சனி, 31 மே, 2014

பிடாரனின் பெரு வாழ்வு

செவி வழியாக வரும்
கதைகளில்
ஜீவக்கிறான் அவன்.

அவன் குறித்து
அறியா அவர்கள்
பரிகசிப்பின் ஊடே
முகம் மறைக்கும்
வீசிடும்
ஐம்பது காசுகள்.

மதிப்பற்றுப் போன
மதிப்பீட்டில்
மனம் உழலும்.

தோள் காய்ப்பு சொல்லும்
கூடை தொங்கும்
மூங்கில் சுமக்கும்
காலம்.

குடிகொள்ளும்
கூடைக்குள்
பிடாரன்.

மயங்க வாசிக்கும்
அவன்
மயக்கம் தெளியாது
தொடர…

உச்சி மீறும்
ஒருநாள்
விஷம்.

திசைவெளியெங்கும்
திரியும்
பிடாரன்கள்
வெறிகொண்டு
அலையும் படமெடுத்து.

பேசுவரோ
அப்போதேனும்
பிடாரனின்
பெரு வாழ்வு குறித்து.

மரம்

யாரேனும்
நல்ல கவிதை
கேட்டால் சொல்வேன்
மரம்.

நீண்டு வளர்ந்து
இருள் பரப்பி
நிற்கும்
மரம்போல்
நீள் கவிதை
வேறெது.

யாரால்
எழுத இயலும்
மரம் போல்
ஓர்
நல்ல கவிதை
இயற்கைத் தவிர.

வெள்ளி, 30 மே, 2014

சந்திப்பு வேண்டி...

எத்தனையோ தருணங்களில்
நாம்
எவையெவை குறித்தோ
தீவிரமாய்
நமக்குள்
சம்பாஷித்திருக்கிறோம்.

அடுத்தவர் பார்வையில்
மாபெரும் சர்ச்சையாய்
மிளிர
பேசியவை உண்டு.

விலக்க எண்ணி
விலகிப் போனோர்
ஏராளம்.

இன்னும்
கதைக்கிறோம்
கதைப்பினூடே
கூடும் சிக்கல்.

என்றாலும்
ஒவ்வொரு கதைப்பின்
பின்னும்
தொக்கி நிற்கிறது

ஓர் வார்த்தை
அடுத்த
நம் சந்திப்பு
வேண்டி.

பொய்கள் சூழ் வாழ்வு

எப்படியும்
சொல்ல நேரிடுகிறது
பொய்.

இங்கு
பொய்களே உண்மை
உண்மையோ பொய்.

பொய்களின்றி
வாழலாமென்றால்
பொய்களோ
காற்றைப்போல.

பொய்க்கால்
ஆட்டம் போல்
பொய்
முகத் தோற்றங்கள்.

விசுவாமித்திரர்களுக்கு
இல்லை
சிரமம்.

அரிச்சந்திரர்கள்தான்
நொடிக்கு நொடி
தோற்றுப்போகிறார்கள்.

எங்கும்
எல்லாரிடத்தும்
பொய்களின் ஆதிக்கம்.

பொய்யின்றி
இல்லை எதுவும்
என பொய்கள்.

ஆழ சூழ்
இவ்வுலகு
என்பதுபோலாகும்
பொய்கள்சூழ்
இம் மனிதம்.

பொய் சொல்லி
வாழ வாய்த்தது
இவ் வாழ்வு.

வியாழன், 29 மே, 2014

என்னடீ இது...

என்னடீ இது
கை கால் வேறாய்
கலைத்துப்போட்ட தூக்கம்

விடியலில் விழித்து
முடங்கும் வரை
வேலை பழகு...

முடங்கியபொழுதும்
சுயநினைவில்
இரு...இன்றேல்

சுற்றம்...முற்றும்...
ஊரு...உலகம்
எல்லாம் ஏசும்...

புள்ளைய வளர்த்திருக்கும்
லட்சணம் பாரு
உனக்கில்லை எதுவும்

உன்னை ஏன்
காரணம் வேண்டுதோ
மனசு...

நீ மட்டுமில்லேடீ
உன் போல் நானும்
பெண்.

பிள்ளைமுகம்

ஏதேனும் ஒன்று
வம்புக்கு இழுக்க
மூணாவதாய் பெறந்ததும்
பொட்டக்கட்டையா...
வம்சமே அப்படி...
பாவம் அவன்
என்ன வரம் வாங்கினானோ
அவனுக்கு இவளால
இப்படியாகுது...

இன்னும் எத்தனையோ
சொல்லில் அடங்கா
மாமியின் சீண்டல்
நாத்தியின் கிண்டல்
கணவனின் ஏச்சு
சுற்றம் சொல்லும் குற்றம்
கூட்டும் சுமை
கணக்கிடும் மனசு

எல்லாவற்றையும்
நொடிகளில்
மறக்கச் செய்யும்
பாலுண்டு
முலைக்கனமிறக்கி
சிரிக்கும்
அப்பழுக்கில்லா
பிள்ளை முகம்

புதன், 28 மே, 2014

பூனை மனம்

பிராணிகளில்
மிகவும் பிடித்த்து
பூனை.

பூனை குறித்து
இகழ்ச்சி கூறின்
தீப்பந்தம் ஏந்தும் மனசு.

அம்மா எப்போதும்
சொல்கிறாள்
சப்தமாய் சிரிக்காதே
அதிர்ந்து நடக்காதே
உரக்கப் பேசாதே
இன்னும் இன்னும் நிறைய

எப்படிச் சொல்ல
பூக்கட்டும் இலாவகத்தைவிட
எளிதானது
போருக்கு தலைமை ஏற்பதென

பூனை
ரொம்பவும் பிடிக்கும்
மென்மை கருதி மட்டுமன்று
அதனுளிருக்கும்

வன்மம் வேண்டியும்.

புரிதல்


எப்படி…எப்படி
புரிய வைக்க…
ஒவ்வொரு பொழுதும்
ஆச்சுதா…? இன்னுமா..? எனும்
புருஷனின் புத்திக்கு
குழந்தைக்கு பாலூட்டி
வீடு கூட்டி
எல்லாம் சரிசெய்து
தாழிட்டுக் கிளம்பும்
நான்…
பெண்ணென்று.

செவ்வாய், 27 மே, 2014

கஷ்டம்

காய் அரியும் வேளை
விரலும் சேர்ந்து அரிகையில்
தடித்து வரும்
கணவன் குரல்
பார்த்து செய்யக் கூடாது...

எதை.... எப்போ....?
கேட்க நினைத்தும்
வார்த்தை
விழுங்கும் மனசு.

எப்படிச் சொல்ல
ஒவ்வொரு
அரிதல் காயத்தின்
பின்னும் இருக்கிறது
கஷ்ட நினைவுகள்
வாய்த்தது தொடங்கி
வலிந்து
புணர்தல் வரை...

மௌனத்தின் நாவுகள்

இருக்கலாம்
வேர்களின்மரங்களின் பேச்சு வலி
குறித்து.

செடிகளும் கொடிகளும்
சல்லாபிக்குமோ?
தண்டும் தண்ணீரும்
பற்றி.

பூவுக்கும் வண்டுக்கும்
மொழி
சங்கீதமாய்
தொடர

பாழும்
மனிதர்களுக்கிடையே மட்டும்
நீளும்
மௌனத்தின் நாவுகள்

திங்கள், 26 மே, 2014

கட்சி தாவல்-சென்ரியூ

அதிகப் பசி
அதைவிட அதிகம்
உணவின் விலை.

கண்ணாமூச்சு ஆட்டம்
வெற்றி பெறுபவர்களுக்கு
மந்திரி நாற்காலி.

மாற்றம்
மனித தத்துவம்
கட்சி தாவல்.

புதன், 21 மே, 2014

மகா நடிகன்

பேசு
பேசிக்கொண்டிரு
உமது பேச்சு
மகத்துவம் மிக்கதாய்
இருக்கும்படி பேசு

முத்தமிடு
முத்தமிடுகையில்
உதடுகளில் எதுவும்
ஒட்டாதபடிக்கு
முத்தமிடு

கட்டித்தழுவு
தழுவும் போதே
தள்ளும் செயலும்
அரங்கேற்றம் காணட்டும்
அரங்கேற்றம் மட்டும்
கண்கள் அறியாவண்ணம்
கட்டித்தழுவு

கண்ணீர் விடு
ஆன்மா உருக
குரல் நடுங்க
பதறி துடிப்பதாய் 
நினைக்கும்படி
கண்ணீர் விடு

எல்லாம் என்னிடம்
இருந்தும் நீதான்
நானெனச் சொல்
உன்னைவிட உன்னைவிட
உலகத்தில் உசந்தது
பாட்டும் பாடு
நீயே நான் என்பதில்
அவனை அழி
நான் நீயென
பார்க்கப் பழக்கு

நடிகனாவாய்
இல்லை
நம்தேசத்தில்
ஆள்பவனாவாய்
மகாநடிகன்
மாமன்னன்.

பேசிக்கொண்டிரு...

ரசிக்கப் பேசு
மயக்கப் பேசு
மயங்கப் பேசு
உரக்கப் பேசு
பேச்சின் பொருள்
விளங்காதிருக்கும் வண்ணம்
பேசு பேசு பேசிக்கொண்டிரு.

கண்ணால் பேசு
உடலால் பேசு
மொழிகொண்டு பேசு
மௌனத்தில் பேசு
ஆயுதம் பேசும்
காலம் வரையில்
வார்த்தை ஜாலம்
அவசியத் தேவையாகும்
பேசு பேசு பேசிக்கொண்டிரு.


செவ்வாய், 20 மே, 2014

சிவப்பாய் ஒரு பூ

மரங்கள் இலைகள் உதிர்ந்து
இளம் தளிர்கள்
துளிர்க்க தொடங்கி விட்டது.

எல்லாரும்
பேசிக்கொள்கிறார்கள்
இனி
பூக்கும் காய்க்குமென்று.

ஊரார் பேச்சினை
கேட்கும்போதெல்லாம்
தூர தேசம் வந்துவிட்ட
என்னுள்
தோன்றி மறைகிறாள்
நகுமலர்
இனவெறி தாக்குதலில்
மாண்டுபோன
என் மகள்.

அவள் ஆசையாய்
வளர்த்த
மரத்தடியில்
நீருற்றும் வேளை
ரத்தம் ஊற்றி
மாண்டுபோனாள்.

என் வீட்டுவாசலில்
இந்நேரம்
இலைகள் உதிர்த்து
துளர்விட்டு
பூக்குமா

என்மகள்
ஆசையாய் வாசலில்
வளர்த்த
சங்குப்பூ மரம்
அவள் ரத்தம் குடித்த
நன்றிக்கு
சிவப்பாய் ஒரு
பூ

அரசியல் நாடகம் - சென்ரியூ

ராஜினாமா அறிக்கை
படித்து முடிக்கும் முன்
மீண்டும் பதவியேற்பு

அப்பா பிள்ளை
உறவு முடிவு
அரசியல்


செவ்வாய், 13 மே, 2014

சிநேகம்-ஹைக்கூ

தடுத்து விட்டது
வெள்ளை சட்டை
குழந்தையின் சிநேகம்.

உயிர்த்தெழுந்தார்
தேர்தல் தினத்தில்
இறந்து போன தாத்தா.

இடம் பொருள் ஏவல்
நானும் பிற்பட்டவன்தான்
பீகாரில் மோடி.

சொல் பார்க்கலாம்
இணையில்லா கவிதை
அம்மா.

சனி, 10 மே, 2014

புடவை-ஹைக்கூ

சிவப்பா அழகா
எத்தனை நாள் உழைக்கும்
மயில் பார்டர் புடவை.

அம்மாவின் புடவை
மாற்றம் கண்டது
அக்காவின் தாவணி.

காலமாற்றம்
தெரியவில்லை
கொசுவம் வச்சு புடவை கட்ட.


பெண்ணடிமை

என் அம்மாவுக்கு
தங்கச்சி பாப்பா பிறந்தநாளில்
எங்க வீட்டு
பசுவும் கன்று ஈன்றது

தங்கச்சி பிறந்ததாய்
அம்மாவை
பொட்டபுள்ளையா  பெத்துக்கிறா
திட்டிய பாட்டி

பொறந்த குழந்தை
பொண்ணா போச்சுன்னு
ஒருவாரம் பத்துநாள்
அம்மாவிடம்
பேசாத அப்பா

பசு
பொட்டை கன்னு
போட்டதுன்னு சொல்லி
குதூகலித்துப் போனார்கள்

தங்கைக்கு ஒரு பெயர்
வைத்தது போலவே
அதற்கும் ஒரு பெயர்
வைத்துக் கொண்டோம்.

எல்லாருக்கும்
கன்று வெறும் கன்றல்ல
செவில் நிறத்தில்
வெள்ளை புள்ளியோடு
மான்போல தோன்றிற்று

கொஞ்சநாள் போக
கன்றுக்கு
கழுத்தில் மணிகட்டி
கண்டு ரசித்தார்கள்
துள்ளும் போதெல்லாம்
எழும் சத்தம்
நல்ல சங்கீதம்
நாளெல்லாம்
சொல்லிக்கொண்டோம்.

தங்கைக்கும்
முடி வளர
குல சாமிக்கு பொங்கவச்சு
மொடடை போட்டு வெச்சோம்.

இன்னும் கொஞ்சம் நாள்
வேகமாய் உருண்டோட
கன்றுகுட்டிக்கு
அப்பா
மூக்கணாங்கயிறு
மூக்கில் ரத்தம் வர
குத்தி கட்டி விட்டார்.

ஆசை கன்று
ரணமாச்சி
என்றெண்ணி
ஏம்பா இதுபோல
என்று கேட்டதுமே

அப்பதான் கன்று
ஆடாது
ஆட்டம் போடாது
துள்ளாது
புடிச்சா புடியில்
கட்டு பட்டு நிக்குமின்னு
அடுக்கடுக்காய்
சொன்ன அப்பா

தங்கைக்கு
அழ அழ
ரத்தம் கசிய
காது மூக்கு
குத்திய காரணத்தை
இன்று வரை சொல்லவில்லை
பெண்ணடிமை
செய்கிறோம் என்று.

கவிதை-ஹைக்கூ

அவன் கவி இவன் கவி
எழுது
நீ கவி.

அதுஇது
மோசம் என்றெழுது
சிறக்கும் கவி.

என்ன யோசனை
பொறுக்கிப்போடு வார்த்தை
பிறக்கும் கவி.

எதுகைக்கு மோனை
எட்டா சொல்லிருந்தால்
ஆகும் புதுகவி.

புதன், 7 மே, 2014

2ஜி-ஹைக்கூ

காவு கொண்டது
செல்போன் டவர்
சிட்டுக்குருவி.

ஓயாத பேச்சு
செல்போனில்
வளரும் பிரச்னை.

நீதிமன்ற சாட்சி
உறவுக்கு
செல்போன் பேச்சு.

காந்திஜி நேருஜி
விடுதலை பெற
2ஜி 3ஜி சிறைசெல்ல.


செவ்வாய், 6 மே, 2014

மும்மாரி-ஹைக்கூ

நடந்தது
கல்யாணம்
மழை  வேண்டி கழுதைக்கு.

ராஜாகள் ஆணடால்
சொல்வார்கள் மந்திரிகள்
மாதம் மும்மாரி.

மழை இல்லை
தொலைகாட்சி தொடரில்
மெய் மறந்திருப்பரோ வருண பகவான்.

வருமோ கால்நடைபிழைக்க
மனிதர்கள் பொருட்டு
வாரா மழை.




மழை-ஹைக்கூ

மழை வேண்டுகிறான்
சம்சாரி
வழிந்தோடும் வியர்வை.


பெருமழை
சப்தம்
பெண்களின் பேச்சு.

கப்பல்விடும் குழந்தை
தெருவெள்ளத்தில்
கனவில்.

சொல்லக் கேள்வி
காணக்கிடைக்கவில்லை
மாதம் மும்மாரி.

வெள்ளி, 2 மே, 2014

கடல்-ஹைக்கூ

வில்லங்கம் ஏதுமில்லை
பத்திரத்தில்
பிரிந்தது சொந்தம்.

அள்ள அள்ள குறையவில்லை
கொடுக்கிறது
கடல்.

விரிவாய் எழுதிய
பத்திரத்தில் இல்லை
பெற்றெடுத்த வலி.

சொத்து மதிப்பு
சொன்ன பத்திரம்
மறந்தது தாய்பால் விலை.

புத்தனாக-ஹைக்கூ

மனம் முழுக்க ஆசை
புத்தனாக
தடுக்கும் ஆசை.

யானைதான்
தெரியவில்லை
மதம் பிடித்தது.

ரத்த அழுத்தம்
அளக்கும் கருவி
காட்டவில்லை இதயத்தை.

நல்ல வேடம்
கள்ள வேடம்
தெரியவில்லை முகமுடி.

வியாழன், 1 மே, 2014

நிழல்-ஹைக்கூ

வெட்டுக் குத்து
முடிந்தது
பத்திர பதிவு.

நடந்தது
பத்திர பதிவு
பிரிந்தது சொந்தம்.

மிதித்தும் அழவில்லை
உடன் வந்த
நிழல்.

ஒளிந்திருந்து கவனிக்கும்
இருளில்
நிழல்.