புதன், 12 அக்டோபர், 2016

கதைப்பு....

நெடுநாளைக்குப்பின்
நிகழ்ந்தது இச்சந்திப்பு
இருவருக்குமிடையில்
பரிமாற்றமானது
சூடான விவாதங்கள்.

அன்றாட நடப்புகள்
கதைப்பில்
அதிகம் இடம்பிடித்தது.

காவிரி கலவரம்
மேலாண் வாரியம்
முதல்வரின் உடல்நிலை என
நடப்புகளை பேசி முடிக்கையில்

கொஞ்சம்
இலக்கியமும் இடைப்பட்டது
தி.ஜா படிச்சிருப்பே
மோக முள் போல்
இன்னைக்கு சொல்லமுடியலே
என்றவரிடம்
என்னை ஈர்த்த
மரப்பசுவும் அம்மா வந்தாளும்
இடம் பிடித்தது.

தி.ஜா வை தம் சிறுகதைக்குள்
பெண்மன ஓட்டத்தை சொல்வதில்
மிஞ்சிவிட்டார்
கு.பா.ரா-என்றதும்
எல்லாம் அவரது
ராங்கி நெனப்பு
கவிதைக்கு பின்னாடி என்றார்.

பெண்கள் எழுத்து
என திசைமாறியபோது
என்னமாய் சொல்லிவிட்டார்
மனிதர் கந்தர்வன்
“ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை”-என்று.

இப்பவும் கவிதைங்க
பிச்சமூர்த்தியின்
காட்டுவாத்துகள்
ஆத்துமணலில் நடந்த
காலடித்தடம் போல
ஒன்னும் புரிய....

இன்றைக்கும்
எத்தனையோ வருது
யாருக்கு சொல்லை
காய்ச்சி வடிக்க வருது
கவிதை என்றார்.

அத்தனையும்
ஒன்றுவிடாமல்
எங்களுக்கிடையே ஆனவைகளைக்
கேட்டு கொதிப்படங்கிக்
கொண்டிருந்தது
இருக்குமிடையில்
மேசை மீதிருந்த
தேநீர் கோப்பைகள் ரெண்டும்.

கருத்துகள் இல்லை: