ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அழகு

கடும் வெயில்
ரசிக்கிறேன்
வழியும் அவள்அழகு.

கவிதை

புல்லின் பனித்துளியாய்
நெஞ்சில் அமரும்
உன் கவிதை.

வானம்

எங்கேயோ பெய்யும் மழை
மனக் குமுறுலை எதிரொலிக்கும்
இடியாய் வானம்.

மூக்குத்தி

ஏழைச் சிறுமிக்கு
மூக்குத்தி பொன்னானது
ஜிகினா பேப்பர்

புத்தன்

கோடிகளாய் குவிக்கும்
கோட்டீஸ்வரன் வீடு
தெரு மாடத்தில் புத்தன்.

ஆடுகள்

வெள்ளாடுகள் நம்பும்படி
உரைக்கின்றன உபதேசம் சில
கருப்பாடுகள்.

பாதை

தயக்கம் உடைத்து
எழுந்து நட
பாதை உருவாகும்.

சந்தேகம்

எழுதி முடித்த பின்
முளைத்தது சந்தேகம்
ஹைக்கூவா சென்ரியூவா?

தவளை

பாஷோவின் தவளை
நீர் நிறைந்த குளம்
குதித்தது ஹைக்கூ.

இரகசியம்

பெயரற்றுப் போவதில்
மறைந்திருக்கு
நெருக்கத்தின் ரகசியம்.

நீ

வெயில் கண்டு வாடும் மனம்
உன் வருகை கண்டு உணரும்
கோடையில் ஒரு மழை.

கூடல்

விட்டுக் கொடுத்தனர்
வெற்றி பெற்றனர்
கூடல்.

ஆடை

தேன் ஒழுகப் பேச்சு
மெல்ல நழுவியது
ஆடை.

விளக்கு

இருவரின் கொஞ்சல் மொழி
கண்மூடிக் கொண்டது
விளக்கு.

புத்தகம்

காற்றில் புரண்டு
கவனம் ஈர்க்கிறது
புத்தகம்.

எறும்பு

தண்டு கிளை இலை என
எல்லாம் வரைய வரைய
குறைந்தது ஊரும் எறும்பு.

சனி, 29 ஏப்ரல், 2017

குடும்பம்

குடும்பமே அழுகிறது
வேறொன்றுமில்லை
தொலைக்காட்சி தொடர் கண்டு

தேய

உழைத்து ஓடாய் தேய
ஒருநாள் விடுப்பு
மே தினம்.

உணர்வு

தனியனாய் எண்ணியவன்
உணர்ந்தான் ஊர்வலத்தில்
தனக்காக எத்தனை பேர்.

பூமாலை

நீ நான் இல்லை
நாமென முழங்கு
பூக்கள் சேர பூமாலை.

நடனம்

அழகிய நடனம்
ஆடுகிறார் விரலால்
செல்போனில்.

அமைதி

ஆர்ப்பரித்து எழும் கடல்
அமைதியாய் பார்த்திருக்கும்
தியான புத்தர்.

குட்டி

குட்டி நாய் கத்த
சமாதானம் செய்யும்
பொம்மை தந்து குழந்தை.

கொடநாடு

மர்ம தேசம்
தொடரும் கொலைகள்
கொடநாடு.

பூதம்

கண்டு மிரளும் முதலாளி
எழுந்து வரும்
கோடிக்கால் பூதம்.

முறை

உழைப்பாளி மே தினத்தில் ஆவலாய்
பார்க்கிறான் இந்திய
தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.

சொந்தம்

யாருக்கு என்றே
தெரியவில்லை முழுதாய்
சொந்தம் கொண்டாடுகிறோம்.

வால்

சேர்த்து பிடித்து
அன்பாய் கொஞ்ச
வால் ஆட்டும் நாய்.

முக்கண்

முக்கண் பார்த்து அஞ்சாது
நடுவில் குத்தி ஓடுகிறான்
வேகமாய் பனை வண்டி.

நிறம்

நிறம் மாறியது பச்சை
வயல் வெள்ளையாய்
கூட்டாய் கொக்கு.

நிழல்

மரத்தில் ஏற ஏற
தரையில் தவழ்கிறது
நிழல்.

கமிஷன்

யாருக்கு தெரியும்
இலை வாங்க இத்தனை
பூ மலர எத்தனை கமிஷன்.

விசாரணை

யார் யாருக்கு போனது
நடக்கும் தீவிர விசாரணை
தனக்கும் வரவேண்டும் என்று.

