சனி, 18 ஜனவரி, 2014

ஹைக்கூ

கால் வலிக்கப்பயணம்
வலி நிவாரணியாய்
பேருந்து தொலைக்காட்சி.

மணல் லாரியில்
சிந்தும் தண்ணீர்
ஆற்றின் கண்ணீர்.

கதிரவன் கண்டு
நாணம் கொண்டது
செவ்வானம்.

பூ அழகு
பாட்டும் இனிமை
மயங்கிய வண்டு.

பழங்கதை ஆனது
ஆற்றில் வெள்ளம்
மணற் கொள்ளை.

மயக்கப் பாடி
மயக்கம் கொண்டது
தேன் உண்ட வண்டு.


வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஆர்பரிக்கும் குழந்தை

அழுது ஆர்பாட்டம் செய்யும்
குழந்தைகளை
எப்படியாவது அடக்கிவிட
ஏதேனும் ஒன்று நாடுகிறார்கள்

பெரும்பான்மை அம்மாக்களின்
ஆயுதமாகும்
பூச்சிக்காரன்
கொஞ்சம் பேருக்கு
பூனையாய் இருக்கலாம்
இன்னும் சிலருக்கு
நாய்களின் உதவி


பூனையையும் நாயையையும்
துணை கொள்பவர்கள்
தாங்களே அவைகளாய்
குரல் எழுப்பி
அதுவாகிறார்கள்

இவையில்லாமல்
வெகுசிலருக்கு யானை
வேறு சிலரோ
குரங்கினைக் காட்டுகிறார்கள்

பேருந்து பயணத்தில்
ஆர்பாட்டப் பிள்ளைகட்கு
இதோபார் அந்த
சொல்லி முடிக்குமுன்பே
முண்டியடித்து
கண்கள் உருட்டி
மீசை முறுக்கி
நாக்குகடித்து
கர்ஜிக்கிறார்கள்
தங்கள் குழந்தைகளிடம்
தோற்றுப்போனதை மறந்த
மாமாகள் பலர்.

ஏதேதோ செய்கிறார்கள்
கடைசியில்
ஆர்பரித்த குழந்தை
தானாய் அடங்குகிறது
அவர்களின் எதுவும்
பிடிக்காது...

சனி, 11 ஜனவரி, 2014

எமது கவிதை தொகுப்பிற்கு முல்லைவாசன் ஆய்வுரை

எளியவர்களின் பக்கம் ராமஜெயம்
(பிறிதொரு பொழுதில்-இராமஜெயம் கவிதை தொகுப்பிற்கான முகவுரையாக ஆய்வுரை ) 
கலை நம்மை காணவும் உணரவும் வைக்கிறது. அறிவியல், கருத்தாக்கங்கள் ‘அறிய’ வைக்கிறது. கலை உணர்வு நிலை. அறிவியல் கறாரான அறிவுநிலை. கலையானது முன் விவாதமற்ற முடிவை நாம் காண வைக்கிறது. அறிவியல் என்பது முடிவை நாம் அடையும் விவாதங்களையும், வழிமுறையையும் நமக்குத் தருகிறது. கலைக்கும் – அறிவியலுக்கும் உள்ள நிலை இது. ‘உணர்வினில் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்’ என்பார் பவணந்தி முனிவர்.
புறநிலை யதார்த்தமே கலையின் ஊற்று. யதார்த்தமே அழகு, எனில் கலை படைப்பு அழகானதாக நமக்கு வெளியில் உள்ளதை பிரதிபலிக்க வேண்டும். உலகியலை சொல்வது புறம். வாழ்வியலை சொல்வது அகம் என்பதும் பண்டைய மரபு. யதார்த்தமெனில் அகமும் புறமும் சேர்ந்ததே. பிரதிபலிப்பது என்பது எதை பிரதிபலிப்பது? கண்ணாடி பிரதிபலிக்கும் தன்மையுடையது. காற்றை பிரதிபலிக்குமா? காற்றைப்போல் ஊடுருவிய காலத்தை பிரதிபலிக்கும் படைப்புகள் நமக்குத் தேவை.

