோ
கடன் பட்ட
கவலை
உள்ளுக்குள் என்றாலும்
ஓர்
ஆனந்தம்
சொந்தமாய் ஆனதென்று

நண்பர்களுக்கோ
என்னடா
எப்போ
இதுக்கொரு
பார்ட்டி
என்பதானது
(ஒரு சிலர் கொடுத்து உதவியிருப்பினும்)

மகள் மட்டும்
அப்பா
பறவைகள் எல்லாம்
எங்கே போயிருக்கும்
பாவம்
சொல்லுப்பா
எங்கே போயருக்கும்

நாம்தான்
இங்கிருந்த
மரத்தை வெட்டிவிட்டு
வீடு கட்டி விட்டோமே
கண் கலங்க
நெஞ்சம் நெகிழ
கைப் பிடித்துக் கேட்கிறாள்
உண்மையாய்.




வியாழன், 10 அக்டோபர், 2013

எதிர்திசையில்

ஒரு போதும்
சொற்பேச்சு
கேட்பதில்லை
கிளம்பியதும்
கிளம்புகிறது
எதிர்திசையில்
மரம்

புதன், 9 அக்டோபர், 2013

மரம்

மரம்

தளிர்
மரம்
பூ
மரம்
காய்
மரம்
கனி
மரம்
கவிதை தரும்
மரம்

மரம் போல்
யாரால்
எழுத முடியும்

நீண்டு
விரிந்த
ஓர் அழகிய
கவிதை

கவி
மரம்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

உயிர்

கந்தசாமி தாத்தா
சொன்ன போதெல்லாம்
நம்பவே முடிந்ததில்லை
எனக்கு
அது எப்படி
சாத்தியம்
கதை சொல்வதென்றாலும்
ஒரு நியதி இருக்கவேண்டும்
ஒரே அடியாய்
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மனம்
மேலும் மேலும்
குழம்பிப்போகும்

துரியோதனின் உயிர்
அவன்
தொடையில் இருந்ததென்று
சொல்லக் கேட்க

உண்மையாகிப்போனது

யாரோ
எதற்கோ கல்லெறிய
கால் ஒடிந்து
தாங்கித்தாங்கி
நடந்துகொண்டிருந்த
அந்த வெள்ளாடு


உயிராய் பார்த்து பார்த்து
கவனித்த வெள்ளாடு
இறந்துபோக

மனசொடிந்து
இறந்துபோனார்
சாமிக்கண்ணு கோனார்
என்ற சேதி
சொல்லக்கேட்டு.





சனி, 24 ஆகஸ்ட், 2013

காணாமல் கவலை

ரொம்பவும்
வருத்தப்படுகிறாள்
எல்.கே.ஜி படிக்கும்
நாலு வயது மகள்
அப்பா வாங்கிக்கொடுத்த
ரெண்டு ரூபாய்
பென்சில்
காணாமல் போனதற்கு

ஒன்றுமில்லை
பென்சில்தானே
வாங்கிக்கொள்ளலாம்
வருதப்படாதே

நிலக்கரி பேர ஊழல் அறிக்கை
நம் தேசத்தின் பணத்தின் மதிப்பு
தலைவர்களின்
நேர்மை உண்மை
பெண்களின் பாதுகாப்பு
மானம் வெட்கம்
இதுவெல்லாமே
காணமால் போகிறது
கவலைப்படுகிறோமா

கவலையை விடு
என்றதும் சொன்னாள்
மகள்
நீங்கள் எல்லாரும்
பெரியவர்கள்
நான்
குழந்தை என்று.

மது தரும் உண்மை

ரொம்ப அழகு நீ
உண்மையாதான் சொல்றேன்
ரொம்ப அழகு நீ
யாருமில்லை
உன் அளவிற்கு
அழகு
ஆனாலும்
ரொம்ப மோசம் நீ
அது எப்படி
அது அப்படிதான்
ஆனாலும்
ரொம்ப மோசம் நீ
எப்போ எப்படி கேட்டாலும்
சொல்வேன்
நீ
ரொம்ப மோசம்
எனக்குத் தெரியும்
அழகும்
மோசமும்
நீ என்று
இல்லை
நான் என்று
உண்மைதான்
நீ நான்
நான் நீ
அழகு
மோசம்

எல்லாம்
நேற்றைய மதுவில்
தெரிந்த
உண்மை...

