புதன், 2 டிசம்பர், 2015

மழை-23

பெய்யாத மழைக்கு - சரி
கழுதைக்கு கல்யாணம்
பெய்யும் மழை நிறுத்த சொல்லுங்க
யாருக்கு செய்யலாம் ?

மழை-22

நின்று போனது சென்னையில்
மழை இல்லை
செல்போன் சேவை.

மழை-21

யாரேனும் காப்பாத்துங்கோ கடவுளை
கோவிலுக்குள் புகுந்தது
மழை வெள்ளம்.

மழை-20

பத்தினிப் பெண்டீரே
உரைப்பீர் கொஞ்சம்
பெய்யாது நில் மழை.

குடிசை-7

மனசே இல்லாமல் ஆக்கரமணம் செய்தவர்கள்
கைகூப்பி வேண்டுகிறார்கள்- கொஞ்சம்
மனம் வையப்பா வருண பகவானே.

குடிசை-6

சுத்தம் செய்ய ஒதுக்கிய நிதி
சுத்தமாய் செலவு செய்யுங்கள் சென்னைக்கு
சொல்கிறது  கூவம்-அடையாறு.

குடிசை - 5

உள்ளிருந்தவர்களை வெளியேற்றி
புது குடிதனம் செய்கிறது
வெள்ள நீர்.

குடிசை-4

கனவு இல்லங்கள் சொன்னாங்க...
ஆனாலும் சொல்லலியே
தண்ணீர் மிதக்கும் இல்லம்.

செவ்வாய், 24 நவம்பர், 2015

மழை-19

கண்ணுக்கு தெரியாமல் நடந்த ஆக்கரமிப்பு
உலகிற்கே காட்டிக்கொடுத்தது
மழை வெள்ளம்.

குடிசை-3

கொடுக்கிற தெய்வம்
கூரையை பிய்த்துக்கொண்டும் கொடுக்கும்-மழையில்
கூரையை பியத்துக்கொண்டும் கெடுக்கும்.

குடிசை-2

பாரபட்சம் காட்டவில்லை
மாட மாளிகை மண்குடிசை
உட்புகுந்த வெள்ளம்.

குடிசை-1

தரைமட்டமானது குடிசை
பல அடுக்கு மாடியாய் வளர்கிறது
ஓடியாடிய நினைவுகள்.

விலை

செயற்குழு பொதுக்குழு
கூடிகூடிப்பேசும் கட்சிகள்
வாக்காளரின் விலை

திங்கள், 23 நவம்பர், 2015

கொள்ளை

கொடி கட்டி பறக்கிறது
மாட்டு கொம்புகளில்
மணல் கொள்ளை.

மழை-18

ஏரி குளங்கள் நிரம்புகிறது
மழை நீரோடு
குடியிருப்புகளும் சேர்ந்து.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

மழை-17

எம் மழையும்
 ஈடாகவில்லை உன்
முத்த மழைக்கு முன்னால்.

திங்கள், 16 நவம்பர், 2015

மழை-16

களவு போன இடத்தை
தேடி அலைகிறது
மழை வெள்ளம்.

மழை-15

குளித்து சிலர்த்தது மரம்
கண்ட மயக்கத்தில்
கொட்டித் தீர்க்கிறது வானம்

மழை-14

தெரியவில்லை ஒன்றும்
மழையின் குளிர்ச்சி
மனதில் அவள் நினைவு.

மழை-13

எப்போதும் முந்திக்கொள்ளும்
நினைவு படுத்துவதில்
நம் காதலை மழை

ஞாயிறு, 15 நவம்பர், 2015

மழை-12

முயன்று தோற்கும் பெருமழை
அணைக்க முடியாமல்
ஏழையின் பசி தீ.

மழை-11

தொகுதி பக்கம் வருகை
அமைச்சர் பெருமக்கள்
உபயம் கனமழை.

மழை-10

விரைந்து பெயர் சூட்டுங்கள்
வேறு கடல் நகர்ந்துவிடும்
மோடி புயலென்று.

மழை-9

மண் மகள் நாணம்
எல்லாரும் பார்த்திருக்க
முத்தமிடும் வானம்.

மழை-8

கூத்தாடும் குழந்தை
கைதட்டும் வானம்
கொட்டும் மழை.

மழை-7

எப்பவும் இப்படிதான் வானம்
அதிக பாசம் அதீத வெறுப்பு
கொட்டித்தீர்க்கும் காய்ந்து தீய்க்கும். 

மழை-6

மின்கம்பி குருவி
பசிமறந்து ரசிக்குமோ
பெய்யும் மழை.

மழை-5

மழையில் நனையும் குழந்தை
அதட்டலாய் மிரட்டும் அப்பா
தான் குழந்தையாய் இல்லாத கோபத்தில்.

மழை-4

சபிக்கும் அம்மா
சந்தோஷிக்கும் குழந்தை
ஒழுகும் குடிசை.

மழை-3

மழையே கொஞ்சம் விலகுக
பாவம் பசியோடு
காத்திருக்கும் பறவைகள்.

மழை-2

பஞ்ச கல்யாணிக்கோ கல்யாண ராமனுக்கோ
கொடுங்கள் விவகாரத்து
விடும் அடை மழை.

மழை-1

அடை மழை
தெருவெங்கும் வெள்ளம்
மனதில் அடிக்கும் அலை.

திங்கள், 9 நவம்பர், 2015

காலம்

கொள்ளையர்கள் வருகை
கதவு திறந்து வைத்திருக்கிறார்கள்
தேர்தல் காலம்.

தேவை

சட்டசபை கூட்ட மட்டுமல்ல
சாம்பார் கூட்டவும்
தேவை 110.

செவ்வாய், 20 அக்டோபர், 2015

பூ அழகு

பூ அழகு இதழ்கள் சேர்ந்து இருக்கும் வரை
ஒவ்வொன்றாய் இதழ்கள் குறைய
பூவுமில்லை அழகுமில்லை.

காலம்

நெல்லா...புல்லா...
முடிவு செய்யும்
காலம்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வாக்கு தேடு

ஊர் ஊருக்கு போடு ரோடு
போடும்போதே தேர்தல்
வெற்றிக்கு வாக்குகள் தேடு.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

மகாத்மா முதல்...

நெருங்கி விட்டது தேர்தல்
நொருங்கப் போகிறது
கொள்கைகள்

கணக்கு வழக்கு
கணிப்பொறி கணக்கு
புள்ளி விவர கணக்கு
எல்லாவற்றையும்
ஊதித்தள்ளப்போகிறது
மக்களின் கணக்கு.

ஓட்டுக்கு எவ்வளவு
தேறும் என்பதுதான்
இப்போதைய கணக்கு.

மக்களை கணக்குபண்ன
மன்னர்கள் யாத்திரை
செய்கிறார்கள்.

ரத யாத்திரை
மசூதியை இடித்தது
நமக்கு நாமே யாத்திரை
என்ன செய்யப்போகிறதோ...
கட்டியணைக்கிறார்
உம்மா கொடுக்கிறார்
இதுவரை பார்க்காத அத்தனையும்
ஆச்சரியத்தோடு பார்க்கிறார்.

செல்லும் வழியெங்கும்
மக்கள் கூட்டம்
கலைந்த பின்னே
குவார்ட்டர்கள் கூட்டம்.

மதுவின் ஆசிகளோடு
யாத்திரை நடக்கிறது
நம் பகுதிக்கும் வரலாம்
நமக்கு கிச்சு கிச்சு
மூட்டவும் செய்யலாம்.

மயானக் கொள்கைக்கு
மக்கள் கூடுவார்கள்
கிரானைட் கொள்கைக்கு
அதிகாரிகள் கூடுகிறார்கள்...

50 வருட கொள்ளை
இரண்டு ஆட்சியாளர்களுக்கும்
நன்கொடை.

தோண்ட தோண்ட
நீர் வந்தது அந்தக் காலம்
பிணங்கள் வருவது இக்காலம்.

அசகாய சூரர்தான்
சகாயம்...
பிணங்களுக்கும் நீதி கேட்கிறார்...

மலைகளை பிளந்தார்கள்
ஆறுகளை சாலையாக்கினார்கள்
மண்ணுக்குள் ஒளிந்திருந்த நீரை
தேடியெடுத்து விற்றார்கள்.

தேசம் நம்முடையதுதான்
தேசத்தில் உள்ளவை மட்டும்
அந்நியர்களுக்கானது

தமிழ்நாடு
தண்டநாடாக மாறும் காலம்
வெகுதூரமில்லை.

வியாபாரிகள் தாம்
ஊர்ஊராய் பறப்பார்கள்
நமது பிரதமரும்
நாடு நாடாய் பறக்கிறார்.

பொருளை விற்பவர்கள்
வியாபாரிகள்
நாட்டையே விற்க முனைபவர்
பிரதமரா?

விவசாயிகளின் தற்கொலையை
ஊடகங்கள் பெரிதாக்குகிறதாம்
நிலம் இருந்தால்தானே
அவன் விவசாயி
நிலத்தையும் பிடுங்கிவிட்டால்
அவன பரதேசி.

நில அபகரிப்பு சட்டம்
பதுங்கிய புலி போல்
காத்திருக்கிறது?
எந்த நேரத்திலும் பாயலாம்.

மதத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
இனத்தின் பெயரால்
பிரித்தாளும் சூழ்ச்சி
பிரமாதமாய் அரங்கேறுகிறது.

மகாத்மா முதல்
நேற்றைய கல்புர்க்கி வரை
கொலைப் பட்டியல்
அனுமன் வாலாய்
நீண்டு கொண்டே போகிறது

கொலை வாளினை எடடா
கெட்ட கொடுங்கோல்
செயல் அறுந்திடவே

பாரதிதாசன் வாக்கு
பொய்க்கப் போவதில்லை.
வரட்டும் பார்க்கலாம்.

(காந்திஜெயந்தி கவியரங்கில் சகுவரதன் பாடியது)

அம்மா-அப்பா

பசுவைக் கொன்றால் அது பாவம்
கறி தின்றானென மனிதனை
கொன்றால் அது அகம்பாவம்.

சாலைகளெல்லாம்இருக்கு குண்டும்குழி
இப்படியே அதில் போன
சட்டெனப்போவோம் சவக்குழி.

எல்லா பொருள்பெயரிலும் அம்மா
அதனால்தானோஎன்னவோ
டாஸ்மாக்-கில் கிடக்கிறான் அப்பா.

வியாழன், 1 அக்டோபர், 2015

காந்தி

காந்தி தாத்தாவே
உம்மிடம் ஒரு கேள்வி
உன் புன்னகையின் பொருள்
என்னதான் தாத்தா...

உழைத்தவன் பணத்திலும் இருக்கிறோம்
ஊழல் பணத்திலும் இருக்கிறோம்
என்பதை எண்ணித்தானே...

அன்று
தொண்டினை வளர்க்க
நினைத்தவன் நீ
இன்றோ
துண்டினை வளர்க்கவே
நினைக்கின்றார்...

காந்திய வழியா
கோட்சே நெறியா...சில
குள்ள நரி கூட்டம்
கோட்சேவையே நாடும்.
எனவே தான்
சிலை வைக்க நினைக்கின்றார்
உன் கொள்கைக்கு
உலை வைக்க துடிக்கின்றார்.

மூவர்ணக் கொடியா...
நால் வர்ண முறையா...
கயவர் உள்ளம்
மூன்றைவிட நான்கே
பெரிதென எண்ணும்.

ஒன்றுமட்டும் உண்மை
உன் சிலை மீது
எச்சமிடும் காக்கையையும்
விரட்டாத உன் கைத்தடி...
நடுவீதியில் நள்ளிரவில் அல்ல
பட்டப் பகலிலேயே
பாழ்படுத்தும் பெண்களையும்
காணாத கண்ணாடியென
இவர்கள்
அஞ்சாமல் இருக்கலாம்.

ஆனால் ஒருநாள்
அதுவும் வாய்பேசும்
அப்போது இவர்கள்
முகமூடி உடையும்
காவி தேச முயற்சி முறிந்து
காந்தி தேசம் நிலைக்கும்.

தாத்தா

காந்தி தாத்தா
சுதந்திரம் தா தா என
வாங்கி தந்த தாத்தா

குழல்

பாடிக் கொண்டிருக்கிறது
மூங்கில் காடே பற்றி எரிந்த சோகத்தை
ஓர் புல்லாங்குழல்.

வியாழன், 17 செப்டம்பர், 2015

மாற்றம்

அன்று
அரச மரத்தடி நிழலில்
பிள்ளையார்
இன்று
பிள்ளையார் நிழலில்
அரசமரம்.

பார்த்ததும்
வணங்கத்தோன்றம்
அன்று
பார்த்ததும்
அஞ்சும் தோற்றம்
இன்று,

அருள் வாரி வழங்கும்
தோற்றம் மாற்றி
நவீன ஆயுதம் தாங்கி
போருக்குப் புறப்படும்
கோலத்தில்...

விட்டு விடுங்கள்
அன்பைப் பொழியும்படியே
இருக்கட்டும்
எல்லாக் கடவுளரின் தோற்றம்.

சனி, 5 செப்டம்பர், 2015

வீடு

அடுக்கி அழகாய் இருக்கிறது
இருந்தும் ரசிக்கமுடியவில்லை
குழந்தைகள் அற்ற வீடு,

புதன், 26 ஆகஸ்ட், 2015

குரல்

கொஞ்சம் முன்கூட்டி தெரிந்திருந்தா தேவலாம்
ரெண்டு வார்த்தை முகம்பார்த்து
வந்து அங்கலாய்ப்போர் குரல்

முகம்

எல்லாருக்கும் தகவல் அனுப்பியாச்சு
வந்து பார்த்துப்போக
இறந்தவர் முகம்.

சனி, 1 ஆகஸ்ட், 2015

மது - ஹைக்கூ

குடிப்பவர் எதிர்ப்பவர்
உயிர்
கலந்து குடிக்கும் மது.

குழந்தை மனம் - ஹைக்கூ

தூக்கி வாரி போட்டது குழந்தைக்கு
தான் அடிவாங்கியதற்கு
வேறு அம்மா கேட்கும் அப்பா

குழந்தை மனம் -ஹைக்கூ

குருட்டு நம்பிக்கை
அம்மா அடித்தாளென
அப்பாவிடும் சொல்லி அழும் குழந்தை

ஹைக்கூ

ஒழுங்கா சாப்பிடு
மிரளும் பொம்மை
அம்மா வேடத்தில் குழந்தை.

நட்பு -ஹைக்கூ

நீர் ஊற்றவில்லை
ஆயினும் வளர்கிறது
காக்கா கடியில் நட்பு.

மழலை - ஹைக்கூ

ஒன்றும் புரியவில்லை
தேனினும் இனிதானது
மழலை மொழி.

பொம்மை - ஹைக்கூ

வலிக்குதா....அழாதே
சமாதானம் செய்யும் குழந்தை
உடைந்த பொம்மைக்கு.

புதன், 29 ஜூலை, 2015

கலாம் - சலாம்

வாழ்ந்தோர் வாழ்வோர் வாழப்போவோர்
எல்லாருக்கும் ஆனார்
கலாம் காலம்

கலாம் - சென்ரியூ

கனவு காணுங்கள் என்றார்
காளன் கனவு நனவாக
கலாம் விண்ணுலகு சென்றார்

ஞாயிறு, 26 ஜூலை, 2015

மனம் - ஹைக்கூ

சிறப்பான உரைவீச்சு
லயக்க மறுக்கும் மனம்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சி

குடிசை -ஹைக்கூ

நல்ல மழை
ரசிக்க முடியவில்லை
ஒழுகும் குடிசை.

வியாழன், 23 ஜூலை, 2015

அரசியல் சூடி

அனைத்திலும் அரசியல் அறிந்திடு
ஆதிக்க உணர்வை வெறுத்திடு
இல்லாதோர்க்காய் உழைத்திடு
ஈகை குணத்தை வளர்த்திடு
உண்மை உழைப்பை போற்றிடு
ஊழல் சூழல் போக்கிடு
எளிமை நெறியை கற்றிடு
ஏளனம் செய்தல் மறந்திடு
ஐக்கிய மாதல் உரைத்திடு
ஒற்றுமை எண்ணம் பெருக்கிடு
ஓய்தல் நீக்கி செயல்படு
ஓளடதம் நீயென எண்ணிடு
அஃதே அரசியலென மாற்றிடு.

@ திருவாளர். சுப்ரா வே சுப்பிரமணியம் ஐயாவிற்கு

சனி, 18 ஜூலை, 2015

பாட்டில் - சென்ரியு

குடித்தவன் உளரல் தாங்கவில்லை
உடைந்து கிடந்தது
மது பாட்டில்.

ஈ - ஹைக்கூ

கொஞசம் முன்னமே வந்திருந்தால்
தேநீர் பருகியிருக்கலாம்
காலி குவளை மொய்க்கும் ஈ,

சாபம் - ஹைக்கூ

யார் இட்ட சாபமோ
ஓயாமல் சுற்றும்
பூமி.

காலம் - ஹைக்கூ

நிற்க நேரமில்லை
ஓடிக் கொண்டேயிருக்கிறது
கடிகார முள்

வெள்ளி, 17 ஜூலை, 2015

சருகு-ஹைக்கூ

காய்த்தமரம் கல்லடி படும்
சரி பாவம் சருகு
உதிர்ந்தும் மிதிபடுகிறது,

நிலா-ஹைக்கூ

யார் கற்றுக்கொடுத்ததோ பாவம் நீச்சல்
கரை ஏற முடியாது தவிக்கும்
குளத்தில் நிலா.

திங்கள், 13 ஜூலை, 2015

முகவரி மாற்றம்

தாத்தாவின் அப்பா
ரொம்பவே பிரபலம்
யார்வந்தாலும்
எது கேட்டாலும் சொல்வார்கள்
ஊருக்குள் அவரை
போய் பாருங்கள் தெரியுமென்று...

தாத்தா காலத்தில்
தெரியாது கேட்போர்க்கு
அடையாளமானது
பெருமாள் கோயில் கோபுரமும்
மண்டபமும்

அப்பா வழி சொல்ல
காட்டுவார்
எம்.ஜி.ஆர் படம் போகும் திரையரங்கு
சிவாஜி படத் திரையரங்கு

அட அத்தனையும்
சொல்லக் கேட்கும்
பழங்கதையாகி
இப்போதோ அடையாளமாகும்
எண் 10 கடை இல்லேன்னா
எண் 12 என

எல்லாரும் அறிய...
தெருவை...ஊரை...அறிய
முகவரியாய் இன்று
டாஸ்மார்க் எங்கும்




புதன், 8 ஜூலை, 2015

நெனப்பு-2

 த்ரிஷா இல்லன்னா நயன்தாரா
நெனப்பே வரலன்னு
பயந்தாரா

நெனப்பு

சிங்காரி நெனப்பு
சிங்காரனுக்கு
ராங்கி நெனப்பு சிங்காரிக்கு

ஞாயிறு, 5 ஜூலை, 2015

மெட்ரோ

தலைவர்களுக்கிடையே நான் நீ என்று
கடும் போட்டி
மோதலின்றி ஓடும் மெட்ரோ ரயில்

வெள்ளி, 3 ஜூலை, 2015

தலைகவசம்

எதிர் வருபவர் கண்ணுக்கு தெரியவில்லை
தலை கணம் அதிகமாச்சு
தலைகவசம் உதவியால்.

செவ்வாய், 30 ஜூன், 2015

இயலாமை

ஊரார்க்கு சாபம்
பளிச்சென தெரிந்தது
தன் இயலாமை.

குடிசை

இருள் நீங்கி
ஊர்முழுக்க வெளிச்சம்
பற்றி எரியும் குடிசை.

சனி, 27 ஜூன், 2015

இருள்

எப்போதும் துணை
உடன் வரும் நிழல்
நம்பிக்கை கெடுக்கும் இருள்

பயணம்

யாருமற்ற தனிமை பயணம்
உடன் வரும்
வான் நிலா.

வியாழன், 25 ஜூன், 2015

உதவி

நொடிக்கு ஆயிரம் பொய்கள்
அரிச்சந்திரனிடமிருந்து விசுவாமித்திரர்களுக்கு
உதவும் கைபேசி

வெள்ளி, 12 ஜூன், 2015

வாடும் பொம்மை

பள்ளி மறுதிறப்பு
விட்டுச் செல்லும் குழந்தை
தனிமையில் வாடும் பொம்மை

பிரிவு

பிரிய மனமில்லை
இருந்தும் பிரியும் பொம்மையை
பள்ளி மறுதிறப்பு

வெள்ளி, 29 மே, 2015

சாலை

சொல்லாமல் சொல்லும்
வரப்போகும் தேர்தல்
புதுபிக்கும் சாலைகள்.

வியாழன், 28 மே, 2015

காதல்

பொய்யுரைக்க பொய்யுரைக்க
வேகமாய் வளர்கிறது
உண்மைக் காதல்

வாசல்

தினம் நடக்கிறது
நீதிமன்ற வாசல்
ஆளுங்கட்சி எதிர்கட்சி.

திங்கள், 18 மே, 2015

பொய்யுரை காதல்



பூத்து சிரிக்கும்
தோட்டத்து பூக்கள்
காதலர் பொய் கேட்டு,
பழகிய காலம் இனிமை
பேசிப் பிரியும்
காதலர்கள்.
பொய்தான்
நாளெல்லாம் வளரும்
காதல்.
நீரின்றி அமையா உலகு
பொய்யின்றி வளரா
காதல்.
படிப்பினையானது
முதல் தோல்வி
அடுதத காதலுக்கு,
ஒருவரை ஒருவர்
மிஞசு கின்றனர்
பொய்யுரை காதல்.

ஞாயிறு, 17 மே, 2015

என்றோ...?

நீதி நிலைத்தது
அவர்களுக்கு நேற்று
இவர்களுக்கு இன்று
மக்களுக்கு என்று?

நம்பிக்கை

நம்பிக்கை பிறந்தது
மூன்று நிமிடத் தீர்ப்பால்
ஊழல் வாதிகளுக்கு.

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

உன் நிலம்-என் இடம்

நீ
எனக்கானவன்
என் எண்ணம்
என் செயல்
எல்லாம் உனக்கானது

நீ
என்னுள் இருக்கிறாய்
எனக்கான எல்லாம்
உள்ளிருக்கும்
உனக்காகவானது

நீ
அறிவாயா
உபதேசித்த கண்ணன்
அர்ஜீனனிடம் சொன்னதை
எல்லாம் நான்
நானே எல்லாமும்

நீ என்று
தனித்து ஏது
உன் செயல் எல்லாம்
எனது செயல்
எனக்கான செயல்
என்னால் செய்யப்படும்
உன்செயல்

எதுவும் நீ அன்று
எதற்கும் நீ அன்று
நானும் அன்று

எல்லாம் அவன்
விளையாட்டில் நிகழ்பவை
என் இடம் நிலைக்க
உன் நிலம் இப்போது
கொடு
கவலை கொள்ளாதே

எது உனது
எதுவும் இல்லை
நாளை என்பதை
இன்றே பார்
வேறு ஒருவனுக்காவதை

இது
தர்மத்தின் காட்சி
மறுக்காதே ஏற்றுக்கொள்

உனது செயல்
எனது செயல்
எனக்கானசெயல்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மோ(ச)டி ஜாலம்

நிலத்தோடு போராட்டம்
ரொம்ப கஷ்டம்
நிலமின்றி போராடு
ஏழைகளுக்காக சிந்திக்கும்
அரசு நிலம் கையகப்படுத்தி
மோ(ச)டி ஜாலம்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

திரும்பும் மேகம்

தண்ணீராய் செலவு
இல்லை இல்லை
தண்ணீருக்கே பெரும் செலவு,

ஓடி ஒளியலாம்
இன்னும் சில நாளில்
யாரேனும் தண்ணீர் கேட்டு வருகையில்.

திரண்டு வந்து
திரும்பும் மேகம்
தகுந்த மரியாதை கிடைக்கவில்லையோ.

யாரைக் கண்ட மிரட்சி
வந்தவழியே
திரும்பிச் செல்கிறது மேகம்.

சொட்டு தண்ணீர்

கை பிடித்து நடக்கின்றார்
பிள்ளைகள் அன்று
தண்ணீர் பாட்டில்.

காத்திருக்கிறார்கள் எல்லோரும்
வி வி ஐ பி - ஆனது
மழை.

முந்நூறு நானூறு
பல நூறுக்கு பின்னுமில்லை
சொட்டுத் தண்ணீர்..

சனி, 24 ஜனவரி, 2015

மறதியின் நாயகர்கள்

நேற்று அதை
மறந்தோம்
இன்று இதை
மறந்தோம்
நாளை
எதை....?
மறப்போம்...

நேரு சொன்னார்
எலி கறி சாப்பிட...
அவர் மகள் சொன்னார்
வறுமையே வெளியேறு
அவர் பிள்ளைக்கோ
நவீன இந்தியா....

அடுத்தவர் சொன்னார்
ஆண்மை வெளிப்பட்டதென
அவரின் சீடர்
நூறுநாளில்
கருப்பு பணம் வெளியில்

எல்லாம்
மறந்தோம்
இன்னும் மறப்போம்
நாளை
அமெரிக்க அதிபர்
ஏதேனும் சொல்வார்
அதையும்....

நாம்
என்றும்
என்றென்றும்
மறதியின் நாயகர்கள்

வெள்ளி, 16 ஜனவரி, 2015

மறந்திடாது...பொங்கல்


பழசுகள் அல்ல
புதுமைகள் பெயரால் வரும்
புதிர்களும்
எரிக்கும் படியாய்தான்...

விளைச்சலைக் கொண்டு
புதிதாய் பொங்கலிட
விவசாயி இல்லை
விளை நிலமெல்லாம்
விற்பனையாகிறது
மனைகளாக...

மாடுகளில்லை
கொம்புகள் சீவி
வண்ணம்தீட்டி
ஓடவிட்டு வீரம் பார்க்க
அடிமாடுகளாய்...
வெட்டுக்கு வரிசையாகி
நிற்கின்றன பாவம்...

காண்போர் கண்டு
வணங்கி எழ
வழியற்றுப்போகிறது
எந்தமலரில் எவ்வகைத்தேன்
பார்ப்பது பழங்கதையாகி
எந்தப் புற்றில்
எவ்வினப்பாம்பு
கணிப்பதே வாழ்வாகும் சூழல்

இருந்தும்
மறந்திடாது
சொல்லுவோம்
பொங்கலோ பொங்கலென்று..

திங்கள், 5 ஜனவரி, 2015

வருகை-5

சந்திப்பு வேண்டி பயணித்து
திரும்புகிறோம் சந்திக்க முடியாமல்
பிறிதொரு சந்திப்பு எண்ணி

வருகை-4

யாரேனும் ஒருவர் வருகைபுரிவர்
காத்திருக்கும் தருணத்தில்
பிரிதொருவரைத்தேடி நம்மிடம்.

வருகை-3

யார்யாரோ வருகிறார்கள் விசாரித்துக்கொண்டு
வந்து திரும்பும்போது தெரிகிறது
அவர் இல்லையென்று

வருகை-2

வெளிச்சம் தேடும் பூச்சிகள்
இருட்டின் மறைவில்
இரைதேடும் பல்லி

வருகை

அழைக்குமுன்பே வந்தது
பட்டாம்பூச்சி
மலர் கண்காட்சி

சனி, 3 ஜனவரி, 2015

பொங்கல்

பொங்கினால் தைபிறந்ததும்
பானையில் அல்ல மனதில்
முதிர் கன்னி