செல்போன்

உம் கொட்டி கேட்கிறாள் பாட்டி
பேரன் சொல்லச் சொல்ல
செல்போன் செயல்.

சிரிப்பு

கை தட்டி சிரிக்கும் குழந்தை
செல்போன் ஆன் செய்யாது
பேசும் பாட்டி.

வியர்வை

உழைத்து முடித்து
எண்ணி பார்க்க
மிச்சமானது வியர்வை.

அழுகல்

துருவி துருவி பார்க்க
ஒன்றும் பயனில்லை
தேங்காய் அழுகல்.

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

முடிவு

பேசி முடிவெடுத்தது
மைனாக்கள் ஒன்று சேர்ந்து
வலலூறுகளின் உலகம்.

ஆசை

ஒன்று இரண்டு மூன்றென
அடுக்கி பெருகும் ஆசைகள்
புத்தன் சிலை வாங்க.

முயற்சி

தொடர்ந்து முயற்சிக்கிறது
சில் வண்டு ஆழ்ந்த
தியானத்தில் புத்தன்.

சாரல்

வெளியில் மழை
மனதில் விழுகிறது
நினைவுச்சாரல்.

கல்யாணம்

கன்னி கழியாது
கட்டை வேகாதோ
வாழை மரத்துடன் கல்யாணம்.

பொய்

ராஜ ரிஷி பட்டம்
வேண்டி நின்றார்
அரிசந்திரனிடம் பொய்.

நெசவாளி

மேல் ஏற ஆசை
குழிக்குள் இறங்குகிறான்
நெசவாளி.

சிறுமி

அட்சயதிருதியை ஆசை சிறுமிக்கு
காதில் தொங்கும்
வேர்கடலை.

வேலி

ஜனநாயக நாடு
முழுச் சுதந்திரம்
வேலியே பயிரை மேய.

அகலிகை

அவதாரப் புருஷன்
கட்டியவளை தீயில் இறக்கினான்
அகலிகை மீண்டும் கல்லானாள்.

நிழல்

ஒரு நேரம் குறைந்து
ஒரு நேரம் நீண்டு
ஒரு நேரம் மறைந்து
எப்போது என்னை
என்னைப் போல்
காட்டுவாய் எனக்கு
நிழலே.

வியாழன், 27 ஏப்ரல், 2017

அணில்

பூவும் காயும் தொங்க
வரைந்தேன் மாமரம்
கடிக்க வந்தது அணில்.

விளையாட்டு

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு
தேவை ஆறுவெட்ட
தாய விளையாட்டு.

உண்மை

கூடிப் பேச கோடி நன்மை
கிடைக்கும் கேடிகளுக்கு
என்பதே மிகப்பெரும் உண்மை.

முகம்

எப்படி திருத்தி வரைந்தாலும்
தலை கலைந்தே வருகிறது
தொழிலாளியின் முகம்.

அழகு

வெயிலிலும் கூடுகிறது
அழகு கைபேசியில் எடுத்த
தன் புகைப்படம்.

புதன், 26 ஏப்ரல், 2017

புல்

புலி வேஷம் போட்டு ஆட்டம்
பொழுது போனா கிடைக்குமா
பசிக்கும் வயிற்றுக்கு புல்.

ஏக்கம்

பல வண்ணக் கட்சிக் கொடி
ஏக்கமாய் பார்க்கும்
அம்மணச் சிறுவன்.

ஈக்கள்

சொந்த பந்தங்கள்தள்ளி
அமர்ந்திருக்க மேல் விழுந்து
அழும் ஈக்கள்.

உயரே

நீர் குறைந்தது
நெல் குறைந்தது
உயரே தூக்கில் விவசாயி.

காற்று

விசிறியில் நீர் தெளித்து
ஏ சி காற்று என்கிறாள்
குழந்தைகளுக்கு ஏழைத்தாய்.

போதும்

கெட்டதில் பாதி கிடைத்தால்
போதும் சொன்னார்
புத்தகம் போட்டவர்.

நிலையாமை

எதுவும் நிலை இல்லை
உணரும் தருணம்
நீக்கி இருந்தனர் புகைப்படம்.

கோடி

பொருள் புரிந்த ஆட்சியாளர்கள்
குழு அமைத்து பேசுகிறார்கள்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

சனி, 22 ஏப்ரல், 2017

பூக்காரி

பூவுக்கு நீர் தெளித்து
முந்தானையால் விசிறுகிறாள்
தன் வாட்டத்திற்கு பூக்காரி.

வாசனை

அடையாளம் காட்டியது
கூடையில் மிச்சமான வாசனை
பூக்காரி என்று.

வெயில்-3

பூக்கூடை காலியான பின்னும்
கனமாய் இருக்கிறது
வெயில் நிறைந்து.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

கதை

ஆர்வமாய் கதை சொல்ல சிறுமி
கேட்டு தலையாட்டும்
பக்கத்தில் நின்ற ஆட்டுக்குட்டி.

பசி

கொத்திப் பிடிங்கி எடுக்கும்
பசிக்கும் வயிறு பாம்பு
ஆட்டிப் பிழைக்கும் பிடாரன்.

கண்ணாமூச்சி

கண்ணா மூச்சி விளையாட்டு
ஒளிந்தாடும் குழந்தை
முகிலில் மறையும் நிலா.

வழி

வேடிக்கை தவிர வேறு வழி இல்லை
தடுமாறித் தவிக்கும் நிலா
சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள்.

தனிமை

வீட்டில் ஒரே குழந்தை
தீர்க்க  தனிமையை உதவும்
தெரு நாய்க்குட்டி.

இருள்

பகல் கண்டு இருள்
 ஓடி ஒளிந்து கொள்ளும்
இருட்டில்.

பெயர்

பெயர் மாற்றம் இல்லை
கரை இருந்தாலும் அது
வெண்ணிலா.

தேடல்

தேடி அலைகிறார்கள்
தொலைத்து விட்டு
ஏதேனும் ஒன்றை எல்லாரும்.

ருசி

கோழிக் கொழம்பு ருசி
சுவைத்து உண்பவன்
ஊசி போட அஞ்சுகிறான்.

குழந்தை

ஓடி ஆட இடமில்லை
கான்கிரீட் வனங்களுக்குள்
கணினியில் சிறைபடும் குழந்தை.

கோபம்

சொன்னால் கேட்க வில்லை
கோபித்துக் கொள்ளும் குழந்தை
பொம்மை முகம் திருப்பி வைத்து.

காலம்

காலம் கனிந்து வரும்
நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்
கம்யூனிஸ்ட்டுகள்.

கணக்கு

கணக்கு தீர்ந்த பாடில்லை
எண்ணி எண்ணி தினம்
ஓய்வெடுக்கும் அமாவாசையில்நிலா.

செய்தி

வயிறு எரிகிறது கேட்டு
தொலைக்காட்சி செய்தி
எங்கேயோ பெய்த மழை.

சேவல்

தூங்கவே இல்லை இரவு
விழித்துக் கொண்டிருக்க
விடியலைச் சொல்லும் சேவல்.

பயம்

இரவு பயம் இன்றி
பாப்பா பக்கத்தில் தூங்குகிறது
சாமி பொம்மை.

வியாழன், 20 ஏப்ரல், 2017

எது

மறைவிடம் எது
தெரியவில்லை தொடர்ந்து
குரைக்கும் தெரு நாய்.

விசிறி

தாங்க வில்லை வெயில்
விசிறிக் கொள்கிறார்கள்
ஆறவில்லை மனப் புழுக்கம்.

மனம்

வெளியூர் மாற்றம்
விட்டுச் செல்கிறான் தெரு
நாய் குட்டியிடம் மனம்.

கதவு

வெளியிலிருந்து வருவது
உள்ளிலிருந்து செல்வது
எதைத் தடுக்கும் கதவு.

சாதி

வெட்டிச் சாய்தனர்
மனித உயிர்களை
வாழுமோ சாதியின் பெருமை.

தேடல்

எல்லாருக்கும் தெரியும் என
எல்லாருக்கும் தெரியாது
பரஸ்பரம் நடக்கும் தேடல்.

பாவம்

நம்பிக்கையோடு போடுகிறார்
தீர்ந்துவிடும் பாவம்
தோப்புகரணம் பிள்ளையாரிடம்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

விலைவாசி

உயரே உயரே பறக்கிறது
இலையோடு சேர்ந்து
இங்கு விலைவாசி.

கப்பல்

துண்டு துண்டாய் இருப்பது
ஒன்றாய் சேர்ந்திட
கப்பல் ஏறிப் போனது.

விவசாயி

அண்ணாந்து பார்க்கிறான் விவசாயி
எட்டாத உயரத்தில் இருக்கு
இன்னும் அவனுக்கான அரசாங்கம்.

பூனை

மறைந்திருந்து குரல் எழுப்புகிறது
வார்த்தைகள் வெளி வராமல்
பூனை குறித்த கவிதை.