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

காத்திருப்பு

ஏதேனும் ஒன்று
காத்திருக்கிறோம்
வரப்போகும்
பேருந்திற்காய்

சிலருக்கு
அவசரமாய்
போயே தீரவேண்டிய காரியம்
சிலருக்கு
பொழுதுபோக
திரையரங்கிற்கு
இன்னும்
சிலருக்கோ
மகிழ்வுகருதியோ
அன்றி கவலைமறக்கவோ
மதுக்கூடமாய்
இருக்கலாம்

பெண்பார்க்க
பிள்ளை வீட்டார்
இலலை
ஓடிப்போக
உதவும் நட்பு

அலுவலகப்பணி
மருத்துவமனை
கோவில் குளம்
இத்தியாதிகள்
இன்னும்
எத்தனையோ
காரணங்கள் அவரவர்களுக்கு

பேருந்து வந்ததும்
முண்டியடித்து
தொங்கும் கூட்டத்தோடு
கூட்டமாய்
ஏறமுடியாதவர்

மீள
காத்திருக்கிறார்கள்
மனதிற்குள்
வேண்டியபடி
அடுத்தப் பேருந்தேனும்
வரவேண்டும்
காலியாய்...

தெரிந்தும்தெரியாதது

உங்களை
எஙகேயோ பார்த்த மாதிரி
எங்கே... எப்போ என்றுதான்
சட்டென்று  நினைவுக்கு வரல
முன் பின் பார்த்திரா விட்டாலும்
சொல்ல வேண்டி வந்தால்
சொல்கிறோம்

நெருங்கிப் பழகி
எல்லாம் தெரிந்திருந்தாலும்
ஒன்றுமே
தெரியாததுபோல்
முகம் மறைக்கிறோம்

தெரிந்தது தெரியாததுமாய்
தெரியாதது தெரிந்ததுமாய்
நகர்த்துகிறது
வாழ்க்கை.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

கனவுபட்டாம்பூச்சி

எப்போதும்
முன்பறந்து
முன்பறந்து
மனம் மயங்கும் வேளை
வாகன மோதலில்
மடியுமென்
கனவு
பட்டாம்பூச்சி

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பிடித்துப்போதல்

சின்ன வயது முதற் கொண்டே
தெரியும் மொழியாளை
மொழியாள் என்றால்
தேன் மொழியை
ஒன்றும் முத்துப் பல்
வரிசையில்லை
இருந்தும் அழகுதான்
அவள் சிங்கிப் பல்ரெண்டும்.
சிட்டுக் குருவியின் கூடுபோல்
சின்னதென்றாலும்
ஓரழகுண்டு
அவள் ஜிட்டுக்குடுமிக்கு
இருட்டுக்கும் வெளிச்சமுண்டு
அவள் கருவிழி கண்ட பின்
வந்த தெளிவு.
அது சரி
இப்படி இப்படி
எமக்கு பிடித்திருக்கு
அவளை அழகென்று
அவளுக்குப் பிடிக்க வேண்டுமே
இதுபோல்
என்னை.

எப்படிச் சொல்ல

யார் யாருக்கெல்லாம்
தம்பி பாப்பா
இருக்காங்க
வர வருஷம்
நம்ம ஸ்கூல்ல
எல்.கே.ஜி - முதல் வகுப்பு
சேக்குற மாதிரி
கை தூக்குங்க
பாக்கலாம் என்ற
மிஸ்சிடம்
எப்படிச் சொல்ல...
கல்யாணச் சந்தையில்
அதிக விலைகொடுத்து
மாப்பிள்ளை வாங்கும்
பேரத்தில்
வயதாகிப்போன
அம்மாவுக்கு
நான் பிறந்ததே
பெரிய விஷயம் என.

சனி, 17 ஆகஸ்ட், 2013

இப்படிக்கு மக்கள் பிரதிநிதி

மகாசனங்களே
ஊரில்
மழை பெய்கிறதோ
இல்லையோ


நான்
மக்கள் பிரதிநிதி
மந்திரி

மாதம்
மும்மாரி பெய்வதாகத்தான்
நாளும்  கூறுவேன்

நீங்கள்
சாப்பிடுகிறீர்களோ
இல்லையோ

மூன்றுபோகமும்
விளைச்சல்
விளம்பரப்படுத்துவேன்

இன்னும்...இன்னும்
எதுவாய் இருப்பினும்

ஆட்சிபற்றி
கேட்டால்
மக்கள் தொண்டே
மந்திரியின் வேலை
தம்பட்டம் அடிப்பேன்

நீங்கள்
மகிழ்கிறிர்களோ
இல்லையோ

நான்தான்
மக்கள்
பிரதிநிதியாயிற்றே

எல்லாரும்
மகிழ்ச்சியில்
திளைப்பதாகவே
அறிக்கைவிடுவேன்.



