புதன், 29 அக்டோபர், 2014

திரவியம் தேடி

ஒவ்வொன்றும் ஒரு மாதிரி
சக வயது பசங்களோடு
குளம் சென்று குளித்து
மீன் பிடித்து சுட்டது...

வேலி வழி ஓடி
தலையாட்டும் ஓணான்
ஒரு கண் பார்வையில்
குறிபார்த்து கல்லெறிந்தது

நாய்க்கரு மரத்தில்
மாங்காய் அறுத்து
சட்டையின்றி நிக்கவைத்தது...

வகுப்புக்குள் இருந்த
லட்சுமி ஜடையை இழுத்து
நானில்லை அவன் என்று
போக்கு காட்டி ஆடியது...

நாய்குட்டி போட்ட இடத்தில்
கண்திறக்காமல் தாய் தேட
உதவுவதாய் நினைத்து போக
நாய் கடித்து துடிதுடித்தது...

போட்டுவைத்த கோலத்தில்
சைக்கிள் டயர் உருட்டி
அழகு கோலத்தை
அலங்கோலமாக்கியது...

யாரேனும் ஊருக்குள்
புதுசாய் வந்து விட்டால்
அவர்களின் தேவைக்கு உதவி
ஆளாப் பறந்தது...

இன்னும் இன்னும்
மனமுழுக்க எத்தனையோ
ஒவ்வொன்றும் ஒருமாதிரி


நினைக்கத்தான் முடிகிறது
சொல்ல யாருமில்லை
முகம் தெரியா
மொழி தெரியா

திரவியம் தேடி
அலையும் தேசத்தில்


பால்விலை

தண்ணீர் குடித்த மாடுகள்
பன்னீர் குடிக்குமோ
பால் விலை உயர்வு

மொட்டை

அதிசயம் ஆனால் உண்மை
மொட்டை அடித்தனர் அமைச்சர்கள்
மக்களுக்கல்ல தங்களுக்கு

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

நட்பு

தேடி அலையத்தேவையில்லை
அமர்ந்த இடத்தில் கிடைக்கிறது
முகநூலில் நட்பு

யாரைத்தேடி

யாரைத்தேடி போகிறதோ
முதுகில் மூட்டையுடன்
ஊர்ந்து செல்லும் நத்தை

ஏதோ ஒன்று

மறந்திருக்க முடியவில்லை
ஏதோ ஒன்று நினைவூட்டும் காதலை
பெய்த மழை

செவ்வாய், 21 அக்டோபர், 2014

மழை

குளித்த மகிழ்ச்சி
மரம் செடி கொடிகளுக்கு
பெய்த மழையில்

ஏதேதோ பேசுகிறார்கள்
மனத்துள்ளும் வெளியிலும்
பெய்யும் மழை கண்டு

சனி, 4 அக்டோபர், 2014

இருவிரல்

இருவிரல் நீட்டி கேட்டேன்
அம்மாவா அப்பாவா
இருவிரலும் பிடித்தது குழந்தை

குழந்தை

எட்டிப்பார்த்தார் கடவுள்
கருவறையிலிருந்து
கூட்டநெரிசலில் குழந்தை

எழுதா கவிதை

என்னதான் முயற்சித்தாலும்
முடியாமல் தொக்கி நிற்கும்
எழுதாத கவிதை ஒன்று

காளான்

ஏதேனும் ஒன்று
 மழைக்கு ஒதுங்க
இயற்கை விரித்தகுடை காளான்

இதயம்

பொய்யுரைக்கிறேன் இருக்கிறதென்று
கேட்பவர்களிடமெல்லாம்
உம்மிடம் தொலைத்த இதயம்

அன்பு

திசைவெளி எங்கும்
காணக் கிடைக்கிறது
உம்மிடம் தவறவிட்ட அன்பு