போராடும் போதுதான் மனிதன் பிறக்கிறான் என்பார் கார்க்கி. மனிதன் இயற்கையின் எஜமானன்என்பார் ஏங்கெல்ஸ். “அன்பு செலுத்துவதையே சாத்தியமற்ற ஒன்றாக ஆக்கிய ஒடுக்குமுறையை, முடிவுக்குக் கொண்டு வருவதே உண்மையான அன்பை நிலை நாட்டும் வழியாகும்” என்பார் பிரேசில் கல்வியாளர் பாலோ ஃபிரையிரே.
உண்மையான அன்பை, மனித நேயத்தை தனது கலைப்படைப்பில் தூக்கிப் பிடிக்கும் ராமஜெயம் நாடகவியலாளர். வீதி நாடகக் கலைஞர். உடல் மொழியால் பேசுபவர். இப்போது எழுத்து மொழியில் பேசுகிறார். ஒன்றுபட்ட வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட ‘தமுஎச’வோடு நீண்ட நெடிய தொடர்பால் அடையாளப்படும் ராமஜெயம் சில வரவுகளையும் வைத்துள்ளார். வைகறை கோவிந்தன், சுகந்தன் இருவரையும் ‘தமுஎச’வில் பாட வைத்தவர். கனிந்த மனதோடும், கருணை குரலோடும் வலம் வரும் ராமஜெயத்தின் கவிதைகள் முதன் முதலாக தொகுப்பாகி உள்ளது.
கல்லோ சிலையோ
காண்பது எதுவென்றாலும்
கால் தூக்கும் நாய்கள்.
நாய்கள் கவிதையின் தொனி பட்டுத் தெறிக்கும் திசைகள் நம் எல்லாருக்கும் சொந்தமே.
ஆள்தேடி
முகம் பார்த்து
தலை சொரிந்து
 பல் இளித்து
வளைந்து நெளிந்து
குழைந்தே காரியம் நடக்க
அப்புறம் என்ன மயித்துக்கு
சட்டம் சடங்கு
“அதிகாரம் எப்போதும் ஊழல் செய்யும் வரம்பற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல் செய்யும்“ நேருவின் இப் பொன்மொழியை மனம் அசை போடுகிறது.
விடியற்காலை நடைபயிற்சியை
விடாது தொடர்கிறார்
இருத்தலே நமது வாழ்வு. வாழ்வினை நகர்த்தத்தான் எத்தனை பாடு.
அம்மா குழந்தை’ – அற்புதமான கவிதை
மனைவி கவிதை’ – பெண்ணின் உலகை சுருக்கி அடுப்பறையில் மாட்டி இருக்கும் ஆணாதிக்கத்தை தோல் உரிக்கிறார்.
ஆன்டனா வழியே
எல்லாம் வருதாம்
ஊர் ஊருக்கு இதே பேச்சு
அப்படின்னா
கொஞ்சம் அரிசி பருப்பு
புளி மிளகாய்
எண்ணெய் தண்ணி உப்பு கூட வருமா?
சாமான்ய மக்களின் வாழ்வை ‘ஆன்டனாவில்’  பதிவு
 செய்கிறார். எளியவர்களின் பக்கம் தன்னை நிறுத்திக்கொள்ளும் ராமஜெயம் எளியவர்களை உயர்த்தும், மேடு பள்ளங்களை தகர்க்கும் கடப் பாறையாய் தனது எழுதுகோலை தொடர…
அன்பான தோழமையும், வாழ்த்தும்.

தோழமையுடன்
முல்லைவாசன்
44. ஜி.எஸ்.மடம் தெரு,
பிச்சனூர். குடியாத்தம்.
வேலூர் மாவட்டம்.
கைபேசி: 9486390973

வெள்ளி, 10 ஜனவரி, 2014

எப்படிச்சொல்ல?

