வியாழன், 22 மார்ச், 2012

தமிழ்நாடு + இந்தியா = டாஸ்மாக்


எங்க தேசம்
பாரத தேசம்
மன்னிகவும்
தண்ணி தேசம்

மழையோ மதுவோ
தண்ணியில் கிடப்பதே
தவமென நினைப்பு

எல்லாம் கேடு
என்றபோதும்
அரசாங்கம் விற்றால்
நல்ல சரக்கு
அடுத்தவன் விற்றால்
கள்ளச் சரக்கு.

மக்கள் போடும்
பட்டையில்தான்
மக்கள் நல திட்டங்களே

இவன் பட்டை போடவில்லையெனில்
சர்க்கார் போடும்
மக்களுக்கு நெற்றியில்
பட்டை பெரிதாய்.

மக்களின் வயிறுமட்டுமல்ல
கஜானா வயிறே
தண்ணியில்தான் நிரம்புகிறது.

தண்ணியில் கிடப்போம்
தண்ணியில் மிதப்போம்
தண்ணியே சகலமும்
இன்பம் துன்பம்
இணைந்த ஒன்று.

செத்தாலும்
ஜல சமாதியே
மோட்சம் என்போம்.

கோடிகளும்
கேடிகளும்
சங்கமமாகும்
சமுத்திர வெளியிது.

விற்றாலும் சாதனை
செத்தாலும் சாதனை
தண்ணியில் நடக்கிறது.

எப்போது
நூறடிப்பான்
தெண்டுல்கர் என்ற ஏக்கம்
இதில்லை
எப்பொழுதும்
நூறுகளைத் தாண்டியே
குடிமகன்கள்

ஆடுவது
அவர்கள் மட்டுமல்ல
இவர்களும்
ஆட்டத்தை கொண்டாடுவதெனில்
கொண்டாடுங்கள்
இவர்களையும்.

சொல்லப்போனால்
அவர்கள் மறைக்கலாம்
வரிகட்ட வரு மானத்தை
இவர்கள் மறைப்பதேயில்லை
வேட்டி கட்டி மானத்தைக்கூட.

எங்க தேசம்
தண்ணி தேசம்
மன்னிக்கவும்
பாரத தேசம்.

(ஒரு நாள் விற்பனை 154 கோடி என்ற சாதனை செய்தி எதிரொலி)

கருத்துகள் இல்லை: