சனி, 30 டிசம்பர், 2017

ஆனந்தம்

o   உடுத்திக் கலையும் துகில்
உண்டு மகிழும் உணவு
சூடிகளிக்கும் மலர்
காண விரும்பும் மேனி
எல்லாம் எனக்கு ஆனந்தமாக
நீ
அம்பாலிகையா
அடக் கள்ளியா
நான்
ஆச்சாரியனா
அடியவனா
அன்பே அன்பே சொல்

உமக்கு என்னை
பழி வாங்குவதாய்
நினைப்பதில்

எமக்கோ
நீ பழிவாங்க
நான் இருக்கிறேன்
என்பதில்...


ஏமாற்றம்தான்
என்றாலும்
தினம் தினம்
எதிர்பார்த்துக்கிடக்கிறேன்

என் ஏமாற்றம்
உனக்கு
அளவிலா ஆனந்தம்
தரும் என்பதால்...

திங்கள், 25 டிசம்பர், 2017

பனி

குரல் நடுங்க பனியில்
பாடி வருகிறார்கள்
கிருஸ்மஸ் தாத்தாகள்

நிறம்

டிசம்பர் பனி இரவு
விழித்து காத்திருக்கிறாள்
நீக்ரோ பாட்டி
இயேசுவின் நிறம் அறிய

ஆடுகள்

நல் மேய்ப்பனை அல்ல
கசாப்பு கடைகாரனையே
நம்பும் மந்தை ஆடுகள்

சனி, 16 டிசம்பர், 2017

போட்டி

தெரிந்தே நடக்கிறது
ஒருவருக்கொருவர் போட்டி
ஒன்றுமில்லை யாருக்கும்
விட்டுப்போகையில்

சேவல்

விரைந்தோடி வருகிறது
செம்பரிதி காண
உரத்து குரலெழுப்பும்
விடியலில் சேவல்

பனி

சூடான வார்த்தைகள் உமிழ்ந்த வீதி
குளிரப் பொழிகிறது
நிலவும் பனியும்

குரல் கேட்க
முகம் மறைக்கிறது
மூடு பனி

வியாழன், 7 டிசம்பர், 2017

ஒரு கை

துளசி மாடம்
செழித்து வளர்கிறது
ஏடிஸ் கொசு


வேல் கொண்டு முருகன்
சூரனை மாய்க்க
வீழும் பொம்மை தலை


சமாதானம் செய்கிறான்
கணவன் மனைவி சண்டை
அறியான் அக்கரை பச்சை


விண் முட்டும்கட்-அவுட் 
சொல்லிக் கொண்டார் மனதில்
பாவம் செத்துட்டார் போல


தொடரும் அவலம்
உயர்த்திகுரலெழுப்ப
தேடுகிறான் ஒரு கை

கொக்கு

கைகளை வாசலாக்கி
இட்டுக் காட்டுகிறாள்
மருதாணிக் கோலம்


வீசும் காற்று
கை விரித்து நடனம்
வயலில் காவல் பொம்மை


காட்டிக் கொடுத்தது
பரந்த உலகிற்கு
இருளை ஒளி

பச்சிளம் கொடி
மெல்ல அசைத்து
இரசிக்கும் தென்றல்


உதிரும் பூ
தேன் குடிக்கும் தரையில்
இறக்கை இல்லா எறும்பு


உழவன் முன் செல்ல
பின்னால் வரும்
வயலில் கொக்கு

காட்சி

கோவில் குளம்
விழுந்து கிடக்கிறது
உள்ளே கோபுரம்

வாசம்

புரட்டி புரட்டி பார்க்க
நன்றாய் இருக்கிறது
புது நூல் வாசம்

சருகு

பேருந்து பயணம்
பின் தொடர்கிறது
காற்றில் சருகு

விட்டில்...

சிறு பொழுது வாழ்வு
விளையாடி களிக்கும்
ஒளியில் விட்டில்


ஏக்கத்தில் தவிக்கிறது
ஒவ்வொரு நாளும்
ஆசிரியர் இல்லா வகுப்பறை


பேரன் பேத்தி இல்லை
கற்றுக் கொடுக்க பிள்ளையார்
பூசை செய்யும் தாத்தா

கூடு

அரண்மனை வாயில்
காவல் இருக்கும்
குருவிக் கூடு

என் ஹைக்கூ குறித்து...

ஹைக்கூ நூற்றாண்டு தடத்தில்....ஹைக்கூ உலகம் (தொகுப்பு நூல்)-
பதினோரு கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு.
***********************************************************************
இதில் பத்தாவதாக இடம்பெற்றுள்ள கவிஞர் வேலூர் இளையவன் அவர்களின் ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய எனது கருத்து:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொறுப்பாளர்களில் ஒருவரான வேலூர் இளையவன் ( இயற்பெயர் இராமஜெயம் ) பல வீதி நாடகங்களை நடத்திய கலைஞர். கவிஞர் கந்தர்வன் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஏற்கனவே இரண்டு கவிதை நூல்களை எழுதியுள்ள இவரின் பிறப்பிடம் போளூர். இப்போது வேலூரில் வசித்துவருகிறார். நேரில் சந்தித்த தருணமதில் இவரது எளிமையும் பழகும் தன்மையும் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
வேலூர் இளையவன் அவர்களின் சிறப்பான ஹைக்கூ அணுகுமுறை பாராட்டுக்கு உரியது. ஹைக்கூ உலகம் முகநூலில் எது ஹைக்கூ...? என விவாதம் சூடு பிடித்திருக்கும் தருவாயில் இவரது ஹைக்கூ கவிதைகளை
பற்றிய ஆய்வு வெகு சிறப்பு என கருதுகிறேன்.
ஹைக்கூ ஜப்பானிய மண்ணில் 5/7/5 என்ற அசைகள் கொண்டு எழுதப்பட்ட ஹைக்கூ தமிழில், தமிழ் மண்ணுக்கே உரித்தான பாரம்பரியம், கலாச்சார தொன்மங்களை உள்வாங்கி கவிஞர்களால் சிறப்பாக எழுதப்பட்டு வருகிறது. இயற்கை, ஜென் தத்துவங்களை கடந்து சமூக அவலம், வாழ்வியல், அறிவியல், உளவியல், பெண்ணியம் போன்ற கருத்துக்களோடு மிகச் சிறப்பாக எழுதப்பட்டு வருவது போற்றுதலுக்கு உரியது.
இவ்வகையில் கவிஞர் வேலூர் இளையவன் அவர்களின் ஹைக்கூ இங்கே சமூக அவலத்தின் புரிதலை தெளிவாக்குகிறது....
• புலிவேஷம் போட்டு ஆட்டம்
பொழுதுபோனா கிடைக்குமா?
பசிக்கும் வயிற்றுக்குப் புல்
“ புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது ! “ இப்படி ஒரு பழமொழி இருக்க இப்படியொரு ஹைகூவில் என்ன சொல்ல வருகிறார் கவிஞர் ? ஆழ்ந்து நோக்கும் போது நன்கு தெளிவாகிறது...
இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய தெருக்கூத்து, கரகாட்டம், புலி வேடக் கலைஞர்களுக்கு..... மிக மிக சொற்ப வருவாய் கிடைக்கிறது. கைக்கு எட்டியது வாய்க்கு கூட எட்டாது என்ற நிலைமைதான்.
தின்னமுடியாத புல் கிடைத்தாலும் சகித்துக் கொண்டு உண்ண இந்தப் புலி வேடமிட்ட கலைஞன் காத்திருக்கிறான்....என்னே அவலத்தின் உச்சம்....அடர்த்திமிகு ஹைக்கூ என்றே கூற வேண்டும்.
மேலும்......
• வெளியிலிருந்து வருவது
உள்ளிலிருந்து செல்வது
எதைத் தடுக்கும் கதவு
இதைவிட....... பல்நோக்கு சிந்தனையில் எப்படி எழுத முடியும் இனியொரு ஹைக்கூ ?.....ஹைக்கூ என்றால் விளங்க வைக்க வேண்டும் என சொல்பவர்களுக்கு இந்த ஹைக்கூ அவரவர் கண்ணோட்டத்துக்கு, புரிதலுக்கு ஏற்ற ஹைக்கூ....!
கதவு...இங்கே... பாடு பொருள்...கவிதையின் கருப்பொருள்...ஆகா இதையே கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் காயங்கள் என்பார்.
வீட்டின் காயங்கள் என்று பல கவிதைகளில் குறியீடாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் மட்டுமல்ல சிறுகதைகளின் சிற்பி இன்னும் புதுவையில் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களும் “ கதவு “ (1965 ல்) எனும் நாவலை எழுதியுள்ளார்.
“ கதவிடுக்குகளில் பாருங்கள் இந்த முதிர்கன்னியின் முகமழிந்த கோலங்கள் தெரியும் “ என்று இறுதிவரியாக நான் எழுதிய கவிதை ஒன்று பலராலும் பாராட்டுதலைப் பெற்றதை இங்கே நினைவு கூறுகிறேன்.
வேலூர் இளையவன் அவர்களின் இந்த ஹைக்கூவை பல கோணங்களில் ஆய்வு செய்யலாம். வெளியிலிருந்து வரும் காற்று, இன்பம், துன்பம், செல்வம் , அன்பு, பாசம் , நட்பு, ஆன்மாவின் உயிர்ப்பு (பிறப்பு) போன்றவற்றை தடுக்காது கதவு....மூடிவைத்தாலும் தடுக்காது....! உள்ளிலிருந்து செல்லும் அதே செல்வம், அன்பு, பாசம், நட்புக் கரம், இன்பம் துன்பம் , பிரிந்து செல்லும் உயிர் (இறப்பு) இவற்றை தடுக்கமுடியுமா கதவு....? நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வீட்டின் கதவு வீட்டுக்குப் பாதுகாப்பு என....
இது ஒரு மாயை...மனிதம் தனுக்குத்தானே தாழிட்டுக் கொண்ட
எண்ணங்களின் மறு உருவம்...அவ்வளவுதான்....!
தத்துவ சித்தாந்தங்களை உள்ளடக்கிய சிறந்த ஹைகூவாக, வாழ்வியல் சிந்தனைகளை உள்ளடக்கிய ஹைக்கூ வரிகளாக மேற்சொன்ன ஹைக்கூவை பாராட்டுகிறேன்.
இதைப்போன்று பல ஹைக்கூ கவிதைகள் இவரது எழுத்தில்
வாழ்க்கையின் நாதத்தை நமக்குச் செவி மடுக்க வைக்கிறது.
• உழ வேண்டும் நாளை
பேசினான் மனசுக்குள்
பெய்யும் மழை
• பேதம் பார்க்கவில்லை
எல்லாரோடும் பயணிக்கிறது
இரவில் ஒற்றை நிலா
• கொஞ்சம் மழை
கவிதை எழுத எண்ணிய
காகிதத்தில் செய்தேன் கப்பல்
இதுபோன்ற ஹைக்கூ கவிதைகள் நெஞ்சில் நிறைந்தன....
வாருங்கள்...ஹைக்கூ உலகம் ....கவிதைத் தொகுப்பில் கவிஞர் வேலூர் இளையவன் அவர்களின் கவிதைகளை ரசிப்போம் ருசிப்போம் வாழ்வியலின் தடம் அறிவோம்.
........தொடரும் ( நாளை இந்த தொகுப்பின் ஆசிரியர் முனைவர் ம.ரமேஷ் அவர்களின் ஹைக்கூ கவிதைகளில் மூழ்கி முத்தெடுப்போம்...!)
......கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், 6 டிசம்பர், 2017

மழை பா

சிறு பொழுது வாழ்வு
விளையாடி களிக்கும்
ஒளியில் விட்டில்


கிளை அமரும் பறவை
மர பாரம் குறைக்கும்
உதிரும் சருகுகள்


வெளிச்சென்றவரை நோக்க
விரைந்து வரும்
வீட்டிற்குள் வெள்ளம்


போர்கால அடிப்படையில் அமைச்சர்
தட்டில் வாரி இறைக்கிறாள்
குடிசையில் தண்ணீரை அம்மா


அன்றே கொல்வான் அரசன்
நின்று கொல்லும் தெய்வம்
தேங்கி கொல்லும் தண்ணீர்


காவலர் யாரும் இல்லை
கைது செய்யப்பட்டு இருக்கிறேன்
சுற்றி நிற்கிறது தண்ணீர்


இரசிக்க மனமில்லை
மழைக்குபின் வானவில்
அழுத்தும் நிலம் விற்றசோகம்


இல்லாத கவலை நிலம்
விற்ற பின் வருகிறது
நல்ல மழை

நினைவு மழை

வீசும் காற்று
அடியோடு சாய்கிறது
அவள் வர மனம்


அடை மழை
பொங்கி வழிகிறது
அவள் நினைவு

பார்வை

வெளிச்சென்று திரும்ப
ஊடருவிப் பார்க்கிறது
பூனையின் கண்கள்

டாஸ்மாக்

வேகமாய் செல்லும் வண்டி
நின்று செல்கிறது
டாஸ்மாக் கடை

கோலம்

புள்ளிகள்
சிறைபடும்
கோலம்

கதை

பள்ளி விட்டு திரும்ப
வழியெல்லாம் கதை சொல்கிறாள்
அம்மாவிற்கு குழந்தை

அமைதி

ஆர்ப்பரித்து வரும் அலை
வெறுமனே திரும்ப உணரும்
அமைதியில் இருக்கு எல்லாம்

காண முடியவில்லை
தேற்றிகொள்ளும் மனம்
இதையும் சேர்த்து பேசுவோம் நாளை...

மேடு பள்ளம்

உருண்டோடும் வாழ்க்கை
விளக்கொளியில் தெரிகிறது
சாலையின் மேடுபள்ளம்

மந்திரம்

மனைவி சொல்லே மந்திரம்
மனம் உருகிச் சொல்கிறான்
சின்ன வீட்டில் வாழ்பவன்

பாரம்

அழுத்தும் குடும்ப பாரம்
கண்ணைப் பறிக்கிறது
ஆற்றில் துள்ளும் மீன்

செவ்வாய், 5 டிசம்பர், 2017

ரீங்காரம்

தாயைப் பிரிந்த துயர்
குரலெழுப்பி உணர்த்துகிறது
பருந்தின்வாய் கோழிகுஞ்சு


தெளிவாய்ச்சொல்ல சொல்ல
மெல்ல உள்நுழையும்
புற்றில் பாம்பு


விளக்கொளியில் பூனை
நடக்க புலியாக்கும்
ஜன்னல் கம்பி நிழல்


உருட்டி விளையாட பந்து
ஓடி மறைகிறது
அந்திச் சூரியன்


நள்ளிரவுப் பொழுது
கேட்ட பாடல்போல ஒலிக்கிறது
சில்வண்டின் ரீங்காரம்

சாலை நாய்

உன் நினைவில் பயணம்
வேகமாய் குறுக்கிடும்
சாலையில் நாய்

விசை

ஒவ்வொரு விசைக்கும்
சமமான எதிர் விசை
தோற்றுப்போனான்
நியூட்டன்
எவ்வளவு சொல்லியும்
பதில் ஏதுமின்றி
கல் போல் நீ...

சுயம்

காணாமல் போகிறது
என் சுயம்
உன்னால்
என்னைப் பார்த்ததும்
எனை விடுத்து
உன்னையே பேசுகிறார்கள்
எல்லாரும்
ச்சீ போடீ ...

பொம்மை

பொம்மைகள் விரும்பும்
குழந்தைகள் போல்
எல்லாருக்கும்
பிடித்திருக்கிறது
என்னை
நான் விரும்பும்
உன்னைத் தவிர
போடி கள்ளி ....

கர்ண பரம்பரை

கர்ணப் பரம்பரை போல்
யார்யாருக்கோ
என்னன்னவோ
கேட்காமலே
வாரித்தருகிறாய்
என் முறைவரும்
வரும் போது மட்டும்
கண்களையும்
காதுகளையும்
மூடிக்கொள்கிறாய்
கள்ளி ...

பரமபதம்

புரியாமல்போனது 
அப்போது எனக்கு 
பரமபதம் பிடித்த
விளையாட்டு என்றபோது
உனக்கு ஏணி
எனக்கு பாம்பு என்று...

மலரினும்

பூக்களால்
அலங்கரித்துக் கொள்கிறாய்
மலரினும் மெல்லியவள்
புகழுரைக்கிறார்கள்
எனக்குத்தானே தெரியும்
பெரிய கல் நெஞ்சக்காரி
நீ என்று...

மனம்

மனசே இல்லாதவன்
சொல்லிச் செல்கிறார்கள்
எப்படி அறிவார்கள் பாவம்
நான்
உன்னைக் காதலித்து
ஏமாந்தவன் ..

உயிர்

இறந்த பின்னர்
உயிர் பெறுகிறது
எழுதி வைத்த கடிதங்கள்

இருள்

கரை வரும் உலகம்
ஒளி குறைய குறைய
மூழ்குகிறது இருளில்


வெளிச்சத்தை விட
அதிகம் தேவைப்படுகிறது
ஒதுங்குவோர்க்கு இருள்


சுடரின் நடுவே
மெலிதாய் புன்னகை
இருள்


சூரியன் நட்சத்திரம் நிலா
எத்தனை எத்தனை
எல்லாம் மறைக்கும் இருள்


பாம்பின் வாய் தேரை
மெல்ல விழுங்குகிறது
ஒளியை இருள்

கொஞ்சம்

கொஞ்சம்
ஈரக் காற்று பட்டாலும்
மூச்சிரைக்குமென்று
காதடைக்கும்
ஆஸ்துமா காரர்கள் போல்
ஒதுங்கிக் கொள்ளும்
நீதான் அன்று
மழையில் நனைய
அடம் பிடிக்கும்
குழந்தைகள் போல்
என்
கவிதைகள் படிக்கத்
துடித்தவள் மறந்து விடாதே