* ஒரு ரூபாயில் ஐந்து ரூபாயில் மக்கள் வயிறாற உண்பதாய்ச்சொன்ன அமைச்சர் பெருமக்களுக்கு சமர்ப்பணம்



முரண்பாடுகள்

எங்கள்
தலைக்கு எண்ணெய் இல்லை
தினமும்
தலைக்கு குளிக்கிறோம்
பக்தி போர்வையில்

எங்கள்
பாதங்களுக்கு செருப்பு இல்லை
ஆனால்
போட மறுப்பதாய் அடம்பிழடிக்கிறோம்
கடவுள் பெயரால்

எங்கள்
பசிக்கு உணவுதான் இல்லை
இருந்தும்
விரதமிருப்பதாய்ச் சொல்லி
கௌரவப் படுத்துகிறோம்

எங்கள்
மனித நேயங்கள் வளரவில்லை
தெய்வங்களின் புகழுக்காய்
புராணங்கள் எழுதுகிறோம்

வேறுபாடு

அன்று
நிலவை அழைத்தாவது
சோறு ஊட்டிய
அன்னை
இன்று
என்னையே
அழைக்க
மறுக்கிறாள்...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

பித்து

நேற்று அது
அதற்கு முன்
வேறொன்று
இன்று இது
நாளை...?

எதைப்
பற்றி இருக்குமோ
மனப்
பித்து

கொடு

இனியும்
உன்னிடம் பேச
எதுவுமில்லை எமக்கு
பேசி எதுவும்
விளையவில்லை என்பதாலில்லைஸ
இனி பேசுவதால்
எதுவும் விளையப் போவதுமில்லை

நான்
பேச வேண்டியவர்கள்
அதோ வெளியில்
சிதறிக்கிடக்கிறார்கள்
அவர்களிடம்
பேசப்போவது
உன்னிடமிருந்து “கொடு”
என கேட்பதற்கில்லை
“எடு” என சொல்வதற்கு

உரக்கப் பேசு

இன்னும் கொஞ்சம்
உரக்கப் பேசு
மேலும் மேலும்
ஓங்கி முழங்கு
அடிவயிற்றிலிருந்து கிளம்பும் ஓசை
முழுதாய் விளங்க
உரக்கப் பேசு
இருக்கும் அரசு
முற்றிலும் செவிடானது என
சுற்றியிருப்பவரெல்லாம்
உணரும் படி
உரக்கப் பேசு

சும்மா ஒரு காதலிக்காக

விரல் கொண்டு
மண்பறித்து மண்பறித்து
குளமாக்கி
நீர் நிரப்பினாய்
நீரின் பாசி வெளிச்சத்தில்
மூழ்கிப்போனது
கைகள் மட்டுமல்ல
இதயமும் சேர்ந்து

இருப்பு

இருக்கும் போது தெரிவதில்லை
இருப்பின் மகத்துவம்
இல்லாத போது தெரிகிறது
வெறுமையில் எல்லாம்
சொல்லிக்கொள்ள
ஒன்றுமில்லை
என்றான பின்
வெறுமனே
துடித்துக் கொண்டிருக்கிறது
இதயம்

சென்ரியு

இல்லை என்பதை
எவ்வளவு நாசுக்காய்
ஏழையின் சிரிப்பில் இறைவன்

கன்னித் தீவு கதையாய்
தொடரும்
ஊழல்

மூன்று வரி ஹைக்கூ
நீ நான்
நம் காதல்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

அம்மா குழந்தை

எத்தனையோ விதங்களில்
முயற்சிக்கிறேன்
எல்லாவற்றையும்
ஒன்றுமில்லாமல் செய்கிறாள் அவள்.

யூகித்து யூகித்து
பூதாகரமாக்கி
மிரட்சிக்கொள்ள வைப்பதாய் எண்ணி
பகிரத பிரயத்தனம் செய்கையில்
ஓர் ஒற்றைப் புன்னகையில்
நீர்க்குமிழியாய் ஆக்கிவிடுகிறாள் அவள்.

ஒவ்வொன்றைப் பற்றியும்
ஒவ்வொரு நினைப்போடு
என் முயற்சிகள்.

எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கும்
அவள் செய்கை.

கொஞ்சம் கொஞ்சமாய்
ஒவ்வொன்றிலும்
தோற்றுக்கொண்டிருக்கிறேன் நான்.

ஒன்றுமே இல்லாமல்
எளிமையாய் வெற்றி பெறுகிறாள் அவள்.


அம்மாவாய் இருந்தும்
குழந்தையாகிறேன்.
குழந்தையாயிருந்தும்
அம்மாவாகிறாள் அவள்.
என் பலவீனங்கள்
முழுதாய் அறிந்து நாளும்.

ஒன்று

ஒன்று
ஒன்றில் ஒன்று
ஒன்றோடு ஒன்று
ஒன்று
இருப்பதில்லை எப்போதும்
ஒன்று அதுவாகும்
ஒன்று இதுவாகும்
அதுவான ஒன்று
அல்லது
இதுவான ஒன்று
எதுவாகவும் ஆகும் ஒன்று
ஒன்று
ஒன்றாகவே இருப்பதில்லை
எப்பொழுதும்.


சட்டம் சடங்கு

எங்கும்
எவ்விடத்தும்
எல்லா தருணங்களிலும்
ஆள் தேடி
முகம் பார்த்து
தலை சொரிந்து
பல் இளித்து
வலைந்து நெளிந்து
குழைந்தே
காரியம் நடக்க...
அப்புறம்
என்ன மயித்துக்கு
சட்டம் சடங்கு

சொல்... நமக்கு.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

கனவுகளுக்கு இடையில்...

கண் விழித்து
நீர் தெளித்து
பத்துப் பாத்திரம் தேய்த்து
காப்பி போட்டு
பிள்ளைகளை எழுப்பி
கால் தொட்டு வணங்கி
காப்பி தந்து
அவசர அவசரமாய்
சமைத்து
பள்ளி அனுப்பி
அலுவலகம் கை அசைத்து
சென்று திரும்பி
மீள இயங்கத் தொடங்கி
அவசர கதியில்
கழிந்து போகும் 
உன் வாழ்வு - 
எப்போதேனும்
காதல் குறித்து 
நினைக்கத் தோன்றின்
எமக்காகவும் 
கொஞ்சம் சி்ந்து

கண்ணீர்த் துளி!

சனி, 20 ஜூலை, 2013

பிறிதொரு பொழுதில்

ஒன்றுமில்லாமல்
சந்தித்துக் கொண்டோம்
சந்திப்புகளின் உச்சத்தில்
ஒருவருக்கொருவர்
என்றானோம்
நீ
ஒருவருக்கு
நான்
ஒருவருக்கு
என்றான பிறிதொரு பொழுதில்
சந்தித்துக் கொண்டோம்
ஒன்றுமில்லாமல்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

அம்மாவின் பேர்


பிறந்த
ஒரு மாதத்திற்குள்
எதிர்பாரா விபத்தில்
அப்பா இறந்துபோக
தரித்திரம்...
அதிர்ஷ்டமில்லா பொண்ணு ஆனாள்
உற்றார் உறவினர் எலலாருக்கும்.

பள்ளிக்கூடத்தில்
எல்லாவற்றிக்கும்
முதன்மையாய்
சற்றே துடுக்காய்
பேசியதால்
வாயாடியானாள்...
ஆசிரியர்
மாணவர் என்ற
பேதமேதுமின்றி.

வளர்ந்து பெரியவளானதும்
மணமுடிக்கையில்
அவனது
மனைவி என்றே
அடையாளப்படுத்தப்பட்டாள்
ஊராரால்.

பிள்ளைகள் ரெண்டு
பிறந்த பின்னர்
அவர்களின் பெயரால்
அம்மா ஆனாள்

காலம் கடந்து
மரணத்துப் போனாள்
ஓர் நாள்
இறந்த அம்மாவின்
பெயர் அறிய 
நினைத்த பிள்ளைகள்...

தெரிந்துகொள்ள முடியுமோ?
அவளின் அப்பா
தன் கொள்கைப் பிடிப்போடு
மகளுக்கு வைத்த
அஜிதாஎன்ற பெயரை.