வியாழன், 29 டிசம்பர், 2016

நோட்டு

  1. ஆயிரம் ஐநூறு நோட்டு
    செல்லுபடியாகும் இடுகாட்டில்
    பணமெனில் பிணமும் வாய்திறக்கும்.

புதன், 28 டிசம்பர், 2016

கல்லடி படும்...

காய்த்த மரம் கல்லடி படும்
பாவம் சருகு
உதிர்ந்தும் மிதிபடுகிறது.

திங்கள், 26 டிசம்பர், 2016

பொம்மை

தன் துணி போட ஆளில்லை
கவலை தீர்ந்தது
காவல் பொம்மை.

பொம்மை

அறிந்திருக்க நியாயமில்லை
கண்டு பதறும் பறவை
காவல் பொம்மை.

மணல் வீடு

1. மணல் வீடு கட்டி கைதட்டி குடிபுகும் குழந்தை. 2. தன் பசிக்கு ஒன்றுமில்லை தெரு பிள்ளைகளுக்கு மண்சோறு போடும் குழந்தை. 3. மரபாச்சி பொம்மை புது துணி கட்டினாள் தன் கிழிந்த பாவாடை மறந்து. 4. கொஞ்சநேர விளையாட்டு சண்டையும் சமாதானமும் நடக்கும் மணல் வீடு. 5. வீடு கட்டும் விளையாட்டு சேர்க்க மறுக்கும் அக்கா ஏக்கத்தில் வாடும் பாப்பா. 6. கலைந்தபோதே கலைந்தது கண்ட கனவுகள் மணல் வீடு. 7. பல அடுக்குகள் கட்டி முடித்தால் கனவில் மணல் வீடு. 8. கட்டி முடித்த மணல்வீடு போட்டி நடந்தது கோலம் போடுவது யார்? 9. பெய்யும் மழை ஏக்கத்தில் குழந்தை கட்டிய மணல்வீடு. 10. தேடி அலையும் குழந்தை நேற்று விளையாட்டு கட்டிய மணல்வீடு.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

விவ சாயி-2

நினைத்து குமுறுகிறான்
விற்ற நிலத்தை
விவசாயிகள் தினம்.

விவ சாயி

கண்டுகொள்ள யாருமில்லை
அவன் கொண்டாடவில்லை
விவசாயிகள் தினம்.

கருப்பு

கருப்பு
சிலருக்கு நிறம்
கருப்பு
சிலருக்கு துக்கம்
கருப்பு
சிலருக்கு ஆகாதது
கருப்பு
சிலருக்கு வெறுப்பு

கருப்பு
எங்களின் அடையாளம்
கருப்பு
எங்களின் வாழ்க்கை
கருப்பு
எங்களின் வலி
கருப்பு 
எங்களின் உயிர்

நாங்கள் 
கருப்பர்கள்
உலகம் முழுதும் 
உள்ள உழைப்பாளிகள்.


இருப்பு


இருக்க வேண்டிய இடத்தில்
இருக்கு சில
இருக்கக் கூடாதது
இருக்க வேண்டிய சில
இல்லாமல் இருக்கிறது.

பேச்சு

ஒன்றாய் அமர்ந்து
பேசிக் கொண்டனர்
மனக் வேற்றுமை.

வெள்ளி, 11 நவம்பர், 2016

வேண்டுதல்

பாலும் தெளி தேனும்
பாகும் பருப்பும்
இவை நான்கும்...
நாலென்ன
ஐநூறு ஆயிரம்  தரேன்
பிள்ளையாரே
நீ எனக்கு
ஒரு நாலு நூறு
மட்டும் தா
அவசர செலவுக்கு.

மோ(ச)டி

வரும்போதே பேசினோம்
மோ(ச)டி வருகை என்று
வாய் சொல் தலைமூட்டை.

பூவாய்

பூவாய் மாற்றியது
தோள்மீது அமர்ந்து என்னை
வண்ணத்துப் பூச்சி.

புதன், 9 நவம்பர், 2016

பணம்

ஆயிரம் ஐநூறு நோட்டு
செல்லுபடியாகும் இடுகாட்டில்
பணமெனில் பிணமும் வாய்திறக்கும்.

செவ்வாய், 8 நவம்பர், 2016

பதற்றம்

கட்டும் நூல் கண்டு
பதறித் துடித்தான்
கூடுதல் விடைத்தாள் இல்லை

நட்பு

ஈக்கால் நாய்க்கால்விரல் எதுவாயினும்
ஈகை குணம் இருந்தால்
வாய்க்கால் ஆகும் நட்பு.

திங்கள், 7 நவம்பர், 2016

தரை மீன்கள்

நிழலின் அருமை வெயிலில்
தண்ணீர் விட்டு வந்த
தரையில் துள்ளும் மீன்கள்.

பாட்டு

வலை வீசி கடலில் மீனவன்
கவலை மறக்கப்பாட
பாட்டுக் கேட்டு சிக்கும் மீன்கள்.

திங்கள், 31 அக்டோபர், 2016

அமோகம்

விளம்பரம் ஏதும் இல்லை
அமோகமாய் நடக்குது விற்பனை
டாஸ்மாக் கடை சரக்கு.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

பிள்ளை முகம்

ஏதேனும் ஒன்று
வம்புக்கு இழுக்க
மூணாவதாய் பெறந்ததும்
பொட்டக்கட்டையா...
வம்சமே அப்படி...
பாவம் அவன்
என்ன வரம் வாங்கினானோ
அவனுக்கு இவளால
இப்படியாகுது...
இன்னும் எத்தனையோ
சொல்லில் அடங்கா
மாமியின் சீண்டல்
நாத்தியின் கிண்டல்
கணவனின் ஏச்சு
சுற்றம் சொல்லும் குற்றம்
கூட்டும் சுமை
கணக்கிடும் மனசு
எல்லாவற்றையும்
நொடிகளில்
மறக்கச் செய்யும்
பாலுண்டு
முலைக்கனமிறக்கி
சிரிக்கும்
அப்பழுக்கில்லா


பிள்ளை முகம்

வெள்ளி, 14 அக்டோபர், 2016

என்னைப்பற்றி

யார் யாரோ அறிந்திருக்கிறார்கள்
என்னைப் பற்றியும்
எனக்கானவை பற்றியும்.

நடை உடை
மூக்கு முழி
இப்படி சிலர்.

பழக்க வழக்கம்
பேச்சு உணவு
இப்படி சிலர்.

நல்லவன் கெட்டவன்
இல்லை ஏமாளி
இப்படி சிலர்.

இன்னும் சில
சொல்ல முடிந்த
சொல்ல முடியாதபடி...

அறிந்திருக்கிறார்கள்
என்னையும்
எனக்கானவையையும்

எனக்குத்தான்
தெரியவில்லை சரியாய்
என்னைப்பற்றி.

உடுத்த

கிடைக்குது எல்லா வசதியும்
வெள்ளையும் சொள்ளையுமா உடுத்த
கட்சிக் காரர்களுக்கு எப்பவும்.




















புதன், 12 அக்டோபர், 2016

கதைப்பு....

நெடுநாளைக்குப்பின்
நிகழ்ந்தது இச்சந்திப்பு
இருவருக்குமிடையில்
பரிமாற்றமானது
சூடான விவாதங்கள்.

அன்றாட நடப்புகள்
கதைப்பில்
அதிகம் இடம்பிடித்தது.

காவிரி கலவரம்
மேலாண் வாரியம்
முதல்வரின் உடல்நிலை என
நடப்புகளை பேசி முடிக்கையில்

கொஞ்சம்
இலக்கியமும் இடைப்பட்டது
தி.ஜா படிச்சிருப்பே
மோக முள் போல்
இன்னைக்கு சொல்லமுடியலே
என்றவரிடம்
என்னை ஈர்த்த
மரப்பசுவும் அம்மா வந்தாளும்
இடம் பிடித்தது.

தி.ஜா வை தம் சிறுகதைக்குள்
பெண்மன ஓட்டத்தை சொல்வதில்
மிஞ்சிவிட்டார்
கு.பா.ரா-என்றதும்
எல்லாம் அவரது
ராங்கி நெனப்பு
கவிதைக்கு பின்னாடி என்றார்.