லாவகம்

பூகட்டும்  லாவகம் இயல்பாய்
கை வரப் பெறுகிறார்
வார்த்தைகள் சேரக் கவிதை.

மனம்

இளவம்பஞ்சு
மெல்ல மேலெழுந்து பறக்கிறது
காற்றில் அலையும் மனம்.

திங்கள், 17 ஏப்ரல், 2017

குழப்பம்

எதை எண்ணி இருக்கும்
புரியாத குழப்பம்
புன்னகைக்கும் புத்தர்.

பேதம்

பேதம் ஏதுமில்லை
ஒன்றாய் பொம்மைகடையில்
கடவுள் சிலைகள்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

இரவு

இரவென்பது இருட்டாகாது
வெளிச்சம் உணரும்
மறுபக்கம்.

பகலைக் காட்டிலும்
இரவில் அதிகம்
புதிய தோன்றலும்
புதியதற்கெதிராய்
அழிதலும்.

இரவு சுகம்
இரவே வலி
இரவு நம்பிக்கை
இரவே அவமானம்
இரவு புதிர்
இரவே விடை
இரவு வரம்
இரவே சாபம்
இரவு வெற்றி
இரவே தோல்வி

நம்மை அறிய
நமக்கானதை அறிய
உதவும் இரவு

இரவைக் கொண்டாடு
இரவே எல்லாம்
பகலைவிட...

வெயில்-3

வெயிலின் உக்கிரம்
தொற்றிக் கொண்டது
பெட்ரோல் விலை.

வெயில.-2

கடும் வெயில்
கண்டு உருகுகிறது
தார் சாலை.

வெயில்

கடும் வெயில்
வழிந்தோடுகிறது சாலையில்
கானல் நீர்.

தாகம்

குடித்து தாகம்
தீர்க்கும் தார்சாலை
கானல் நீர்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

நிறம்

கருப்பு ஒரு நிறம்
உமக்கு ஆனா எமக்கோ
வாழ்க்கை முறை.

அம்மணம் - 4

இனி எதுவும் தேவையில்லை
மகிழ்ச்சி கொள்ளும் அரசு
விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்.

அம்மணம்-3

ஒன்றுமில்லே விவசாயத்தில்
குறியீடாய் நின்றான்
நிர்வாணமாய் விவசாயி.

உலகம்

வள்ளுவன் வாய் மொழி
நம்பிக் கெட்டான் விவசாயி
“ஏர் பின்னது உலகம்”,

தேர்தல்

தவிக்கும் வாய்க்கு
தண்ணி இல்லை ஆனா
ஆர்.கே. நகரில் பண மழை.

துக்கம்

பயிர் வாட தாங்காதவன்
தாங்கிக் கொண்டான்
மானம் போவதை விவசாயி

சந்தேகம்

சந்தேகமாய்  கேட்கும் குழந்தை
தமிழ்நாடு தனிநாடா?
விவசாயிகளிடம் பேசா பிரதமர்.

கனவு

எத்தனை எத்தனை கனவுகள்
பறித்துக் கொண்டது ஒற்றைசொல்
தேர்தல் தள்ளி வைப்பு.

அம்மணம்-2

இந்தியா என் தாய்நாடு
இதனால் பெருமை அடைகிறேன்
நிர்வாணமானான் விவசாயி.

காயுது

பாலாறும் தேனாறும் காயுது
அட போப்பா பட்டுக்கோட்டையாரே
இப்பவும் ஏழை வயிறு காயுது.

கொஞ்சம்

பழைய இரும்புக்கு வெங்காயம்
இன்னும் கொஞ்சம் போடு ஏர்காருக்கு
கெஞ்சிக் கேட்கிறாள் சம்சாரி.

அடி

முடச்சொல்லி போராடுனா எப்படி
கிடைக்காம போகுமே கமிஷன்
கோபத்தில் வைத்தாரோ அடி.

ஆடை-2

இனிமேல் ஒன்றுமில்லை
எல்லாம் இழந்தான்
ஆடையும் சேர்த்து விவசாயி

தேர்தல்-1

தேர்தல் செலவு என்னவோ உண்மை
நீயா நானா சண்டை மறந்து
காரணம் அறிந்தால் நன்மை.

அதது

அதனதன் போக்கில் அதது
வாழும் வரை ஒன்று தான்
குளவியும் வண்ணத்துப்பூச்சியும்.

அம்மணம்

பல வகை இந்தியா சொல்லும்
மோடி ஆட்சியில் இப்போ
அம்மண இந்தியா.