சுத்தம்

ஏழைச் சிறுவன்
சுத்தமாய் துடைக்கிறான்
உணவக மேசை

விளக்கு

காதலர் நெஞ்சாய்
அலைகிறது காற்றில்
அகல் விளக்கு

தொடர்ந்து நடக்கிறது
இருளுக்கு எதிராய்
விளக்கேற்றும் போராட்டம்


நின்று ரசிக்க
மெல்ல நகர்கிறது
வீதியில் தேர்


பார்க்கவே பயம்
கட்டிக் காக்கிறார்
ஊரை ஐயனார்

வாசம்

மீன்கூடை அவள் சுமக்க
ஆளைத் தூக்கும்
மீன் வாசம்

வெள்ளி, 10 நவம்பர், 2017

பூனை

வெளிச் சென்று திரும்ப
ஊடுருவிப் பார்க்கிறது
பூனையின் கண்கள்

கூடு

அரண்மனை வாயில்
காவல் இருக்கிறது
குருவிக் கூடு

வண்டி

வேகமாய் செல்லும் வண்டி
நின்று செல்கிறது
டாஸ்மாக் கடை

திங்கள், 31 ஜூலை, 2017

கைது

இன்னும் கைது செய்யவில்லை
நம்புகிறார்கள் என்னை
அரசை நேசிப்பவன்

துயரம்

எத்தனை துயரம் மனதில்
வாங்கிக்கொள்கிறது
தொட்டி பூச்செடி

அஞ்சலி

அஞ்சலி செலுத்த போட்ட
மாலை செலுத்துகிறது
ஒவ்வொன்றாய் உதிர்ந்து அஞ்சலி

ஓய்வு

விருப்ப ஓய்வுக்குவழியில்லை
அகவை முடிந்தும் வரவில்லை
ஓய்வு கீரைக்காரி பாட்டி
இராம.சுடர்க்கொடி

சித்தாள்

ஜலித்துக் கொண்டிருக்கிறாள்
மேஸ்திரியின் வசவுகளையும்
மணல் ஜலிக்கும் சித்தாள்

பாரம்

சுகமாய் இழுக்கிறான்
அதிக பாரத்தையும்
குடும்ப பார வண்டிக்காரன்

எறும்பு

தேன் உண்ட எறும்புகள்
இளைப்பாற உதவும்
உதிர்ந்த இதழ்கள்









பயணம்

நெடுந்தொலைவு தூரம்
மகிழ்வாய் தொடங்குகிறார்
நடை வண்டி பயணம்

சனி, 17 ஜூன், 2017

குயில் ஓசை

எவ்வளவு இதம்
எல்லாம் மறந்துபோகும்
மழையில் வெயில்

காலம் கலிகாலம்
புல்லாங்குழல் கொண்டு
டிரம்ஸ் வாசிக்கிறான் கண்ணன்

கெட்டிமேளம் கெட்டிமேளம்
ஒலித்த கல்யாணத்தில்
முறிந்தது காதல்

இறை வணக்கக் கூடம்
சீரிய அறிவுரைகள்
கேட்கிறான் குயில் ஓசை


புதன், 14 ஜூன், 2017

கவிக்கோ

சொல்லிவிட்டு செய்
இது என்ன வடிவம்
மூச்சைநிறுத்திபடுத்திருக்கும் கவி

நன்றாய் பார்த்துச் சொல்லுங்கள்
ஆலாபனையை ரசித்திருப்பான்
பித்தன் அவன்

எந்த சிலைக்கு
கண் திறக்க கண்
மூடினான் அவன்

யாரேனும் சொல்லுங்கள்
எழுப்பி அவனைப் பார்க்க
கவிதா ரசிகன் வந்திருக்கிறேன்

கவிக்கோவிற்கு அஞ்சலி

தீ

பற்றி எரியும் தீ
ரொம்பவே பிடிக்கிறது
ஏழையின் குடிசை

மொட்டை மரம்
இலையுதிர் காலம்
ஒன்றுமில்லை வெறுமை

பல்லி

139.          ஏழைச் சிறுமி
ஏக்கத்துடன் பார்க்கும்
பால் நிலா

நீர் கொண்ட மேகம்
மெல்ல நகர்கிறது
 
வனத்திடை களிறு

வானில் மழை மேகம்
அழகாய்த் தெரிகிறது
கருப்பு வெள்ளை ஓவியம்

கதவு இடுக்கில் விரல் நசுங்க
கீழ் விழுந்து துள்ளும்
பல்லியின் வால்


கொளுத்தும் வெயில்
ஒன்றும் கவலை இல்லை
ஏணி ஏறி தொடலாம் சூரியன்

திங்கள், 29 மே, 2017

கட்டு

தாயைக் கண்டு
வேகமாய் வரும் குழந்தை
இழுத்து கட்டு கன்றுக்குட்டி