பெண்கள் எழுத்து
என திசைமாறியபோது
என்னமாய் சொல்லிவிட்டார்
மனிதர் கந்தர்வன்
“ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை”-என்று.

இப்பவும் கவிதைங்க
பிச்சமூர்த்தியின்
காட்டுவாத்துகள்
ஆத்துமணலில் நடந்த
காலடித்தடம் போல
ஒன்னும் புரிய....

இன்றைக்கும்
எத்தனையோ வருது
யாருக்கு சொல்லை
காய்ச்சி வடிக்க வருது
கவிதை என்றார்.

அத்தனையும்
ஒன்றுவிடாமல்
எங்களுக்கிடையே ஆனவைகளைக்
கேட்டு கொதிப்படங்கிக்
கொண்டிருந்தது
இருக்குமிடையில்
மேசை மீதிருந்த
தேநீர் கோப்பைகள் ரெண்டும்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

மனப் பறவை

பறவைகளுடனான உலகம்
அலாதியானது
விந்தை நிறைந்தது.

பறவைகளின் மொழிதலில்
ஆயிரமாயிரம்
பொருள்கள்.

ஒவ்வொரு சிறகசைப்பிலும்
விரிந்து கொள்ளும்
ஓர் புதிய உலகம்.

“க்விச்” ஒலி எழுப்பி
 செல்கையில்
 சிறகு கட்டிக் கொள்ளும்.

வனாந்தர வெளிகளில்
அலைந்து திரிந்து
கூடு திரும்பும்
மனப் பறவை
நாளும்.

கிளி

ஜோதிடக்காரன் கிளி
எடுக்கும் சீட்டுகளில் இல்லை
அதற்கான விடுதலை சேதி.

சனி, 1 அக்டோபர், 2016

பெயர்

பெயர்
இல்லாமல் இருக்கலாம்
இல்லாத வரையில்
எதுவுமில்லை

ராமன் என்றால் இந்து
ரஹீம் என்றால் முஸ்லீம்
ராபர்ட் என்றால் கிருத்து

வெறும்
மனிதன் என்பதற்கு
என்ன
பெயர்.

வரம்

யார் அறிவார் வாங்கிய வரம்
பெயர் எடுக்கும் பிள்ளை
பெயர் கெடுக்கும் பிள்ளை.

அடகு

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு
அடகு வைத்து திரும்புகிறது
மார்வாடி கடையில்.

எடுப்பாய்

அளவாய்
தேர்ந்தெடுத்தார் போல
எடுப்பாய்
எல்லாம் இருக்கு
உனக்கு
இதுபோல்
இப்படி சொல்ல
எதுவும் இல்லை
எனக்கு.

(*விக்கிரமாதித்தன்-அவர்களுக்கு)

ஆசை

கூழுக்கும் ஆசை
மீசைக்கும் ஆசை
இரண்டும் உள்ள வீட்டில்.

ஆத்தோட

வண்ணாத்தி மூத்திரம் ஆத்தோட
அதையும் அள்ளினான்
மணல் கொள்ளையன்.

அலை

ஓடி வரும் அலை
உடன் திரும்பும் கடலுக்குள்
கரையை பத்திரமாய் இருக்கச்சொல்லி.

அலை

ஓடி வரும் அலை
உடன் திரும்பும் கடலுக்குள்
கரையை பத்திரமாய் இருக்கச்சொல்லி.

கரை

கழுவ முடியவில்லை
ஆற்று நீரால்
மணல் கொள்ளை கரை.

வெறி

காத்துக் கிடக்கிறார்கள் வெறியர்கள்
சாதி மறுப்பு திருமணத்திற்கு
ஆணவக் கொலைகள் செய்ய.

பசி

பசி வந்திடின் பறக்கும்
பத்தென்ன பதின்னொன்றும்
பஸ்ஸீம் பற்றி எரியும்.

நாமம்

சின்னதாய் கேட்டான் அவன்
பெரிதாய் போட்டான் இவன்
நாமம் நெற்றியில்.

மனம்

வெளியில் கைகுலுக்கிக்கொள்கிறார்கள்
மனதில் நடக்கிறது
ஆடு-புலி ஆட்டம்.

பழக்கம்

மெல்ல நகரும் பூனை
பழகிக் கொண்டது அதன்
பின்னால் நகர எலி.

விலை-2

பதார்த்தக் கடையில் அவள்
பால்வீதியில் அவன்
ஆளாளுக்கொரு விலை பட்டியல்.

விலை

அறியும் இப்போது
பொதி சுமக்கும் கழுதைகள்
எது என்ன விலை என்று.

காந்தி ஜெயந்தி

மது கோப்பைகளிரண்டும் பேசின
உன் அதரம் என் அதரம்
எது அதிகம் உளறும்.

வலை பின்னல்

எட்டுது  ஒட்டுது கட்டுதுகலை
விடாமுயற்சியை சொல்லி
பின்னிடும் சிலந்தி வலை.

அனுபவ சேகரிப்பு

நேற்றைய தினம்
எதிர்பாராமல் நிகழ்ந்தது
நெடுநாளைக்குப்பிறகு
எங்களுக்கான
சந்திப்பு.

சந்திப்பின் ஊடாய்
விரிவடைந்து சென்றது
ஆல விருட்சமாய்
பால்ய நினைவுகள்.

ஐந்தாம்வகுப்பில் இருந்தபோது
ஊர் கம்மாய்
நிறைந்தோட
அம்மாணமாய் குளித்தகாட்சி
அவள் பார்த்துவிட்டாளென
வகுப்பறையில்
நாளெல்லாம்
சொல்லிச்சிரிச்ச
ரெஜினாவையும்
விட்டுவைக்கவில்லை
எங்களின் பேச்சு...

தினம்வீட்டுப்பாடம்
செய்த அவனுக்கும்
ஒரு பிலேட்டும் -சிலேட்டுமாய்
இருந்த எனக்குமான வாழ்க்கை
மாறாட்டம்

இன்னும் அவன்
ஒரு நிரந்தர
வேலைக்கு அல்லாடுவதும்
என்னையும் சொல்லி
மனபாரம் ஆறியது.

மீண்டும்
ஒரு இடைவெளியில்
சந்திக்கும் வரை
சேகரிக்க வேண்டும்
பரிமாறிக்கொள்ள
விதவிதமான
அனுபவங்களை...

வழிந்தோடும்...

அறையை சுருள்சுருளாய்
சுற்றி அலைகிறது
வெண்புகை.

உபயம் செய்தது
அலைந்து திரிய
மின் விசிறி.

நிறைமாதமாய்
மாற்றிக்கொண்டது
ஆஸ்ட்ரே.

புகைவெளியெங்கும்
அலைகிறார்கள்
வீடெங்கும்
தேவதைகள்
புன்னகை புரிந்தபடி.

அவர்களின் அசைவை
ரசித்துக்கொண்டிருக்கிறோம்
இருக்கையில்
அமர்ந்தநிலையில்
நானும்
மேசையில் இருக்கும்
மது குப்பியும்.

எங்களுக்குள்
இன்னதென்று
சொல்லிக்கொள்ள முடியா
ஆனந்தம்
வழிந்தோடுகிறது
இரவெல்லாம்
தினம்தினம்.


கனவில்...

யானைகள் எல்லாம்
பூனைக்கு சேவகம் புரிகின்றன
காக்கைகள் ஜதி சொல்கிறது
குயில்களுக்கு.

கழுதைகள் ஒன்றுகூடி
ஒருமனதாய் தீர்மானம்
இயற்றிக்கொண்டன
தாங்களே
உலகின் இன்னிசைக்காவலர்கள்.

பூக்களுக்கு இருந்துவந்த
மதிப்பும் மரியாதையும்
இடமாற்றம் கண்டது
இனி எங்கும் முட்கள்.

காலம் மாறிவிட்டது
பகலில் துயில்கொண்டு
இரவில் உலா
எல்லாம் நேற்றைய கனவில்...


பொய்-உண்மை

கவனமாய் கேளுங்கள்
பொதுவான கவனிப்பு
போதாது என்றே கொள்ளுங்கள்
பின் வருந்த நேரிடலாம்
சற்றே கூடுதல் கவனம்

என்சொல்
எல்லாம் பொய்
பொய் என்றால்
பொய்மட்டுமில்லை
உண்மையும் கூட

அதற்காக
எல்லாம் உண்மை
என்று எண்ணிவிடாதீர்
கொஞ்சம் பொய்யும்கூட.

முழுதும் பொய்யோ
முழுதும் மெய்யோ
யாரிடமிருக்கிறது
யாரையும்யாரிடமும்
வெறும் உண்மையென்றும்
வெறும் பொய்யென்றும்
இருக்க விடுவதில்லை

எப்படியும்
கலந்துவிடுகிறது
உண்மைக்குள் ஒரு பொய்யும்
பொய்க்குள் ஒரு உண்மையும்

தேடிக் கண்டேன்
உண்மையை என்பதும்
உண்மையுமல்ல
தேடாது விட்டேன்
என்பது
பொய்யுமல்ல.

உண்மையும் பொய்யுமாய்
தான் நகருகிறது
பொழுதுகள்
இங்கிருக்கும் எல்லாருக்கும்.


இலைமறை காய்போல்
பொய்மறை உண்மை

அடையாளம்

ஒன்றாகவே இருக்க வேண்டும்
என்றில்லை
ஒன்றாக இல்லாமல் இருப்பதே
கண்டறிய உதவுகிறது.
அடையாளம்.

குரலில் காணலாம் சிலரை
உருவத்தில் அறியலாம் வேறுசிலரை
பழக்க வழக்கங்களும்
காட்டிக்கொடுக்கும் சிலரை

மூக்குப்பொடி அண்ணாவிற்கு-அடுக்கி
முழங்குவது கலைஞருக்கு-வார்த்தை
முழுங்குவது நாவலருக்கு-இவை
முழுதும் சொல்லுவது கவிஞருக்கு.

சாய்வு நாற்காலி என்றால்
சிலருக்கு சில ஞாபகம்
சாம்பாரும் சட்டினியும்கூட
சாயலறிய உதவுகிறது.

பாதரட்சையும்
பயனானது
பாரதமும் இராமாயணமும்
அறிந்துகொள்ள.

வெவ்வேறான அடையாளங்கள்
தீர்மானம் ஆகிறது
எனக்கெது
அறிந்தவர் யார்?
சொல்வீர்
அடையாளம்...



ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

நிலை

காணும் இடமெல்லாம் வன்முறை
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
திரும்புகிறது இயல்புநிலை.

வெளிப்பாடு

எத்தனைதான் முயற்சித்தாலும்
வெளிப்பட்டு விடுகிறது
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன்.

சனி, 17 செப்டம்பர், 2016

பொய் விசாரணை

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதும் பொய் பொய்யே.

பசி

பசிதான் கடவுள்
நீண்ட வரிசையில் மனிதர்கள்
அன்னதானம் வழங்கும் கோயில்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

வருகை

நாளைய வருகையை
உறுதி செய்து சென்றது
சிறகை உதிர்த்து புறா.

வியாழன், 15 செப்டம்பர், 2016

பாரம்

மௌனமாய்
பார்த்திருந்தேன்
என்னையே
உற்று நோக்குவதாய்
எண்ணிக்கொண்டேன்
சிறிது நேரத்தில்
குரலெழுப்பி
பறந்து மறைந்தது
கிளி.
பார்த்துக்கொண்ட
கனப்பொழுதில்
உள்வாங்கிக்கொண்டோம்
ஒருவருக்கொருவர்
மனபாரம்.

சனி, 13 ஆகஸ்ட், 2016

சிறகு...

உதிர்ந்த சிறகு
பறந்தது அலைகிறது
இழந்த பறவையைத் தேடி.

புதன், 10 ஆகஸ்ட், 2016

கொள்ளையன்

வெளிநாட்டு கொள்ளையரை விரட்டினோம்
வீரமாய் நீட்டி முழங்கினார்
உள்நாட்டு கொள்ளையர்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

கசப்பு மிட்டாய்

தொடரும் வன்மங்கள்
கசப்பாய் கசக்கிறது
சுதந்திர தின மிட்டாய்.

கூண்டுக்கிளி.

சுதந்திரமின்னா என்ன
பொருள் விளக்கம் கேட்டது
கூண்டுக் கிளி.

சனி, 6 ஆகஸ்ட், 2016

சம்சாரி - 2

பொன் விளையற பூமின்னு
வாங்கி
நெல் விதைத்த முட்டாளுக்கு
ஒன்னும் விளையாம
தெரிஞ்சதே
களர்.

சம்சாரி-1

டெமக்கிரான் நிமக்கிரான்
பாலிடாயில்
வாங்கி அடிச்சா
சாகுமோ சாகாதோ பூச்சி
சத்தியமா சாவான்
சம்சாரி
வாங்கின கடனுக்கு.

ஞாயிறு, 31 ஜூலை, 2016

குதிரை

கால் உடைந்தாலும்
வேகமாய் ஓடும்
மனதில் ஐயனார் குதிரை.

புதன், 27 ஜூலை, 2016

காதல்

காதலுக்கு கண் இல்லை
சாதி இருக்கிறது
தொடரும் கௌரவக் கொலைகள்.

மறந்து வாழ

பழகி விட்டனர் வாழ
வாயையும் நாவையும் மறந்து
கண்ணெதிரே நடக்கும் கொடுமைகள்.

ஐயம்

வாய்த்துவிட்டதோ?
பூக்களை புறம்தள்ளி
முட்களை ரசிக்கும் மனம்.

செவ்வாய், 19 ஜூலை, 2016

நீ...



இல்லை என்பது
நிஜம்தான் என்றாலும்
நம்ப மறுக்கும் மனம்
நினைவு சலனங்களால்...

காற்றிலாடும் கதவும்
கயிற்றிலாடும் துணியும்
மனதில் ஆடும்
நீ என...

பூனையும்
நாயும் கூட
முடங்கிக் கிடக்கிறது
நீ இல்லாத வீட்டில்...

கவிழ்க்கப்பட்டு கிடப்பது
வெறும் பாத்திரங்கள்
மட்டுமல்ல
நீ இல்லா வீட்டில்
நானும்....


நீயே நானெ ஆனபின்
இல்லாமல் மறைகிறேன்
நானும்
நீ இல்லாத நாட்களில்...

சனி, 9 ஜூலை, 2016

ஊஞ்சல்

ஆடி முடித்த பின்னும்
நிற்காமல் ஆடுகிறது
ஊஞ்சல்  நினைவுகள்.

சனி, 2 ஜூலை, 2016

தொப்பை

தமிழக காவலர்களுக்கு சைக்கிள்
இனி குறையத்தொடங்கும்
மெல்லமாய் தொப்பை

புதன், 29 ஜூன், 2016

மலிவு

நாளுக்கு நாள் மலிவாகிறது
காய்கறிகள் அல்ல
கொலைகள்...

செவ்வாய், 28 ஜூன், 2016

பேச்சு

கேட்பதில்லை
அப்பாவின்பேச்சை அம்மா
அம்மாவின் பேச்சை பிள்ளைகள்.

பயம்

எவ்வளவு மறைத்தாலும்
நிருவாணம் கொள்கிறது
மன பயம்.

சனி, 28 மே, 2016

குறைவு

வித்தியாசம் குறைவுதான்
இருந்தும் பறிபோனது
ஆட்சி.

குரல்

உரக்கச் சொல்கிறார்கள்
வாங்கிக் கொண்டவர்கள்
வாய் மூடிக்கிடங்களென்று.

விலை பொருள்

இங்கு
எல்லாமும் கிடைக்கும்
பணம் இருந்தால்
இரு நூறு ஐநூறு
போட்டி கடுமை என்றால்
சில ஆயிரங்கள் போதும்
வாக்காளனை
விலைக்கு வாங்கலாம்...

இது
சிலபல
லட்சங்களானால்
வேட்பாளனையே
விலை பேசலாம்

லட்சங்கள்
மேலும் கூடும்போது
வெற்றி பெற்றவரையேகூட
ஆதரவாளர் என்ற பேரில்
நம்மவர் ஆக்கி விடலாம்.

கோடிகளில்
பேரம் நடக்கையில்
சர்க்காரே சலாம் போடும்
கோடடீஸ்வர
முதலாளிகளுக்கு...