ஆடை

அரை ஆடைக்கு மசிஞ்சான் வெள்ளைக்காரன்
முழுசா துறந்தும் மசியலையே
நம்மளோட ஆட்சிக் காரன்.

அறுவடை

வளர்ந்து கொண்டே இருக்க
எப்போ நடக்கும் அறுவடை
விவசாயிகள் போராட்டம்.

நிழல.-3

நண்பரிருவர் நிழல் குறித்து
பேச நிழல்களிரண்டும்
தங்களுக்குள் பேசியது.

நிழல்-2

ஒற்றைப் பனைமரம்
தனியாய் நிற்க அதற்கு துணையாய்
நின்றது நிழல் மரம்.

நிழல்-1

பயந்தோடி ஒளிந்து கொண்டது
இருள் வரக் கண்டு
உடன் வந்த நிழல்.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

சாலை

நேராகப் போகத் தெரியவில்லை
வளைந்து வளைந்து போகிறது
தார் சாலை.

நிலா

யாரும் அற்ற தார்சாலை
வீணாய் பொழிகிறது
பால் நிலா.  

வியாழன், 6 ஏப்ரல், 2017

கண்ணீர்

மணல் லாரி சிந்திச் செல்லும்
தண்ணீர் ஆற்றின் கடைசி
சொட்டுக் கண்ணீர்.

கற

ஆடுற மாட்டை ஆடிக் கற
பாடுற மாட்டை பாடிக் கற
ஆர்.கே. நகர் வாக்காளர்கள்.

பொம்மை

கம்பீரமாய் விளைநிலம் காத்தது
பாவம் தொங்குகிறது
கட்டிடத்தில் திருஷ்டி பொம்மை.

திங்கள், 3 ஏப்ரல், 2017

அவளுக்குப் பின்னால் அவள்

தன்னால்
அலங்கரிக்கப்பட்ட அவள்
அவளுக்குள் அவளே
ஔிந்திருக்கிறாள்
தினமும் தன்னை பார்க்கிறாள் அவள்

அவளது ஆன்மா காயப்படுகிறது
ஒரு நிலையில்
பழிகளால் தினம்தினம்

அவள் வாழ்நாள் முழுவதும்
அவள் மாதவிடாய் ரத்தம்
ஒவ்வொரு மாதமும்
அவளது ரணங்களை
ஆற்றுகிறது...

அதுவே
அவளை
அவளிலிருந்து
ஔிரவும் செய்கிறது...

அதுவே
அவளை நாளை
உயிருடையவளாகவோ
கற்சிலையாகவோ
உலவச் செய்யும் அவளை...

Poet:In English- Alka Tyagi
தமிழில். இராம.சுடர்க்கொடி.( என் மகளின் மொழிபெயர்ப்பில்)

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

நினைவு

சும்மா இருக்க விடுவதில்லை
ஏதேனும் ஒன்று என்னை
அசைபோட வைக்கும் உன் நினைவு.

இருதயம்

ஏழுவயது குழந்தை வன்புணர்வு
எழுபதுவயது பாட்டி கொலை
உன் இருதயம் கலங்காதிருப்பதாக
மாதாகோயில்பிரசங்கி

மேகம்

ஒருவரி எழுதும் முன்பே
ஓராயிரம் வரிகள்
எழுதுகிறது வானில் மேகம்.

இனிமை

காண்பதெல்லாம் இனிமை
தடுமாறி நிற்கிறான்
சர்க்கரைக்காரன்.

கல்

கல் மரம் தெரியும்
கல் மனம் அறிவோம்
கல்லான அரசாங்கம் மத்தியில்.

கடை

சருகுகள் உதிர
துளிர் விடும் மரம்
நெடுஞ்சாலை கடைகள் மூடல்

களம்

புது கவிதைக்கு எழுத்து
ஹைக்கூ வகைமைக்கு
களம் செல்பேசி

பொய்

பொய் என்று தெரியும்
இருந்தும் ரசிக்கிறேன்
சொல்வது நீ என்பதால்.

நான்

நானோ பட்டாம்பூச்சி பின்னால்
ஆனால் பறக்கிறது அது
மலர்களைத் தேடி.

நிழல்-3

வளரவில்லையே என்ற குறை
தீர்த்து வைத்தது
மாலை நேர நிழல்.

நிழல்-2

அவள் உணவு உண்ண
தானும்  கொஞ்சம் உண்டு
பசியாறுகிறது நிழல்.

நிழல்-1

கடும் வெயில்
காலில் விழுந்து வணங்குகிறது
விட்டுவிடு என்று நிழல்.