முன்போல் இல்லை இப்பொழுது
ஒருவாரம் பத்துநாள் இருக்கும்போதே
எதிர்படும் முகங்கள் எல்லாம்
பேச்சாலும் பார்வையாலும்
பரிமாறிக்கொள்ளும்
என்ன வேலை நடந்தது
என்ன வேலை நடக்குது என்று
பிள்ளைகளும் பெரியவர்களுமாய்
மண் பூச ஒட்டடை துடைக்க
வெள்ளை பூச பூசி மெழுக
கோலம் போட ...
அறுத்த நெல் அவிக்க
அவித்த நெல் உலர்த்த
அரைக்க இடிக்க
பூசனியும் மொச்சையும் அவரையும்
பரிக்க அறுக்க
வீட்டுக்கும் நிலத்துக்கும்
நடையாய் மாறிமாறி நடக்க
ஓட ஓடிவர
தொற்றிக்கொள்ளும் பரபரப்பு

அடங்கி நாளாச்சி எல்லாம்
பிழைப்புதேடி வெளியூர்சென்று
அல்லாடும் வாழ்க்கையில்
புதியன புகுதலும்
பழையன கழிதலும் எங்கே
தவிக்கின்ற நிலையில்
தள்ளாடும் சூழலில்
போகியுமில்லை பொங்கலுமில்லை.

வீட்டுக்கு வீடு
மணியடித்து சைக்கிள் நிறுத்தி
விரல் இடுக்கில்
மஞ்சளாய் சிவப்பாய்
பச்சையாய் நீலமாய்
நிறம்நிறமாய்
முகவரிப்பார்த்து அடுக்கிய
வாழ்த்தட்டைகள்
வந்துதந்த அஞ்சல்காரர்
தருவதற்கொன்றுமின்றி
வெறுமைக்கு வருகிறார் வீதிவழி
எல்லா வாழ்த்தும்
செல்லிடப்பேசிக்குள்
சிக்கினமாய் சுருங்கிப்போன
குறுஞ்செய்தி வாழ்த்துக்குள்.

மாடுகள் மரிக்கின்றன
மாரியோ பொய்த்தப்பின்னால்
காளைகள் அடக்கி கன்னியர் கைப்பிடித்த
கதைகளும் மறையலாகும் இனி
உழுபவன் நிழலாய் இருந்த
உழுமாடுகள் எல்லாம் இன்று
நிழல்கரைந்து பாதம்தொடும்
நடுவெயில் நேரம்போல
அன்பற்ற வெட்டுகாரன்
கத்திக்கு காவு ஆச்சி.

காண்போர் இலர்
கண்டு கதை சொல்வோர் இலர்
இன்னும் இங்கு நாம்
எப்படிச்சொல்வோம் சொல்வீர்
பொங்கலோ பொங்கலென்று.

புதன், 8 ஜனவரி, 2014

திருபள்ளியெழுச்சி

சின்னதோ பெரியதோ
வீட்டுக்கு வீடு
ஓர் பகை.

அப்பாவிற்கு அம்மா
அம்மாவிற்கு அப்பா
குழந்தைக்கு இருவரும் பிடிக்கவில்லை.

காலம் மாறிபோச்சு
ஆடு மாடு மேய்த்ததுபோய்
நாய்கள் மேய்க்கிறார்கள்.

யார் பாடுவதோ
திருபள்ளியெழுச்சி
தூங்கும் அரசை தட்டியெழுப்பி.

திங்கள், 6 ஜனவரி, 2014

யார் அறிவார்

கிடைத்தும் கலக்கம்
நிலைக்குமா
அமைச்சர் பதவி.

எதிர்பாரா தருணத்தில்
நிகழ்ந்துதான் விடுகிறது
ஓர் விபத்து.

யார் அறிவார்
நாளை என்னவென்று
பெட்ரோல் டீசல் விலை.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

பெய்த மழை

காட்டிக்கொடுத்தது
பெய்த மழை
சாலையின் ஊழல்.

கும்பலாய் படையெடுப்பு
கை வைத்தவனைத் தாக்க
தேனீக்கள்.

சுருதி சுத்தம்
தேசம் முழுதும்
பஞ்சப் பாட்டு.

மழை இல்லை
வேகமாய் வளர்கிறது
விலைவாசி.

வெள்ளி, 3 ஜனவரி, 2014

பொய்கள் சூழ் வாழ்வு


நான்
நீ
அவன்
இவன்
அது
இது
எல்லாம்
பொய்.

எங்கும்
எதிலும்
எப்போதும்
பொய்களின் ஆதிக்கம்.

அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்து
கிடக்கிறது
பொய்களோ காற்றைப்போல.

ஆழி சூழ் உலகு
பொய்கள் சூழ் வாழ்வு