இங்கு
எவ்வளவு கொடுத்து
வாங்கப்படுகிறோம்
என்பதில் மட்டுமே
வேறுபாடு
சாமானியனுக்கும்
சர்க்காருக்குமானது....



செவ்வாய், 24 மே, 2016

தேர்தல்-2

வேறென்ன சொல்ல
இன்னும் நம்புகின்றன ஆடுகள்
கசாப்பு கடைகாரனையே.

தேர்தல்

தேர்தல் முடிவு
பறைசாற்றியது
கோட்டருக்கும் ஸ்கூட்டருக்குமென்று.

புதன், 18 மே, 2016

கலி காலம்

காலம் கலிகாலம் தான்
வாக்குகள் எண்ணும் தேர்தல்ஆணையம்
நோட்டுகள் எண்ணுகிறது.

புதன், 13 ஏப்ரல், 2016

டாஸ்மாக்

குடிநீர் வேண்டி அலையும் மக்கள்
படிப்படியாய் மூடப்படும்
டாஸ்மாக் கடைகள்.

காதுகள்

வறண்ட நிலையில்
நாவும் பூமியும்
நிரம்பி வழியும் காதுகள்.

பலி

தவ வாழ்வு வாழ
பலி ஆடுகளாகும்
வாக்காளப் பெருமக்கள்.

வருகை

விருந்தினர் சென்ற பின்னும்
தொடர்ந்து கரையும் காகம்
வேட்பாளர் வருகை.

கூடுகள்

இலையுதிர் காலம்
இடமாறியிருக்கிருக்கும் கூடுகள்
மின் கம்பத்திற்கு.

அணிவகுப்பு

ஒன்றும் கவலையில்லை
யார் பின்னால் என்று
அணிவகுத்துச் செல்லும் எறும்புகள். 

வெள்ளி, 4 மார்ச், 2016

மறதி

மூலதனமாகிறது
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் மறதி.

குரல்

ஒலிக்கத்தொடங்கும்
இனி மக்கள் குரல்
செய்தீங்களா...செய்தீங்களா...

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

மின்மினி

ராவெல்லாம் ஒளி சிந்தி
யாரைத் தேடி அலைகிறது
மின்மினி.

காவல்

நள்ளிரவுப்பொழுது
ஒளிசிந்தி காவல்புரியும்
தோட்டத்தை மின்மினி.

திங்கள், 22 பிப்ரவரி, 2016

புரிதல்

கடைசியில் கை குலுக்கிக்கொண்டார்கள்
எதிர்கட்சி - ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
நாளை ஒரே கட்சிக்குள்ளும் இருக்கலாமென்று.

கப்பல்

கவிழ்ந்தது கப்பல்
சிறிதும் கவலையில்லை
வேறொன்று செய்தான் காகிதத்தில்.

துதி

தவறாய் புரிந்துகொண்ட சபாநாயகர்
சொன்னார் சட்டசபையில்
துதி பாடுவோர் மட்டும் பேசலாம்.

வியாழன், 28 ஜனவரி, 2016

அஸ்தி

கண்குளிர பார்க்க ஆசை
காசி விஸ்வநாதனை
போனதோ செத்தபின் அஸ்தியாய்.

அஸ்தி

வாழும்வரை நிறைவேறவேயில்லை
காசி இராமேஷ்வரப் பயணம்
செத்தபின் போனது அஸ்தி.

அஸ்தி

கடலில் கரைத்த பின்னும்
கரையாமல் மேலெழும்
நெஞ்சில் நினைவுகள்.

புதன், 6 ஜனவரி, 2016

மழை

கால தாமதமாய்
வந்து பார்க்கும் காளான்
பெய்த மழை.

மழை

ஒன்று சேர்த்தது
சாதி மதம் மறந்து மனிதர்களை
பெய்த மழை

மழை

பெய்த மழை
வளர்த்து உள்ளது
மனித நேயம்.

செவ்வாய், 5 ஜனவரி, 2016

நன்றி

நன்றி சொன்னது
நீண்ட தூரம் பறந்தமர்ந்த பறவை
தலைவர் சிலைக்கு.