சனி, 11 ஜனவரி, 2014

எமது கவிதை தொகுப்பிற்கு முல்லைவாசன் ஆய்வுரை

எளியவர்களின் பக்கம் ராமஜெயம்
(பிறிதொரு பொழுதில்-இராமஜெயம் கவிதை தொகுப்பிற்கான முகவுரையாக ஆய்வுரை ) 
கலை நம்மை காணவும் உணரவும் வைக்கிறது. அறிவியல், கருத்தாக்கங்கள் ‘அறிய’ வைக்கிறது. கலை உணர்வு நிலை. அறிவியல் கறாரான அறிவுநிலை. கலையானது முன் விவாதமற்ற முடிவை நாம் காண வைக்கிறது. அறிவியல் என்பது முடிவை நாம் அடையும் விவாதங்களையும், வழிமுறையையும் நமக்குத் தருகிறது. கலைக்கும் – அறிவியலுக்கும் உள்ள நிலை இது. ‘உணர்வினில் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்’ என்பார் பவணந்தி முனிவர்.
புறநிலை யதார்த்தமே கலையின் ஊற்று. யதார்த்தமே அழகு, எனில் கலை படைப்பு அழகானதாக நமக்கு வெளியில் உள்ளதை பிரதிபலிக்க வேண்டும். உலகியலை சொல்வது புறம். வாழ்வியலை சொல்வது அகம் என்பதும் பண்டைய மரபு. யதார்த்தமெனில் அகமும் புறமும் சேர்ந்ததே. பிரதிபலிப்பது என்பது எதை பிரதிபலிப்பது? கண்ணாடி பிரதிபலிக்கும் தன்மையுடையது. காற்றை பிரதிபலிக்குமா? காற்றைப்போல் ஊடுருவிய காலத்தை பிரதிபலிக்கும் படைப்புகள் நமக்குத் தேவை.

போராடும் போதுதான் மனிதன் பிறக்கிறான் என்பார் கார்க்கி. மனிதன் இயற்கையின் எஜமானன்என்பார் ஏங்கெல்ஸ். “அன்பு செலுத்துவதையே சாத்தியமற்ற ஒன்றாக ஆக்கிய ஒடுக்குமுறையை, முடிவுக்குக் கொண்டு வருவதே உண்மையான அன்பை நிலை நாட்டும் வழியாகும்” என்பார் பிரேசில் கல்வியாளர் பாலோ ஃபிரையிரே.
உண்மையான அன்பை, மனித நேயத்தை தனது கலைப்படைப்பில் தூக்கிப் பிடிக்கும் ராமஜெயம் நாடகவியலாளர். வீதி நாடகக் கலைஞர். உடல் மொழியால் பேசுபவர். இப்போது எழுத்து மொழியில் பேசுகிறார். ஒன்றுபட்ட வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட ‘தமுஎச’வோடு நீண்ட நெடிய தொடர்பால் அடையாளப்படும் ராமஜெயம் சில வரவுகளையும் வைத்துள்ளார். வைகறை கோவிந்தன், சுகந்தன் இருவரையும் ‘தமுஎச’வில் பாட வைத்தவர். கனிந்த மனதோடும், கருணை குரலோடும் வலம் வரும் ராமஜெயத்தின் கவிதைகள் முதன் முதலாக தொகுப்பாகி உள்ளது.
கல்லோ சிலையோ
காண்பது எதுவென்றாலும்
கால் தூக்கும் நாய்கள்.
நாய்கள் கவிதையின் தொனி பட்டுத் தெறிக்கும் திசைகள் நம் எல்லாருக்கும் சொந்தமே.
ஆள்தேடி
முகம் பார்த்து
தலை சொரிந்து
 பல் இளித்து
வளைந்து நெளிந்து
குழைந்தே காரியம் நடக்க
அப்புறம் என்ன மயித்துக்கு
சட்டம் சடங்கு
“அதிகாரம் எப்போதும் ஊழல் செய்யும் வரம்பற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல் செய்யும்“ நேருவின் இப் பொன்மொழியை மனம் அசை போடுகிறது.
விடியற்காலை நடைபயிற்சியை
விடாது தொடர்கிறார்
இருத்தலே நமது வாழ்வு. வாழ்வினை நகர்த்தத்தான் எத்தனை பாடு.
அம்மா குழந்தை’ – அற்புதமான கவிதை
மனைவி கவிதை’ – பெண்ணின் உலகை சுருக்கி அடுப்பறையில் மாட்டி இருக்கும் ஆணாதிக்கத்தை தோல் உரிக்கிறார்.
ஆன்டனா வழியே
எல்லாம் வருதாம்
ஊர் ஊருக்கு இதே பேச்சு
அப்படின்னா
கொஞ்சம் அரிசி பருப்பு
புளி மிளகாய்
எண்ணெய் தண்ணி உப்பு கூட வருமா?
சாமான்ய மக்களின் வாழ்வை ‘ஆன்டனாவில்’  பதிவு
 செய்கிறார். எளியவர்களின் பக்கம் தன்னை நிறுத்திக்கொள்ளும் ராமஜெயம் எளியவர்களை உயர்த்தும், மேடு பள்ளங்களை தகர்க்கும் கடப் பாறையாய் தனது எழுதுகோலை தொடர…
அன்பான தோழமையும், வாழ்த்தும்.

தோழமையுடன்
முல்லைவாசன்
44. ஜி.எஸ்.மடம் தெரு,
பிச்சனூர். குடியாத்தம்.
வேலூர் மாவட்டம்.
கைபேசி: 9486390973

1 கருத்து:

அன்பு நிலையம் சொன்னது…

கவிதைகள் நன்றாக இருக்கிறது... படைப்பும் சிறப்பாக அமைந்துள்ளது...
பல கவிதைகள் படைத்து புகழ்பெற வாழ்த்துகள்... பாராட்டுகள்