வியாழன், 22 மார்ச், 2012

நாய்கள்


நாய்கள்
சற்றே கவனமாய் இருங்கள்
இங்கு நாய்களின்
தொல்லை அதிகம்
நாய்கள் ஜாக்கிரதை
பலகைகள் இருக்குமிடம்
இல்லா இடம்
எங்கும் தொல்லை
நாய்களால்.
கனிவாய்
வாலாட்டும் சிலநேரம்
வளைந்து குழைந்து
முகம் நக்கும் சிலநேரம்
சலாம் சொல்லி
கால் தூக்கி
கடமை பாவணை சிலநேரம்
மூர்க்கமாய்
குரைத்துப் பிடுங்கும்
சிலநேரம்
இந்த நாய்களே இப்படித்தான்.
புணர்ச்சி வேண்டின்
தெருத் தெருவாய்
அலைந்து திரியும்
வேண்டாப் புணர்ச்சியாயின்
அடுத்ததன் புணர்ச்சியையும்
கெடுக்கும்
இந்த நாய்களே இப்படித்தான்
தெரு நாய்
சொறி நாய்
வெறி நாய்
அல்சேசன் பொமெரியன்
இன்னும் இத்தியாதிகள்
எத்தனை வகைகள்
இந்த நாய்களில்.
தின்றதைக் கக்கி
தின்னும் நாய்கள்
நிறைந்தே இருப்பினும்
நக்கிக் கிடக்கும் நாய்கள்
கல்லோ சிலையோ
காண்பது எதுவென்றாலும்
கால் தூக்கும் நாய்கள்
இந்த நாய்களே இப்படித்தான்.
கிடைத்தால்
நடிகை மடி
கிடைக்காவிட்டால்
கந்தல் துணி கடி
இருந்தால்
பால் சோறு
இல்லா விட்டால்
பானை ஓடு
எல்லாம் ஒன்றுதான்
இந்த நாய்களுக்கு.
எல்லாம் சரி
எப்போது குழையும்
எப்போது குரைக்கும்
எப்போது புணரும்
எதுவும் புரிவதில்லை
இந்த நாய்களே இப்படித்தான்.

கருத்துகள் இல்லை: