செவ்வாய், 24 நவம்பர், 2015

மழை-19

கண்ணுக்கு தெரியாமல் நடந்த ஆக்கரமிப்பு
உலகிற்கே காட்டிக்கொடுத்தது
மழை வெள்ளம்.

குடிசை-3

கொடுக்கிற தெய்வம்
கூரையை பிய்த்துக்கொண்டும் கொடுக்கும்-மழையில்
கூரையை பியத்துக்கொண்டும் கெடுக்கும்.

குடிசை-2

பாரபட்சம் காட்டவில்லை
மாட மாளிகை மண்குடிசை
உட்புகுந்த வெள்ளம்.

குடிசை-1

தரைமட்டமானது குடிசை
பல அடுக்கு மாடியாய் வளர்கிறது
ஓடியாடிய நினைவுகள்.

விலை

செயற்குழு பொதுக்குழு
கூடிகூடிப்பேசும் கட்சிகள்
வாக்காளரின் விலை

திங்கள், 23 நவம்பர், 2015

கொள்ளை

கொடி கட்டி பறக்கிறது
மாட்டு கொம்புகளில்
மணல் கொள்ளை.

மழை-18

ஏரி குளங்கள் நிரம்புகிறது
மழை நீரோடு
குடியிருப்புகளும் சேர்ந்து.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

மழை-17

எம் மழையும்
 ஈடாகவில்லை உன்
முத்த மழைக்கு முன்னால்.

திங்கள், 16 நவம்பர், 2015

மழை-16

களவு போன இடத்தை
தேடி அலைகிறது
மழை வெள்ளம்.

மழை-15

குளித்து சிலர்த்தது மரம்
கண்ட மயக்கத்தில்
கொட்டித் தீர்க்கிறது வானம்

மழை-14

தெரியவில்லை ஒன்றும்
மழையின் குளிர்ச்சி
மனதில் அவள் நினைவு.

மழை-13

எப்போதும் முந்திக்கொள்ளும்
நினைவு படுத்துவதில்
நம் காதலை மழை

ஞாயிறு, 15 நவம்பர், 2015

மழை-12

முயன்று தோற்கும் பெருமழை
அணைக்க முடியாமல்
ஏழையின் பசி தீ.

மழை-11

தொகுதி பக்கம் வருகை
அமைச்சர் பெருமக்கள்
உபயம் கனமழை.

மழை-10

விரைந்து பெயர் சூட்டுங்கள்
வேறு கடல் நகர்ந்துவிடும்
மோடி புயலென்று.

மழை-9

மண் மகள் நாணம்
எல்லாரும் பார்த்திருக்க
முத்தமிடும் வானம்.

மழை-8

கூத்தாடும் குழந்தை
கைதட்டும் வானம்
கொட்டும் மழை.

மழை-7

எப்பவும் இப்படிதான் வானம்
அதிக பாசம் அதீத வெறுப்பு
கொட்டித்தீர்க்கும் காய்ந்து தீய்க்கும். 

மழை-6

மின்கம்பி குருவி
பசிமறந்து ரசிக்குமோ
பெய்யும் மழை.

மழை-5

மழையில் நனையும் குழந்தை
அதட்டலாய் மிரட்டும் அப்பா
தான் குழந்தையாய் இல்லாத கோபத்தில்.

மழை-4

சபிக்கும் அம்மா
சந்தோஷிக்கும் குழந்தை
ஒழுகும் குடிசை.

மழை-3

மழையே கொஞ்சம் விலகுக
பாவம் பசியோடு
காத்திருக்கும் பறவைகள்.

மழை-2

பஞ்ச கல்யாணிக்கோ கல்யாண ராமனுக்கோ
கொடுங்கள் விவகாரத்து
விடும் அடை மழை.

மழை-1

அடை மழை
தெருவெங்கும் வெள்ளம்
மனதில் அடிக்கும் அலை.

திங்கள், 9 நவம்பர், 2015

காலம்

கொள்ளையர்கள் வருகை
கதவு திறந்து வைத்திருக்கிறார்கள்
தேர்தல் காலம்.

தேவை

சட்டசபை கூட்ட மட்டுமல்ல
சாம்பார் கூட்டவும்
தேவை 110.